மேலும்

சிறிலங்காவில் தீவிரமடையும் இந்திய- சிறிலங்கா மூலோபாயப் போட்டி

சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி, துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பிலிருந்து, எரிசக்தித் துறைக்கு நகர்ந்து, மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.

ஒரு காலத்தில் துறைமுகங்கள் போன்ற சொத்துக்களை உருவாக்குவது பற்றியதாக இருந்த போட்டி, இப்போது எரிபொருள் விநியோகச் சங்கிலிகள், சேமிப்பு அமைப்புகள் மற்றும் சுத்திகரிப்புத் திறன் ஆகியவற்றிற்கான போட்டியாக மாறியுள்ளது.

ஒரு நாட்டிற்குள் எரிசக்தி எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என்பதை இவை பாதிப்பதால், இந்தத் துறைகள் ஆழமான மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

சிறிலங்காவின் எரிபொருள் விநியோகச் சந்தையில் சீனாவின் அண்மைய நுழைவும், அதன் நீண்டகால சுத்திகரிப்புத் திட்டங்களும், அது உட்கட்டமைப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, திருகோணமலையை மையமாகக் கொண்டும், முன்மொழியப்பட்ட எல்லை தாண்டிய எண்ணெய்க் குழாய்த்திட்டத்தின் அடிப்படையிலும், சிறிலங்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒரு முத்தரப்பு எரிசக்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்துகிறது.

அண்மைய பயணத்தின் போது, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவும், எண்ணெய்க் குழாய் மூலம் இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கும் திட்டம்குறித்து கலந்துரையாடினர்

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

“இந்தியத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சில முன்னெடுப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட சில முன்மொழிவுகளில், திருகோணமலையில் எரிசக்தி கேந்திரம் அமைப்பது தொடர்பான திட்டமும், இந்தியாவையும் சிறிலங்காவையும் எண்ணெய் குழாய் மூலம் இணைக்கும் முன்மொழிவும் குறிப்பிடத்தக்கவை.

உண்மையில், மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலையால் உருவான எரிசக்தி நெருக்கடியின் விளைவுகளை, ஒட்டுமொத்த உலகமும், குறிப்பாக இந்தப் பிராந்தியமும் எதிர்கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில், இத்தகைய எரிசக்தி இணைப்பின் மதிப்பு வலியுறுத்தப்பட்டது,” என்று, சி.பி.ராதாகிருஷ்ணனின் பயணத்தின் முதல் நாள் சந்திப்புகளுக்குப் பின்னர் கொழும்பில் செய்தியாளர்களிடம் மிஸ்ரி கூறினார்.

சிறிலங்காவின் எரிசக்தித்துறையில் சீனாவின் பங்கு இரண்டு தெளிவான கட்டங்களாக வளர்ந்துள்ளது.

முதல் கட்டத்தில், உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. சீன நிதியுதவி மற்றும் ஆதரவுடன் கட்டப்பட்ட லக்விஜய நிலக்கரி மின் நிலையம் இதற்கு ஒரு முக்கிய உதாரணமாகும்.

இது சிறிலங்காவின் மின்சார விநியோகத்தில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி, நாட்டின் மின்சாரத்துறையில் சீனாவுக்கு ஒரு நீடித்த இருப்பை அளிக்கிறது.

சீனாவின் மூலோபாயத்தின் இரண்டாம் கட்டம் இப்போது வடிவம் பெற்று வருகிறது, இது மேலும் அதிக மூலோபாயத்தன்மை வாய்ந்தாக உள்ளது. சீனா, எரிசக்தியின் கீழ்நிலைச் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.

சினோபெக் தலைமையிலான, அம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்ட சுத்திகரிப்பு ஆலைத்திட்டம் தாமதங்களைச் சந்தித்த போதிலும், சிறிலங்காவை ஒரு பிராந்திய சுத்திகரிப்பு மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மிக முக்கியமாக, சினோபெக் சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி மற்றும் சில்லறை விற்பனை சந்தையில் நுழைந்துள்ளது. இது, எரிபொருள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டு, தினசரி நுகரப்படுகிறது என்பதில் செல்வாக்கு செலுத்த சீனாவிற்கு வழிவகுக்கிறது.

சினோபெக் தனது சில்லறை விற்பனை இருப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் அதேவேளையில், விரைவில் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளைத் தொடங்கும் என்று சிறிலங்கா எதிர்பார்க்கிறது.

சுத்திகரிப்பு மற்றும் சில்லறை விற்பனைச் செயற்பாடுகளை இணைப்பதன் மூலம், சீனா முழு எரிசக்தி மதிப்புச் சங்கிலியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

இந்த அணுகுமுறை, எந்தவொரு தனிப்பட்ட திட்டத்தின் மீதான அதன் சார்புநிலையையும் குறைக்கிறது.

உட்கட்டமைப்பை உருவாக்குவதில் தாமதங்கள் ஏற்பட்டாலும், எரிபொருள் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடு, தொடர்ச்சியான செல்வாக்கை உறுதி செய்கிறது.

சிறிலங்காவின் எரிசக்தித் துறையில் இந்தியாவின் இருப்பு அவ்வளவாகத் தெரியவில்லை, ஆனால் அது அன்றாடச் செயற்பாடுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

ஐஓசி அதன் துணை நிறுவனமான லங்கா ஐஓசி மூலம், இந்தியா ஏற்கனவே எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் சில்லறை விற்பனையில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா எரிபொருள் விநியோகம் மற்றும் நிதி ஆதரவுடன் தலையிட்டபோது, இந்த வலையமைப்பு குறிப்பாக முக்கியத்துவம் பெற்றது.

பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் சீனாவின் கவனம் போலல்லாமல், இந்தியாவின் மூலோபாயம் விநியோகச் சங்கிலிகளை அடிப்படையாகக் கொண்டது.

இது எரிபொருளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.  இது, குறிப்பாக நெருக்கடி காலங்களில், உடனடி சார்புநிலையை உருவாக்குகிறது.

உலகளாவிய எரிசக்தி இடையூறுகளின் போது இந்தியா இந்த சாதகத்தை திறம்பட பயன்படுத்தியுள்ளது.

முன்மொழியப்பட்ட குழாய்வழித் திட்டம் இந்த அணுகுமுறையின் இயல்பான நீட்சியாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் பரந்த திட்டத்திற்கு திருகோணமலைத் திட்டம்,  மையமாக உள்ளது.

இது இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட பழைய எண்ணெய் சேமிப்புக் தாங்கிகளை மீண்டும் அபிவிருத்தி செய்வதை  விட மேலானது.

சேமிப்பு, சாத்தியமான சுத்திகரிப்பு வசதிகள் மற்றும் பிராந்திய விநியோக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான எரிசக்தி கேந்திரத்தை உருவாக்குவதே இதன் இலக்காகும்.

இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம், ஐக்கிய அரபு எமிரேட்சின்  ஈடுபாடு ஆகும். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்சும் திருகோணமலை கேந்திரத்தை கூட்டாக உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இதில் பலவகை எரிபொருள் குழாய்வழி, எரிபொருள் நிரப்பும் வசதிகள் மற்றும் எதிர்காலத்தில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் கூட இடம்பெறலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் பங்களிப்பு நிதி வலிமை, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

இது திட்டத்தின் தன்மையை ஒரு எளிய இருதரப்பு முயற்சியில் இருந்து ஒரு பரந்த புவிசார் அரசியல் கூட்டாண்மையாக மாற்றுகிறது. திருகோணமலையின் அமைவிடம் அதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது.

சிறிலங்காவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இது, முக்கிய அனைத்துலக கப்பல் போக்குவரத்து வழித்தடங்களுக்கு அருகில் இருப்பதுடன், இந்தப் பகுதியின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றையும் கொண்டுள்ளது.

இது, சிறிலங்கா மற்றும் அருகிலுள்ள சந்தைகளுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு எரிசக்தி கேந்திரத்திற்கு உகந்த இடமாக அமைகிறது.

இரு நாடுகளையும் இணைக்க முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய் குழாய்  திட்டமே, இந்தியாவின் மூலோபாயத்தில் மிக முக்கியமான பகுதியாகும்.

இந்தத் திட்டம் 2023 முதல் விவாதத்தில் இருந்து, இந்தியா, சிறிலங்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட முத்தரப்பு உடன்பாட்டின் மூலம் 2025இல் முறைப்படுத்தப்பட்டது.

இது விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நிலையில், அண்மைய பேச்சுவார்த்தைகளின் போது இது மீண்டும் ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.

இந்தக் குழாய்வழி, இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்குப் பல வகையான எரிபொருள்களைக் கொண்டு செல்வதோடு, திருகோணமலை சேமிப்புக் கிடங்குகளுடன் நேரடியாக இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிறிலங்காவின் எரிசக்தி அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

தற்போது, அந்தநாடு கடல் வழியாகக் கொண்டு வரப்படும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயை முழுமையாகச் சார்ந்துள்ளது.

இது உலகளாவிய இடையூறுகளால் நாட்டை எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக ஆக்குகிறது.

ஒரு நேரடிக் குழாய்வழி இந்த அபாயத்தைக் குறைத்து, சீரான விநியோகத்தை உறுதி செய்யும்.

மேலும், நெருக்கடி காலங்களில் ஒரு மாற்று வழங்குநராக மட்டும் இல்லாமல், ஒரு நீண்டகால எரிசக்திப் பங்காளராக இந்தியாவின் நிலையை இது வலுப்படுத்தும்.

விநியோகம், சேமிப்பு மற்றும் பங்கீடு ஆகியவற்றை இணைப்பதன் மூலம், சிறிலங்காவுக்குள் ஒரு முழுமையான எரிசக்தி வலையமைப்பை உருவாக்குவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் துறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி தற்போது இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகளைப் பிரதிபலிக்கிறது.

சீனா, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற சொத்துக்களை உருவாக்குவதிலும், பின்னர் பங்கீட்டுத் துறைக்கு விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

இது இந்த அமைப்பில் நீண்டகாலப் பங்குகளை உருவாக்குகிறது.

மறுபுறம், இந்தியா, விநியோகப் பாதைகள், சேமிப்பு மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றை இணைக்கும் வலையமைப்புகளை உருவாக்கி வருகிறது.  திருகோணமலை கேந்திரமும் குழாய்வழியும் இந்த மூலோபாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சீனாவின் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையம் பதப்படுத்தும் திறனில் கவனம் செலுத்தும் அதேவேளையில், இந்தியாவின் குழாய்வழி விநியோகப் பாதைகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

சிறிலங்கா ஒரு தரப்பைத் தேர்ந்தெடுக்காமல், இந்தப் போட்டியைத் தீவிரமாக நிர்வகித்து வருகிறது.

சினோபெக் நிறுவனத்தைத் தனது எரிபொருள் சந்தையில் நுழைய அனுமதிப்பதன் மூலமும், அதேநேரத்தில் திருகோணமலைத் திட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், அது தனது கூட்டாண்மைகளைச் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது.

இந்த அணுகுமுறை, ஒரு கூட்டாளியை அதிகமாகச் சார்ந்திருக்காமல், நாடு முதலீட்டைப் பெறவும் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இருப்பினும், அத்தகைய சமநிலையைப் பேணுவது எளிதல்ல.

எரிசக்தித் திட்டங்கள் பெரும்பாலும் நீண்டகாலச் சார்புநிலைகளை உருவாக்குகின்றன, அவை மூலோபாய முடிவுகளைப் பாதிக்கக் கூடும்.

திருகோணமலை கேந்திரம் மற்றும் இந்தியா-சிறிலங்கா குழாய்வழித் திட்டம் ஆகியவற்றின் மீதான அதிகரித்து வரும் கவனம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்து வருவதைக் காட்டுகிறது.

இது இனி தனிப்பட்ட திட்டங்களுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை, மாறாக இப்போது சிறிலங்காவின் ஒட்டுமொத்த எரிசக்தி அமைப்பை வடிவமைப்பதாக மாறியுள்ளது.

சீனா உள்கட்டமைப்பு மற்றும் விநியோகம் முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது, அதேநேரத்தில் ஐக்கிய அரபு  எமிரேட்சின் ஆதரவுடன் இந்தியா ஒருங்கிணைந்த விநியோக வலைப்பின்னல்களைக் கட்டமைத்து வருகிறது.

இந்தப் போட்டியின் விளைவு சிறிலங்காவை மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையையும் பாதிக்கும்.  ஏனென்றால், எரிசக்தி ஓட்டங்கள் மீதான கட்டுப்பாடு, மூலோபாய செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வழிமூலம் – The Economic Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *