தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேசியது என்ன?- இந்திய தரப்பின் விளக்கம்
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பிற்பகல் கொழும்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில், சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் தமிழ் தேசிய பேரவை சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக நேற்றுமாலை கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிர்சியிடம், இந்திய ஊடகவியலாளர் பரூக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்,
“சிறிலங்கா தமிழ் கட்சித் தலைவர்களுடன், நீங்கள் கற்பனை செய்வது போலவே, பெரும்பாலான கவனம் பின்வரும் விடயங்களில் இருந்தது:
மோதலுக்குப் பிந்தைய பிரச்சினைகளுக்கான தீர்வு ,சிறிலங்காவில் நீண்டகால மோதலால் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்கள், நிலங்கள் போன்றவற்றின் மீதான உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பான பிரச்சினைகள், அதிகாரப்பகிர்வு, மாகாணசபைத் தேர்தல்கள் போன்ற விடயங்களில் முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள், – இவை அரசாங்கத்தின் சொந்த கொள்கை அறிக்கையிலோ அல்லது ஆளும் கட்சியின் கொள்கை அறிக்கையிலோ தாங்கள் கருத்தில் கொள்ளும் விடயங்களாக இடம்பெற்றிருந்தன அல்லது அதன் ஒரு பகுதியாக இருந்தன என்று – பல தலைவர்களால் குறிப்பிடப்பட்டது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. அவ்வளவுதான்.“ என்று தெரிவித்துள்ளார்.

