சுரேஷ் சாலே கைதுக்கு எதிரான மனுவை 6 மாதங்களுக்குப் பின் விசாரிக்க முடிவு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, 6 மாதங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டது மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் அதிகாரி சாந்த ஜெயதிலக இந்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முன்கூட்டியே ஒரு நாளைத் தீர்மானிக்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன, மற்றும் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, இந்த மனுவை செப்ரெம்பர் 25 ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.
இந்த மனுவில், பாதுகாப்பு அமைச்சர், சட்டமா அதிபர் மற்றும் பலர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
