மேலும்

கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை கருத்துக்களால் தமிழ்க் கட்சிகள் தோல்வி- சுமந்திரன் சர்ச்சை கருத்து

சிறிலங்காவை ஆளும் மார்க்சியக் கட்சி, நாட்டை ஒருகட்சி அரசை நோக்கி வழிநடத்தும் அபாயம் உள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

இந்திய சட்டவாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில்,  இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் குழுவில் இடம்பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன், இந்தப் பயணத்தின் போது இந்திய ஊடகவியலாளர் எம்.ஆர்.நாராயணசாமிக்கு அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் பெரும்பான்மை கொண்ட வடக்கில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே ஒரு இணை அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

அதிபர் அனுரகுமார திசாநாயக்க யதார்த்தவாதியாக இருந்தாலும், அரசியல் சகவாழ்வை எதிர்க்கும் “கடும்போக்காளர்கள்” என்று அவர் வர்ணித்த நபர்களால் அவர் சூழப்பட்டுள்ளார்.

தமிழர்களுக்கு மட்டுமல்ல, நாடும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து, ஜேவிபி ஒருகட்சி அரசை நோக்கி நகர்வதுதான். இது மிகவும் தீவிரமான ஒரு நிலைமை.

அரசின் வறுமை ஒழிப்புத் திட்டமான ‘பிரஜா சக்தி’, தற்போதுள்ள நிறுவனங்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளையும் புறக்கணித்து, தங்களுக்குச் சாதகமான பிரதிநிதிகள் மூலம் அடிமட்ட அளவில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழர்கள்  பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தொழில்முறை குழுக்கள், சட்டவாளர்கள் மற்றும் சமூக அமைப்பாளர்கள்,  இதன் செல்வாக்கிற்கோ அல்லது மேற்பார்வைக்கோ உட்படாத வகையில், ஜேவிபி தடுத்து வருகிறது.

பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படாத வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை அபகரிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாகச் செயற்பட அரசு நியமித்துள்ளது.

கட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அது இப்போது “அரசு அதிகாரத்தை” நாடுவதாக ஜேவிபியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தை விமர்சகர்கள், ஏகபோக அரசியல் கட்டுப்பாட்டிற்கான அதன் பேராவலைக் குறிப்பதாகப் புரிந்து கொள்கின்றனர்.

நாங்களும் (தமிழர்களும்) சோசலிசத்தை ஆதரிக்கிறோம். ஆனால், நாங்கள் ஒரு கட்சி ஆட்சியை ஆதரிக்கவில்லை.

தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள, வடக்கில் ஜேவிபியின் தேர்தல் வெற்றி, பாரம்பரிய தமிழ் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பைப் பிரதிபலிக்கிறது.

வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டால், தமிழ் அரசுக் கட்சி மீண்டும் ஆதிக்கம் செலுத்தும்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் பின்னடைவை ஏற்படுத்திய பின்னர், உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் வாக்காளர்கள் மீண்டும் தமிழ் கட்சிகளை நோக்கி கணிசமாகத் திரும்பியுள்ளனர்.

மாகாணத் தேர்தல்களுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தை அமைப்பது குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

எனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நான் விரும்புகிறேன். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.

அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பிக்குள் உள்ள ஒரு குறிப்பிட்ட குழுவினருடன்,  கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நட்பைப் பேணி வருகிறேன். இருப்பினும் அந்த உறவு தற்போது வலுவிழந்து வருகிறது.

அனுரகுமார திசாநாயக்க திறந்த மனதுடன் இருப்பதோடு, நிறுவப்பட்ட நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்யத் தயாராகவும் இருக்கிறார், ஆனால் அவரது கட்சிக்குள் உள்ள தீவிரவாதிகள், குறிப்பாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், மற்ற அரசியல் சக்திகளுடன் ஈடுபடத் தயங்குகிறார்கள்.

நீதி அமைச்சராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு,  அனுரகுமார திசாநாயக்க அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னரே வழங்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கவை ஆதரிக்க வேண்டாம் என்ற கட்சியின் முடிவின் காரணமாக அதை ஏற்க முடியவில்லை.

அந்த முடிவு அனுரகுமார திசாநாயக்கவைக் கோபப்படுத்தியது. அப்போது அவர், நான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன். நான் தோற்றால், அது உங்களால் தான்” என்று கூறினார்.

அதிபருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். கேட்டுக் கொண்டால்,  புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளேன்.

ஆனால் நாங்கள் ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்கிறோம். அதை அவரே கூறியிருக்கிறார்.

இந்தப் பிளவுக்கு, ஜேவிபி மற்றும் இலங்கைத் தமிழ்  அரசுக் கட்சி  உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளிடையே, தமிழ் பிரச்சினை குறித்த அடிப்படை வேறுபாடுகளும்,  காரணமாக உள்ளது.

இதன் காரணமாக, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது போல் காட்டிக்கொள்வது கடினமாக உள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் அவர்களின் முதன்மை அரசியல் எதிரிகளாகவும் இருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிலான ஆயுதப் போராட்டம் வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் பொருத்தமானதாக இருந்திருக்கலாம்.

ஆனாலும். நான் தொடர்ந்து வன்முறையை எதிர்த்து வருகிறேன்., பெரும்பான்மை சிங்கள சமூகத்தை உள்ளடக்கிய ஒரு அரசியல் அணுகுமுறையை ஆதரிக்கிறேன்.

தமிழ் அரசியல் தலைமையின் சில பிரிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் கடுமையான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

இப்போது ஒரு தனியரசு சாத்தியமா? அப்படியென்றால், அதை உணர்த்தும் சொல்லாடல்களை ஏன் பயன்படுத்த வேண்டும்? அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சிங்கள மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும், மேலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை வலுப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ்த்தலைமைக்குள் இருக்கும் சில பிரிவுகள், விடுதலைப் புலிகளுடன் இணைந்த மேற்கத்திய தமிழ் புலம்பெயர் சமூகத்தின் சில பிரிவுகளின் ஆதரவுடன், கூட்டாட்சி மற்றும் சுயநிர்ணயம் போன்ற கோட்பாடுகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.

இந்தக் கருத்துகள் சிங்கள மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகங்கள் இரண்டாலும் விரும்பத்தகாதவையாகக் கருதப்படுகின்றன.

இத்தகைய சொல்லாடல்கள், தமிழ் வாக்காளர்கள் பாரம்பரிய தமிழ் கட்சிகளிடமிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, 2025 நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை ஆதரிக்க வழிவகுத்துள்ளன.

இது, பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட அந்தக் கட்சி யாழ்ப்பாணத்திலும் வடக்கின் பிற பகுதிகளிலும் காலூன்ற வழிவகுத்துள்ளது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *