நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் வன்முறை- 26 பேர் பலி, 100 பேர் காயம்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை முதல் இடம்பெற்ற பாரிய வன்முறைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மதியம் 1 மணியளவில், விளக்கமறியல் கைதிகளுக்கும், தண்டனைக் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்தனர்.
நேற்று நள்ளிரவில் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறைகள் வெடித்தன.
கைதிகள் சிறைச்சாலை வளாகத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினரை உள்ளே வர விடாமல் தாக்குதல்களை நடத்தினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறிலங்கா காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் குறைந்தது 6 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் கொல்லப்பட்டதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த பலர் இன்னமும் சிறைச்சாலைக்குள்ளேயே சிக்கியிருப்பதாகவும், இதனால் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை அடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் மேலதிகமாக சிறிலங்கா இராணுவத்தினர், விமானப்படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1800 வரையான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் ஆயிரக்கணக்கான உறவினர்கள் கூடியுள்ளனர்.



