26 பேர் பலியான சிறைக்கலவரத்துக்கு பொறுப்பேற்கிறார் சிறிலங்கா நீதி அமைச்சர்
கைதிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழக்கக் காரணமான நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனது அதிகார வரம்பிற்குட்பட்ட சிறைச்சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே இந்த நிலைமைக்கு நான் பொறுப்பேற்க வேண்டும்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறை நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி, இந்தச் சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்று, அமைதியின்மையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
