சிறிலங்கா உள்நாட்டுப் போரில் இஸ்ரேலின் பங்கை விபரிக்கும் ஆவணங்கள்
சிறிலங்கா 1970இல், அரபு நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் துண்டித்தது. ஆயினும், கொடூரமான உள்நாட்டுப் போர் வெடித்த சுமார் ஓராண்டிற்குப் பிறகு, 1984இல் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு திறக்கப்பட்டது.
1980-களின் நடுப்பகுதியில் சிறிலங்காவுடனான உறவுகள் குறித்து, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சினால் உருவாக்கப்பட்ட கோப்புகள் – அண்மையில் இஸ்ரேலிய அரச ஆவணக் காப்பகத்தில் பகுதியளவு பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளன – இது பல ஆண்டுகளாகப் நாளிதழ்களில் வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்துவதோடு, புதிய விவரங்களையும் வெளிப்படுத்துகின்றன.
1987 டிசம்பர் 11 ஆம் நாள், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சினால், தயாரிக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, “தமிழ் பயங்கரவாதப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இஸ்ரேல் உதவ வேண்டும் என விரும்பியதால், சிறிலங்கா 1984இல் இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவை நிறுவுவதற்கு ஒப்புக்கொண்டது.
1988-க்குள், இஸ்ரேல் அந்த நாட்டிற்கு 30 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்பனை செய்திருந்தது.
1985 டிசம்பர் 8 அன்று அனுப்பப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், வெளியுறவு அமைச்சின் ஆசியப் பிரிவு இயக்குனர், இஸ்ரேல் சிறிலங்காவுக்கு ஆறு டோறா வகை அதிவேக ரோந்துப் படகுகளை 10 மில்லியன் டொலருக்கு விற்றதாக எழுதியிருந்தார்.
1986 ஜூன் 20 நாளிடப்பட்ட மற்றொரு தந்திச் செய்தியில், கொழும்பில் உள்ள இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவின் தலைவர் ஹைம் டிவோன் (Haim Divon), இஸ்ரேல் மினி-யூசி (Mini-Uzi) உப இயந்திரத் துப்பாக்கிகளையும் “கணிசமான தொகைகளுக்கு” விற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1987 ஜூன் 15 ஆம் நாளிடப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், இஸ்ரேல் சிறிலங்காவுக்கு மின்னணு வேலிகள், தகவல்தொடர்பு கருவிகள், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களையும் விற்றதாக டிவோன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தனவின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களுக்கு, இஸ்ரேல் பயிற்சி அளித்தது.
1986 ஓகஸ்ட் 18, அன்று அனுப்பப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், டிவோன் இவ்வாறு எழுதினார்:
“கடந்த வாரம், அதிபரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சுமார் 30 உறுப்பினர்களுக்கு நாங்கள் ஒரு துப்பாக்கிச் சுடும் பயிற்சி வகுப்பை நடத்தினோம்.”
அந்தப் பயிற்சி நான்கு நாட்கள் நீடித்ததாகவும், அது பாராட்டைப் பெற்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவப் படைகளுக்கு இஸ்ரேல் எவ்வாறு பயிற்சி அளித்தது?
இஸ்ரேல், சிறிலங்கா இராணுவப் படைகளுக்கும் பயிற்சி அளித்தது. 1987, ஜனவரி 23 ஆம் நாளிடப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், இஸ்ரேலிய இராணுவப் பயிற்றுவிப்பாளர்கள் பகிரங்கமாக “விவசாய ஆலோசகர்களாக” அறிமுகப்படுத்தப்பட்டதாக டிவோன் தெரிவித்திருந்தார்.
அதேநாளில் அனுப்பப்பட்ட மற்றொரு தந்திச் செய்தியில், “தமிழர்கள் யாழ்ப்பாணப் பகுதியைச் சவாலின்றி கட்டுப்படுத்துகின்றனர்” என்றும், இஸ்ரேலியப் பயிற்சிக் குழுவின் தளபதியின் கூற்றுப்படி, “ஒரு விரைவான தாக்குதலின் மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு” அந்தப் பயிற்சி தங்களைத் தயார்படுத்தும் என்று அரச படைகள் நம்பியதாகவும், பயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் கேள்விகள் அத்தகைய தாக்குதலில் ஏற்படக் கூடிய சிக்கல்களை மையமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
1987, பெப்ரவரி 15 அன்று அனுப்பப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், தமிழ் நிலத்தடி (underground) நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்புத் தயாரிப்புகளில் உதவி கோரி சிறிலங்கா விடுத்த அவசரக் கோரிக்கைக்கு” இஸ்ரேல் சாதகமாகப் பதிலளித்துள்ளது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸிடம் (George Shultz) தெரிவிக்குமாறு, பிரதமர் இட்சாக் ஷமிரின் (Yitzhak Shamir) அரசியல் ஆலோசகரான ஆர்யே மெக்கெல் (Aryeh Mekel) பரிந்துரைத்துள்ளார்.
அந்த உதவியில் “அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதும், 3 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அவசரமாக அனுப்புவதும்” அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
1987, மார்ச் 18 அன்று, சிறிலங்காவின் நிதி அமைச்சரைச் சந்தித்ததாக, டிவோன் தெரிவித்துள்ளார்.
“வடக்கில் நடந்த சண்டையின் போக்கை மாற்றுவதற்கு வெறும் ஐந்து இஸ்ரேலியப் பயிற்றுவிப்பாளர்களே போதுமானதாக இருந்தனர்” என்று அவரிடம் தான் மிகைப்படுத்திக் கூறியதாக டிவோன் அந்தத் தந்திச் செய்தியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
“யாரிடமிருந்தும் – ஏன், பிசாசிடமிருந்தும் கூட” உதவி பெறுவதில் மகிழ்ச்சி அடைவேன் என்று அமைச்சர் பதிலளித்தார்.
“நாங்கள் பிசாசாக இருக்கமாட்டோம் என்று நம்புகிறேன்” என்று டிவோன் பதிலளித்தார், அதற்கு அமைச்சர் “சாதாரணமாகப் புன்னகைத்தார்.”
இஸ்ரேலிய இராணுவப் பயிற்றுவிப்பாளர்களின் இருப்பு குறித்த தகவல் சிறிலங்கா ஊடகங்களுக்குக் கசிந்த பின்னர், இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவைச் சேர்ந்த தூதுவர் இலான் பெலெக் (Ilan Peleg) 1987 டிசம்பர் 7, அன்று அனுப்பிய ஒரு தந்திச் செய்தியில்,
“அரசாங்க எதிர்ப்பு ஜேவிபி கிளர்ச்சியாளர்களுக்கு, அந்தப் பயிற்சி உண்மையில் அவர்களின் நன்மைக்காகவே நடத்தப்பட்டது என்பதை நாங்கள் விளக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் உதவுவதற்காக மட்டுமே, அந்தப் பயிற்சி நடத்தப்படவில்லை என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் அறிந்திருந்தனர் என்பதை இந்தக் கருத்து உணர்த்துகிறது.
வன்முறைகளுக்குப் பெயர்போன ஒரு சிறப்பு காவல் பிரிவின் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் இஸ்ரேல் உதவியது.
1987 மார்ச் 18ஆம் நாளிடப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதுவர், உள்ளூர் இராணுவத்துடன் இஸ்ரேல் உறவுகளைப் பேணுவதற்கு ஒப்புதல் அளித்ததாக டிவோன் தெரிவித்துள்ளார்.
ஆனால், “சிறப்பு அதிரடிப்படை (STF) நடத்தியுள்ள கொடூரமான படுகொலைகளைக்” கருத்தில் கொண்டு, அதற்கு வழங்கப்படும் உதவியானது “குறுகிய காலத்தில் ஒரு சந்தேகத்திற்குரிய முதலீடு மற்றும் நீண்டகாலத்தில் ஒரு பெரும் தவறு” என்று அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் அதிபரும் அவரது மகனும் அரசியல் களத்திலிருந்து விலகினால், “அந்தப் படை கலைக்கப்படும், மேலும் அதனுடன் தொடர்புடைய எவரும் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பார்கள்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையையும் மீறி, 1987 ஓகஸ்ட் 19 அன்று, இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவின் தூதுவர் இலான் பெலெக் அனுப்பிய ஒரு தந்திச் செய்தியில், அதிபர் மீதான படுகொலை முயற்சிக்குப் பின்னர், “சிறப்பு அதிரடிப் படையிலிருந்து முற்றிலும் புதிய ஒரு முக்கியப் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவை உடனடியாக நிறுவ” அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், “அந்தப் பிரிவுக்குப் பயிற்சி அளிக்க நான்கு வாரங்களுக்கு மூன்று பேர் கொண்ட இஸ்ரேலியக் குழுவை” அனுப்ப இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தனி தந்திச் செய்திகளில், STF என்பது ஒரு “உயர்மட்டப் பிரிவு” என்றும், அதன் “செயல்போக்கை தீர்மானிப்பவர் அதிபரின் மகன் என்றும் டிவோன் விளக்கியுள்ளார். மேலும், அவர் சிறப்பு அதிரடிப்படையின் தளபதியைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இஸ்ரேலின் உண்மையான செயற்பாடுகளை டிவோன் முழுமையாக அறிந்திருந்தபோதிலும், அந்தப் பிரிவு எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது குறித்து அவர் கவலை கொண்டிருந்தார்.
1987 செப்டம்பர் 10, அன்று அனுப்பப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், சிறிலங்காவுடனான உறவுகளை முழுமையாக இயல்பாக்குவதே இஸ்ரேலின் நோக்கம் என்றும், உள்ளூர் மக்களிடையே சரியான சூழலை உருவாக்க பொது இராஜதந்திரம் தேவை என்றும் அவர் எழுதியிருந்தார்.
இருப்பினும், அவர் ஒரு நன்மதிப்புச் சிக்கலைக் குறிப்பிட்டார்: இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு, “தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட ஒரு பணி” என்றே பரவலாகக் கருதப்பட்டது.
“துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரிவின் நிறுவலை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கங்களில் இதுவும் ஒன்றாகும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
1987 நவம்பர் 11ஆம் நாளிடப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், மொசாட் பிரதிநிதி ஒருவருடன் சேர்ந்து, அதிபர் ஜயவர்தனவைச் சந்தித்ததாகவும், அவர் இஸ்ரேலிய இராணுவப் பயிற்றுவிப்பாளர்களை நேரில் சந்திக்கக் கோரியதாகவும் டிவோன் தெரிவித்திருந்தார்.
” அதிபர் தற்போதைய நிலைமை குறித்து அதீத நம்பிக்கையுடன் இருப்பது தெளிவாகத் தெரிகிறது, மேலும் அவர் யதார்த்தத்திலிருந்து விலகி இருக்கிறார் – ஒருவேளை, இதைத்தான் அவர் கேட்க விரும்புகிறார் என்று கருதும் ஆலோசகர்கள் வழங்கும் மிகைப்படுத்தப்பட்ட நேர்மறையான மதிப்பீடுகளின் விளைவாக இது இருக்கலாம்,” என்றும் டிவோன் எழுதியுள்ளார்.
மறுநாள் அனுப்பப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், இரண்டு மொசாட் அதிகாரிகள் சிறிலங்காவில் நிரந்தரமாகச் செயற்பட்டு வருவதாக டிவோன் எழுதியிருந்தார்.
மற்றொரு தந்திச் செய்தியில், அவர்களின் இருப்பு அறியப்பட்டிருந்தது என்றும், “மொசாட் ஆட்கள், தங்களின் மற்ற திறன்களுடன், பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்கவும் அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் அவ்வப்போது பாராட்டுக்களைப் பெறுகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் – இது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர், விவசாய வல்லுநர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டுள்ளதைக் குறிக்கும் ஒரு சொல்லாடலாகும்.
கொழும்பில் உள்ள இஸ்ரேலியப் பிரிவை மூடுமாறு அரபு நாடுகளும் சிறிலங்கா எதிர்க்கட்சியும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், 1987 ஓகஸ்ட் 6 மற்றும் ஓகஸ்ட் 14,அம் நாளிடப்பட்ட தந்திச் செய்திகள், அதிபர் தனது தேர்தல் பரப்புரைக்கு நிதியுதவி கோரி, ஒரு மொசாட் பிரதிநிதியுடனான சந்திப்பின்போது 1 மில்லியன் டொலர் கேட்டதாகத் தெரிவித்துள்ளன.
“தேர்தல்கள் தொடர்பான செய்தி தெளிவாக உள்ளது – எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது வெற்றியில் எங்களுக்கு அக்கறை உள்ளது, எனவே நாங்கள் அதற்கு உதவ வேண்டும்.
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால், நாம் வெளியேற்றப்படுவோம் என்பது எமக்குத் தெரியும் என அவர் கருதுகிறார்,” என்று டிவோன் எழுதியிருந்தார்.
1970-ல் இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்திருந்த எதிர்க்கட்சி, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேலியர்களை வெளியேற்றி விடுவோம் என்று உறுதியளித்திருந்தது.
பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட தந்திச் செய்திகளில், ஜயவர்தனவுக்கு இஸ்ரேல் உண்மையில் தேர்தல் பரப்புரை நிதி வழங்கியதற்கான எந்த ஆவணமும் இல்லை. இருப்பினும், இஸ்ரேல் அவரது பாதுகாப்பு கோரிக்கைகளை நிறைவேற்றியது.
இஸ்ரேலிய இராணுவ உதவியின் முக்கியத்துவம், 1987 மே 21 அன்று டிவோன் அனுப்பிய ஒரு தந்திச் செய்தியில் தெளிவாகிறது. அதில், அதிபரின் செயலாளருடனான ஒரு சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், “தங்களுக்கு தார்மீக ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஆதரவளிக்காத மற்றும் உதவிக்கான கோரிக்கைகளை – முக்கியமாக இராணுவ ரீதியான கோரிக்கைகளை – நிராகரிக்கும் மேற்கத்திய நாடுகள் மீது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.”
“இஸ்ரேலியர்களான நாங்கள் மட்டுமே அவர்களுக்கு உதவ வந்துள்ளோம்” என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
1988 ஜனவரி 4,அன்று அனுப்பப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், “பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைகளில் வழங்கப்பட்ட உதவிக்காக” இஸ்ரேலுக்கு நன்றி தெரிவித்து அதிபர் எழுதிய கடிதத்தை டிவோன் இணைத்திருந்தார்.
1988 மார்ச் 25 ஆம் நாளிடப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், அதிபரைச் சந்தித்ததாகவும், “நாங்கள் இதுவரை வழங்கிய உதவி நிச்சயமாக விதிவிலக்கானது” என்று அவரிடம் கூறியதாகவும் டிவோன் தெரிவித்திருந்தார்.
மேலும், பிரதமர் ஷமிர் கூட அதிபரின் பாதுகாப்புப் படையினருக்குப் பயிற்சி அளிக்க தனது சொந்த மெய்க்காப்பாளர்களில் இருவரை அனுப்பியிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதிபரின் இந்த நம்பிக்கையான மனநிலையைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், அது “யதார்த்தத்திலிருந்து விலகியிருப்பதன் விளைவா அல்லது ஒருவேளை அவர் தன் மக்களை நன்கு புரிந்து கொண்டிருப்பதன் விளைவா” என்றும் வியந்து டிவோன் எழுதியுள்ளார்.
மனித உரிமைகள் நிலைமையின் கடுமை குறித்த தொடர்ச்சியான அறிக்கைகள் இருந்தபோதிலும் இராணுவ உதவி வழங்கப்பட்டது
உள்நாட்டுப் போரின் போது நாட்டில் நிலவிய மனித உரிமைகள் நிலைமையின் கடுமை குறித்து சிறிலங்காவில் உள்ள இஸ்ரேலியப் பிரதிநிதிகள் தொடர்ச்சியான அறிக்கைகளை வழங்கிய போதிலும், இந்த குறிப்பிடத்தக்க இராணுவ உதவி வழங்கப்பட்டது.
இந்த அறிக்கைகளில், “தெற்கில் தமிழ் இரகசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட பல இளைஞர்கள் காணாமல் போனதற்கு” சிறப்பு அதிரடிப்படையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள்;
இராணுவமும் விமானப்படையும் தமிழ் பொதுமக்கள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசியது;
1971இல் “இராணுவத்துடனான வன்முறை மோதல்களில் 10,000 முதல் 20,000 வரையிலான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதைப்” போன்ற ஒரு பெரியளவிலான ஒடுக்குமுறை மீண்டும் நிகழும் என்ற அச்சம்;
அரசாங்க அமைச்சர்கள் தனியார் ஆயுதக் குழுக்களை உருவாக்கி, ஆயுதங்கள், தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புக் கருவிகளை வாங்கி வருவது;
தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவது குறித்த அறிக்கைகள்;
பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டது; மற்றும் அரசுப் பணிகளில் தமிழ் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஆகியவை அடங்கும்.
தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர், இஸ்ரேலியப் பிரதிநிதிகளுடனான ஒரு சந்திப்பில், தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கு அதிகாரிகளுக்கு உதவுவதை இஸ்ரேல் தவிர்க்க வேண்டும் என்று கூட வலியுறுத்தினார்.
1988, ஜனவரி 12 ஆம் நாளிடப்பட்ட ஒரு தந்திச் செய்தியில், டிவோன், “ஒவ்வொரு நாளும் படுகொலை, கொலை மற்றும் இனப்படுகொலை சம்பவங்களைப் பற்றி நாங்கள் கேள்விப்படுகிறோம்,” குறிப்பாக சிறிலங்கா இராணுவத்தால் நடத்தப்பட்டவை என்று எழுதியிருந்தார்.
“சிறிலங்காவில் தமிழ் சிறுபான்மையினரின் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான குழு” அமெரிக்காவில் செயல்பட்டு வருவதாகவும், “அரசாங்கத்தின் இராணுவம் மற்றும் காவல்துறைக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல் ஆயுதங்களையும் ஆலோசகர்களையும் அனுப்பியுள்ளது” என்றும் அது கூறியதாக சிகாகோவில் உள்ள இஸ்ரேலின் துணைத் தூதரகம், தெரிவித்திருந்தது.
துணைத் தூதரகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, “மீண்டும் ஒருமுறை சில தரப்பினர் எங்களுக்கு எதிராகப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்” என்று இதற்குப் பதிலளிக்கும் விதமாக கூறியிருந்தது.
இருப்பினும், மேலே விபரிக்கப்பட்டபடி, அரச ஆவணக் காப்பகத்தில் உள்ள வெளியுறவு அமைச்சின் ஆவணங்கள், அந்தக் குழுவின் கூற்றுகளை உறுதிப்படுத்துகின்றன.
இஸ்ரேல் மனித உரிமைகள் நிலைமையின் தீவிரத்தைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், அதன் இராணுவ உதவியின் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்பதையும் தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தது.
1984 நவம்பரிலேயே, வெளியுறவு அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் அவி பிரிமோர் (Avi Primor) மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள துணை உதவிச் செயலர் ஆகியோருக்கு இடையேயான ஒரு சந்திப்பு நடந்த்.
அதன்போது, சிறிலங்கா அதிகாரிகள் தங்கள் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளை விரிவுபடுத்தி வருவதாகவும், ஆனால் “ஒரு இராணுவத் தீர்வை அடைய முடியும் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்” என்றும் வொசிங்டன் நம்புவதாகவும் அந்த அமெரிக்க அதிகாரி பிரிமோரிடம் கூறியிருந்தார்.
கொழும்பில் உள்ள இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவின் தலைவர், அதிபர் ஜயவர்தன யதார்த்தத்திலிருந்து விலகி இருப்பதாக மீண்டும் மீண்டும் எழுதியிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கம் தூதரக உறவுகளைப் புதுப்பித்ததற்கு இராணுவ உதவியே முக்கியகாரணமாக இருந்ததாலும் – மனித உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தபோதிலும், அரசாங்கத்தால் மோதலை இராணுவ ரீதியாகத் தீர்க்க முடியாது என்ற தெளிவான மதிப்பீடு இருந்தபோதிலும் – இஸ்ரேல் தனது உதவியைத் தொடர்வதே சிறந்தது என்று முடிவு செய்திருந்தது.
ஆங்கில மூலம்- ஈடே மாக் (Eitay Mack)
வழிமூலம் – The wire
- ஈடே மாக் (Eitay Mack), சிறிலங்கா உள்நாட்டுப் போரில் இஸ்ரேலின் பங்கை அம்பலப்படுத்தும் ஒரு இஸ்ரேலிய மனித உரிமை வழக்கறிஞரும் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் இஸ்ரேலில் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
