22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.
அரசியலமைப்புத் திருத்த வரைவு அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தங்கள் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் கூறினார்.
பொதுமக்களின் எதிர்ப்பைத் திரட்டுவதற்கும், அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தங்கள் கட்சி அரசியல் பிரசாரங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி சட்டவாளர் சங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம். அடுத்ததாக என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பிடுவதற்கு எங்கள் சட்டவாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து கலந்தாலோசித்து வருகிறோம் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
