ரஷ்ய படைகளில் இணைக்கப்பட்ட 275 இலங்கையர்கள் போரில் பலி
உக்ரைனுக்கு எதிராகப் போராட ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தெற்காசிய நாட்டவர்களில், சிறிலங்காவைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக ஹிமால் சவுத்ஏசியன் (Himal Southasian) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மோதல்களில் குறைந்தது 275 இலங்கையர்கள் இறந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் கைதிகளைக் கையாள்வதற்கும் வெளிநாட்டுப் போராளிகளைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பான அதிகாரப்பூர்வ அமைப்பான, உக்ரைனின் போர்க் கைதிகளைக் கையாளும் ஒருங்கிணைப்புத் தலைமையகம், ஹிமால் சவுத்ஏசியனுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்திற்கும் (OCCRP) வழங்கிய தரவிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, 2025 பெப்ரவரியில் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட 59 உயிரிழப்புகளை விட மிகவும் அதிகமாகும்.
ரஷ்ய இராணுவத்திற்குள் உள்ள ஆதாரங்களில் இருந்து, ஓரளவு பெறப்பட்ட தரவுத்தொகுப்பு, 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து 2025 செப்ரெம்பர் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியதாகும்.
ரஷ்யப் படைகளில் இணைந்த சிறிலங்கா, நேபாளம், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொத்தம் 455 தெற்காசியர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நாடுகளில் இருந்து ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அறியப்பட்ட தெற்காசியர்களின் பெயர்களையும் தரவு குறிப்பிடுகிறது, இதில் 1923 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் சிறிலங்கா முதலிடத்தில் உள்ளது, குறைந்தது 751 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில், குறைந்தது 275 இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இலங்கையர்களின் உண்மையான எண்ணிக்கையும், போரில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாக இருக்கலாம்” என்று ஒருங்கிணைப்பு தலைமையகம் ஹிமாலிடம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2025 நிலவரப்படி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 554 பேரில், 59 இலங்கையர்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதிகளவாக நேபாளத்தில் இருந்து 852 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 115 பேர் இறந்துள்ளனர், இது சிறிலங்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
பங்களாதேசில், 104 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 170 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 பேரில் ஐந்து ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 22 பாகிஸ்தானியர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மொழித் தடைகள் மற்றும் நவீன சண்டை உபகரணங்கள் இல்லாதது ஆகியவை தெற்காசியர்கள் நடவடிக்கையில் கொல்லப்படுவதற்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு தலைமையகத்தின் தரவுகளின்படி, ரஷ்யா 44 நாடுகளில் இருந்து 24,000 க்கும் மேற்பட்ட போராளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
