மஹர சிறையில் கலவரம் கட்டுக்குள் வரவில்லை- ஊரடங்கு உத்தரவு
மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறைகள் நேற்றிரவுவரை கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், நேற்று இரவு ராகம காவல் நிலையப் பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்தது.
இந்த வன்முறைகளில் கைதி ஒருவர் உயிரிழந்தார் என்றும், ஆறு கைதிகள் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 7 கைதிகள் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்றைய வன்முறைகளின் போது, சிறைச்சாலை நலன்புரி கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே கூடியதால், சிறைக்கு வெளியே நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா ஆயுதப் படைகள் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு வரை சிறைக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள், மன உளைச்சலில் இருந்த கைதிகளின் உறவினர்களையும் நண்பர்களையும் சிறை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
சிறை வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தைக் கலைப்பதே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மஹர சிறைச்சாலையின் மீது வான்வழி கண்காணிப்புக்காக பெல் 412 உலங்குவானூர்தி ஒன்றும், ட்ரோன் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா விமானப்படை ஊடக பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவக்கும்புர, தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிக்கு சிறிலங்கா இராணுவ வாகனங்கள், உந்துருளி குழுக்கள், சிறிலங்கா கடற்படையினர், கலவரத் தடுப்பு நீர்த்தாரை பீரங்கிகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரணபாடு, இந்தச் சம்பவத்தைத் தூண்டியதாகவும், அது வன்முறையாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகள் ஒரு உலோகக் கட்டமைப்பு வழியாக தப்பிக்க முயன்றதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் கூறுகின்றன. சிறைக்குள் இருந்து துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டன.
தீயில் அழிந்த ஒரு கட்டடத்தில் தலைமைச் சிறை அதிகாரியின் அலுவலகமும் அமைந்திருந்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக கம்பஹா தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



