ஆனந்தபுரச் சமர் – பாகம்: 3
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைகளின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமரில் நிகழ்ந்தேறிய, அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக திட்டம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வறிக்கையின் மூன்றாவது பகுதி.
ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை பகல் நேரம் அரசாங்கப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்கள்
ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து கனமழை பெய்தமையால் சிறிலங்கா இராணுவம் தனது தாக்குதல்களை குறைப்பது பற்றி சிறிது நேரம் பரிசீலித்தாக பின்னர் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், காலை விடிந்த நிலையில் காலை 6 மணியளவில் அதன் படைகள் பெட்டியின் மீது ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதுடன், விடுதலைப் புலிகளின் கைவிடப்பட்ட கட்டளை மையத்தினையும் கைப்பற்றி கிழக்குப் பக்கமாக நெருங்கி வந்தார்கள்.
சிறிலங்காப் படைகள் கணினி நிலையத்திற்கு கிழக்காக இருந்த ஒரு பாடசாலையையும் கைப்பற்றினார்கள். சிறிலங்கா இராணுவத்தினர் கிட்டத்தட்ட 300 மீற்றர்கள் தூரத்தில் வந்த நிலையில் விரைவிலே எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகளும் ஒரு இறுக்கமான முற்றுகைக்குள் வந்தன.
சிறிலங்கா இராணுவப் படைகள் தமது எதிரியை இப்போது மிக நெருங்கிய தூரத்தில் சுற்றிவளைத்து நின்றமையால், அவர்கள் தமது இலக்குகளைத் தவறவிடுதல், தாக்குதல் இலக்குகளை கடந்து செல்லுதல் மற்றும் மற்றைய பக்கத்திலுள்ள அவர்களது சொந்தப் படையினரையே தாக்குவது போன்ற ஆபத்துக்களை கருத்திற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.
கணினி நிலையம் இருந்த வளாகத்தினைச் சுற்றியிருந்த தகர வேலி அவர்கள் பார்க்க முடியாதபடி ஒரு மறைப்பாக இருந்தது. ஆனால், சாட்சி 4 கூறியதற்கு இணங்க, சிறிலங்கா இராணுவத்தின் குறிபார்த்து சுடுபவர்கள் எது அசைந்தாலும் அதன் மீது தாக்குதலை நடத்தியமையால் நகர்ந்த விடுதலைப் புலிகள் போராளிகள் ஒரு இடத்திலேயே அசையாமல் முடக்கப்பட்டனர்.
எதிரியின் தாக்குதல் மற்றும் மேலே வேவு விமானங்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், அந்த வெள்ளிக்கிழமை பகல் நேரங்களில் இயன்ற அளவிற்கு தமது நிலைகளைத் தற்காத்துக் கொண்டு, பின்னர் யார் உயிருடன் எஞ்சியிருந்தாலும், இருளும் வரை காத்திருப்பதை தவிர, அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
‘இன்று அதிகாலையில் ஆனந்தபுரத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பகுதிக்குள் 58ஆவது படைப்பிரிவின் இராணுவத்தினர் முன்னேறிச் சென்றதாகவும், மாலை வரை நீடித்த மிக நெருக்கமான நேரடி மோதலில் பயங்கரவாதிகள் துடைத்து அழிக்கப்பட்டதாக’ பாதுகாப்பமைச்சின் நிலைமை அறிக்கை ஒன்று பதிவு செய்தது.
எவ்வாறாயினும் இவ்வாறு கூறப்பட்ட ‘துடைத்து அழிப்பு’ என்பது உண்மை இல்லை.
‘அரசாங்கப் படைகளால் தீவிரமான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களும் அத்துடன் சிறிலங்கா விமானப்படையினரால் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக’ இரண்டாவது நிலைமை அறிக்கை மாலையில் தெரிவித்தது.
ஏப்ரல் 3- 4 வெள்ளிக்கிழமை இரவு – சனிக்கிழமை,: தப்பிச் செல்வதற்கான இறுதி முயற்சிகள்
சாட்சி 4 விபரித்ததைப் போல், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில், ஒட்டுமொத்தத்தில் எமக்கு எந்த தெரிவுகளும் இல்லை என்பதைத் தெரியப்படுத்த, கேணல் கீர்த்தி ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் 20 பேர் கலந்து கொண்டார்கள். இயலக் கூடியவர்கள் குழுக்களை அமைத்து தாங்களே சண்டை பிடித்து பெட்டிக்கு வெளியே செல்வதே ஒரே ஒரு தெரிவாக இருந்தது.
அவர்கள் இதனைக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்குள் தொடங்க வேண்டும். மருத்துவநிலை மோசமடைந்திருந்த கேணல் கடாபி மற்றும் கேணல் தீபன் உட்பட படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அங்கேயே விட்டுச் செல்லப்படுவார்கள்.
இந்த முடிவு பற்றி மோசமாகக் காயமடைந்தவர்களுக்கு அறிவிப்பதற்காக, கேணல் கீர்த்தி கணினி நிலையத்தின் பிரதான கட்டிடத்திற்குள் நுழைந்தார். அவருடன் சென்ற சாட்சி 4 தெரிவிப்பதன் படி, அதற்குள் வைக்கப்பட்டவர்களில் பலர் தம்மைச் சுட்டுக் கொல்லுமாறும், அல்லது சயனைட் வில்லைகளைத் தருமாறும் கெஞ்சினார்கள்.
இந்த சயனைட் வில்லைகள் விடுதலைப் புலிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக இருந்தாலும், அவை ஒரு போராளி எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே வழங்கப்படுகின்றன:
நிச்சயமாக அவை நோவைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படுபவை அல்ல, இதனால் தான் கடுமையாகக் காயப்படுபவர்களிடமிருந்து அவை அகற்றப்படுவது வழக்கம்.
அவரிடம் கெஞ்சியவர்களிடம் கேணல் கீர்த்தி, இயலுமானவர்கள் தற்போது உடைத்துக் கொண்டு வெளியே போக முயற்சிப்பார்கள், பின்னர் திரும்பி வந்து அவர்களைக் காப்பாற்றுவார்கள் என்று கூறினார்.
அவருக்கு முன்னால் காயமடைந்த 350 தொடக்கம் 400 வரையான ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தார்கள் என்று சாட்சி 4 மதிப்பிட்டுள்ளார்.
பச்சைப்புல்மோட்டை ஊடாக வட– கிழக்கிற்கு தப்பித்தல்
தற்போது விட்டுச் செல்லவுள்ள போராளிகளை நகர்த்தும் போது, சாட்சி 4 இற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த போதிலும், அவர் காயப்பட்டவர்களில் மிகவும் இயலுமான ஒருவராகவே கருதப்பட்டார்.
தனக்கு முன்னாலுள்ள உயிராபத்தான சவாலைப் பற்றி சிந்தித்த அதேவேளையில், 150 பேரைக் கொண்ட அவரது நிலக்கண்ணிகளை அகற்றும் பிரிவில் இருந்து இன்னும் உயிர்தப்பியுள்ள இரண்டு போராளிகளில் ஒருவராக தான் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
வடகிழக்குப் பக்கத்தில் முன்னர் ஆனந்தபுரத்தின் பிரதான விநியோகப் பாதையாக இருந்த வழி ஊடாக உடைத்துச் செல்ல முயற்சிக்கப் போகும் கிட்டத்தட்ட 30 பேரைக் கொண்ட, தாக்குதல் நடத்தி தப்பிச் செல்லும் குழுவில் அவர் இப்போது உள்ளடக்கப்பட்டிருந்தார்.
அவர்களில் சிலராவது ஏனையவர்கள் பின்தொடர்ந்து செல்வதற்கான ஒரு வழியைத் திறப்பார்கள் என அந்தக் குழுவிலுள்ளவர்கள் நம்பினார்கள்.
சாள்ஸ் அன்ரனிப் படையணியால், வடக்கில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்புத் தாக்குதல் உதவியளிக்கக் கூடிய வகையில் , சிறிலங்கா இராணுவத்தின் 50 மில்லி மீற்றர் பீரங்கி நிலைகளில் ஒன்றினை இல்லாமல் செய்த போதிலும் , ஊடுருவிச் செல்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் ஐந்து அல்லது ஆறு பாதுகாப்பு வேலிகள் இருந்ததுடன், இராணுவத்தின் பராலைட்டுக்கள் அந்தப் பிரதேசத்தினை மிகவும் ஒளிமயமாக்கியது.
முதல் இரண்டு பாதுகாப்பு வேலிகளும் மிகவும் இறுக்கமானதாக இருந்தன என்று சாட்சி 4 பதிவு செய்கிறார்: அந்தக்குழு முன்னேறிச் செல்கையில் சிறு சிறு குழுக்களாகப் பிளவுபட்டு அதன் முன்னேற்றம் நிச்சயமற்றதாகவும் ஒழுங்கற்றதாகவும் இருந்ததுடன் சில போராளிகள் எதிர்த்தாக்குதலினால் பின்வாங்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
அவர்களுக்குத் தலைமை தாங்கிச் சென்ற தளபதி முழங்காலுக்கு கீழ் தனது கால் ஒன்றினை இழந்ததுடன் மற்றைய காலிலும் படுகாயமடைந்தார். சாட்சி 4, பார்வை நரம்பிற்கு அருகிலிருந்த குண்டுத் சிதறலைவிட, தற்போது காலில் துப்பாக்கிச் சூட்டுக்கும் உள்ளானார். அத்துடன் அவர்களது குழுவில் இருந்த மேலும் பலர் காயமடைந்தார்கள்.
தெரியாத எண்ணிக்கையான போராளிகளை களத்தில் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் சிறிலங்கா இராணுவத்தின் மூன்றாவது பாதுகாப்பு வேலியினை அடைந்திருந்த நேரத்தில் உண்மையாக என்ன நடைபெறுகிறது என இராணுவத்தினரே குழம்பமடைந்திருந்தது போல் தெரிந்தது.
இரண்டு தரப்பைச் சேர்ந்த போர் வீரர்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்ட நிலையில், தமது சொந்த ஆட்களையே கொன்று விடுவோம் என்ற அச்சத்தில், சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதற்கு தயங்கினார்கள்.
சாட்சி 4 மற்றும் அவருடன் இன்னும் நின்ற மற்றையவர்களும் இந்தச் சந்தப்பத்தினைப் பயன்படுத்தி மற்றைய பக்கத்திற்கு முன்னேறிச் செல்லக் கூடியதாக இருந்ததுடன், ஏப்ரல் 4 சனிக்கிழமை காலை 2 மணியளவில் வெளியே வந்தார்கள்.
மீண்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிக்குள் திரும்பிய நிலையில், அவர் மோட்டார் சைக்கிளில் இரட்டைவாய்க்காலுக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார்.
பொக்கணையிலுள்ள களமருத்துவமனைக்கு வெளியே குடலில் காயங்களுடன் தறப்பாளில் கிடந்தபடி, தொலைதொடர்பு சாதனத்தில் புதிய தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்த சாட்சி 5 எல்லாப் போராளிகளும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த செய்தியைக் கேட்டார்.
ஆனந்தபுரம் பெட்டிக்குள் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், பெட்டிக்கு வெளியில் இருந்து கேணல் லோறன்ஸ் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்தார். இதனால் தப்பிச் செல்வதற்கான இந்த வழியை தற்காலிகமாக பாதுகாப்பானதாக இருந்தது.
இந்த வழியில் இப்போது தப்பியவர்களில் ஒருவர் சாட்சி 6, இவர் முன்னர் விடுதலைப் புலிகளின் நீதித்துறையில் இருந்ததுடன் கைவிடப்பட்ட புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகே கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பிறந்த பிள்ளையின் தகப்பன் ஆவார்.
கட்டளை மையத்திற்கு அருகில் அவர் காலில் துப்பாக்கி சூடுபட்டு காயமடைந்திருந்தார், ஆனால் காயத்துடன் நடக்கக் கூடியவராக இருந்ததுடன், தளபதி பானுவின் தலைமையில் பச்சைப்புல்மோட்டைப் பகுதிக்கு ஊடாக தப்பி வந்தார்.
சாட்சி 6 இன் மதிப்பீட்டின் படி, அவர் இருந்த குழுவில் கிட்டத்தட்ட 75 பேர் காயமடைந்திருந்தார்கள். இருந்த போதிலும் தளபதி பானு காயமடையவில்லை. தான் பெட்டியை விட்டு வெளியேறும் முன்னர் கேணல்களான தீபன் மற்றும் கடாபி ஆகியோரின் இறந்த உடல்களைப் பார்த்தாக கூறுகிறார்.
ஆயினும் இதை உறுதிப்படுத்துவதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், கேணல் கடாபி அந்தக் கட்டத்தில் இறந்து விட்டார் என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் களமருத்துவரான சாட்சி 7 எட்டுப் பேரைக் கொண்ட தனது அணியுடன் பெட்டிக்கு உள்ளே இரசாயன எரிவுக்கு உள்ளானவர்கள் உள்ளிட்ட போராளிகளுக்கு, முடியுமான அளவுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.
இந்த நேரத்தில் அவரே தோளில் காயமடைந்தார். அவரது அணியைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்ததுடன் இன்னுமொருவர் ‘உயிருடன் பிடிபட்டதாக’ அவர் கூறுகிறார்.
ஆனால், சாட்சி 7 கூட தளபதி பானுவின் கீழ் இருந்த காயங்களுடன் நடக்கக் கூடியவர்களைக் கொண்ட குழுவில் ஒருவராகவும் இருந்தார், அதேவேளையில் அவரும் பச்சைப்புல்மோட்டைக்கு ஊடாக பெட்டியை விட்டுத் தப்பி வந்ததாக கூறுகிறார்.
ஏனையவர்கள் தெரிவித்த தகவல்களின் படி, இந்தக்குழு கேணல் கீர்த்தியுடன் காலை 4.30 மணியளவில் வெளியே வந்தது. சாட்சி 7 கூட்டிச் செல்லப்பட்டு வலைஞன்மடத்தில் இருந்த கள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார், சமரில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் ஒரு போதுமே சரியான முறையில் குணமடையவில்லை.
கடல்நீரேரிக்கு ஊடாகத் தப்பிச் செல்லுதல்
வெள்ளிக்கிழமை பின்னிரவுக்கும் சனிக்கிழமை அதிகாலைக்கும் இடையில் ஏனைய பேராளிகள் கடல்நீரேரி வழியாக நடந்து சென்று தப்பிச் செல்ல முயற்சி செய்தார்கள், கடுமையான மழை காரணமாக அது கூடுதலான அளவிற்கு சேறும் சகதியுமாக இருந்தது.
கேணல் கடாபியின் படையணியைச் சேர்ந்த சாட்சி 3 ஏற்கனவே இரண்டு தடவைகள் தோல்வியில் முடிந்த பெட்டியை உடைத்துச் செல்லும் முயற்சியில் பங்கு கொண்டிருந்ததுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் சயனைட் வில்லையை விழுங்கும் முயற்சியில் இருந்து தடுக்கப்பட்டவர்.
அவர் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை உடைத்துக் கொண்டு தண்ணீரை நோக்கிச் சென்று அதனைக் கடந்து வடக்கு நோக்கிச் செல்லும் திட்டத்துடன் முயற்சித்தவர்களில் ஒருவராக இருந்தார். இவ்வாறு செல்லும் வழியில் குறிப்பிட்ட எண்ணிக்கையான போராளிகள் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். மிகநெருக்கமாக இடம்பெற்ற மோதலில் இடது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கும் கைக்குண்டுச் சிதறல்களால் அவரது நெஞ்சிலும் வயிற்றிலும் பல காயங்களுக்குள்ளானார்.
அவரும் அவரது சக போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது பாதுகாப்பு நிலைகளைத் தாக்கும் போது அங்கிருந்த இராணுவத்தினர் அவர்களை திரும்பி பின்னால் கலைத்து வந்தார்கள்.
தப்பிச் சென்ற போராளிகளில் சிலர் கடல்நீரேரியினை அடைந்த வேளையில், வெளியில் இருந்து விடுதலைப் புலிகளின் உதவி கிடைத்தது. ஆனால் தண்ணீரைக் கடப்பது என்பது மிகப் பெரிய ஆபத்தானதாக இருந்தது.
போர் அனுபவமுள்ள போராளியான சாட்சி 2 காயமடைந்ததையடுத்து பெட்டி துண்டிக்கப்படுவதற்கு முன்னரே, வெளியே அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவர் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவர்களது சகதோழர்களை மீட்பதற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்த ஒரு அணியில் இணைக்கப்பட்டார். இது இப்போது அவர்களது மூன்றாவது முயற்சி. அத்துடன் அவர்கள் கடல் நீரேரியையும் கடந்து சென்றார்கள்.
அவர்கள் தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த போது, அவர்களுக்கு மேலே இருந்த காற்று வெள்ளைப் பொஸ்பரசுகள் வெடித்து அதனால் நிரம்பி இருந்ததாகவும் அத்துடன் அவரும் அவரது தோழர்களும் அடையாளம் தெரியாத இரசாயனப் புகையினை வெளியிடும் கொத்துக்குண்டு தாக்குதல்களுக்கு இலக்கானதாகவும், சாட்சி 2 விபரிக்கின்றார்.
சற்றுத் தொலைவில், ‘சிவப்பு நிறத்தில் எரிந்து கொண்டிருக்கும்’ தீயுடன் இரண்டு பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதை அவர் கண்டார். அவருடைய கண்கள் எரியத் தொடங்கியதால், அவரைச் சுற்றியிருந்த அனைவரையும் தண்ணீருக்குள் அமிழ்ந்து கொள்ளுமாறு சாட்சி 2 சொன்னார்.
ஒருவாறு மற்றைய பக்கத்தில் இருந்து வந்த சாட்சி 3உம் சாட்சி 2 உம் இந்த கடல்நீரேரித் தாக்குதலில் உயிர்பிழைத்து தப்பித்துக் கொண்டாலும் சாட்சி 2 கடுமையான மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் இரசாயன காயங்களுக்கு உள்ளானார்.
ஆனந்தபுரம் சந்தையில் சாட்சி 1 ஒரு பாதுகாப்பு நிலையில் இருளுக்குள் அப்போதும் நின்று கொண்டிருந்தார். கடும் சண்டையின் சத்தங்கள் திடீரென நின்ற போது, சுற்றி எங்கும் அசாதாரண அமைதி காணப்பட்டதையடுத்து, அவருக்கும் அவருடன் நின்றவர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
இவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த கேணல் அன்ரன் இரண்டாவது போராளியுடன் கணனி நிலையம் இருந்த இடத்திற்கு மெதுவாகப் சென்று பார்த்து விட்டு வரப் போனார். அவர் திரும்பி வந்ததும் மோசமாகக் காயமடைந்தவர்கள் தவிர அனைவரும் போய்விட்டார்கள் என சாட்சி 1 இடம் சொல்ல ஆரம்பித்த போது, கேணல் அன்ரன் ஆர்.பி.ஜி இனால் தாக்கப்பட்டு அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். அவருக்கு அருகில் நின்ற போராளியின் கையும் இல்லாமற் போனது.
விரோதமான படைகளால் சூழப்பட்டிருந்த நிலையில் சாட்சி 1 கைவிடப்பட்டிருப்பதை அறிந்ததும் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரகசிய இலக்கங்கள் உட்பட அவரிடம் இருந்த அனைத்து வோக்கி டோக்கி இலக்கங்களுக்கும் தொடர்பினை ஏற்படுத்த முயற்சி செய்தார்,
இறுதியில் அவருடைய அழைப்பிற்கு பதிலளித்த யாரோ ஒருவர் அவரை அங்கிருந்து வெளியேற முயற்சிக்க வேண்டும் எனக் கூறினார். சண்டை பிடித்து வெளியே செல்ல முயற்சிப்பதை தவிர வேறு எதையும் பற்றி சாட்சி 1 இனால் சிந்திக்க முடியவில்லை.
அவரே இப்போது கணனி நிலையத்திற்குச் சென்று அங்கு ஓரளவிற்கு நடமாடக்கூடியவர்கள் என்று நம்புபவர்களும், சண்டை பிடிக்கத் தயாரானவர்களும் தன்னுடன் இணைந்து கொள்ளலாம் என அறிவித்தார்.
முன்னர் சாட்சி 4 கேணல் கீர்த்தியுடன் சென்ற வேளையில், அவர்களது எண்ணிக்கை 350-400 என மதிப்பீடு செய்திருந்தார். பெட்டிக்கு வெளியில் மருத்துவ வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், கணினி நிலையத்தில் இருந்த மருத்துவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கைகளின் படி இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 350 ஆக இருந்தது
சாட்சி 1 அங்கு நின்ற வேளையில் அவர் கிட்டத்தட்ட 300 இற்கும் மேற்பட்டவர்களிடத்தில் கதைத்ததாக மதிப்பிடுகின்றார். அத்துடன் இவர்களில் 20 பேர் அவருடன் செல்வதற்கு உடன்பட்டிருந்தார்கள். அவர்கள் உதவியின்றி நடக்க முடியாதவர்களாக இருந்தார்கள்,
சாட்சி1 இனால் பத்து துப்பாக்கிகளை மட்டுமே சேகரிக்க கூடியதாக இருந்தது. இவர்களில் சிலர் அவரது பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர் அவர்களுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளார். என்ன விலை கொடுத்தாலும், அவர்களை விட்டுவிட்டு போவதற்கு அவர் தயாராக இருக்கவில்லை.
அவர்களும் கூடவே வருவதற்காக அவர்கள் ஊன்றுகோல்களாக பயன்படுத்துவதற்கு தடிகளைச் சேகரித்தார். அவர்கள் புறப்பட இருந்த வேளையில், அண்மையில் இவரின் பொறுப்பின் கீழ் இருந்த புதிதாக இணைக்கப்பட்ட 100 பெண்களில் சிலரும் அங்கு காயப்பட்டவர்களில் இருந்தார்கள். இவர்கள் தங்களை விட்டு விட்டுப் போக வேண்டாம் என்று அவரிடம் கெஞ்சி அழத் தொடங்கினார்கள்.
வெளியே போவதற்கான பாதையைக் கண்டுபிடித்ததும் அவர்களிடம் திரும்பி வருவதாக சாட்சி 1 அவர்களிடம் கூறினார். ‘என்னிடம் வேறு எந்த வார்த்தைகளுமே இருக்கவில்லை’ என அவர் கவலையுடன் கூறுகிறார்.
சாட்சி 1 மற்றும் அவரது குழுவினர் கடல்நீரேரியை நோக்கி சிரமப்பட்டு நடந்து சென்றார்கள். அவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளைக் கொண்ட முதலாவது வேலியை தாக்கியவேளையில், அந்த மோதல் தீவிர சண்டையாக மாறியது.
அவர்கள் மறுபக்கத்தில் மீளஒன்று சேர்ந்த போது, அவர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிருடன் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த பெண் போராளி ஆவார்.
அவர்கள் அங்கிருந்த மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு வேலிகளுக்கு ஊடாக இப்படித் தொடர்ந்து சென்றால், அவரும் சகபோராளிகள் அனைவரும் இறக்க நேரிடும் என்பது சாட்சி 1 இற்கு தெளிவாகத் தெரிந்தது.
அவர்கள் தமது உபாயத்தினை மாற்ற வேண்டியிருந்தது. இங்கே இருந்து சிறிலங்கா இராணுவத்தைக் கடந்து செல்வதற்கு அவர்களிடம் இருந்த எல்லா அனுபவத்தினையும் பாவித்து இராணுவத்தின் பாதுகாப்பு வேலிகளினூடக இரகசியமாகச் செல்ல வேண்டும் என அவர்களிடம் அவர் சொன்னார்.
அவர்கள் அடுத்த இரண்டு பாதுகாப்பு வேலிகளைக் கடந்து செல்லும் அந்த நேரத்தில் சாட்சி 1 இடம் மாத்திரமே ஆயுதம் இருந்தது. அவரது தலையை அசைக்க முடியாதவாறு அவரது கழுத்து எலும்பு உடைந்திருந்த போதும் கூட, அவரே குறைந்த காயங்களைக் கொண்டவராக இருந்தார்.
குறிப்பிட்ட தொலைவில் இருந்து சிறிலங்கா இராணுவப் படைகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை திசை திருப்புவதாக , தனது சக தோழர்களுக்கு அவர் கூறினார். அவர் அவ்வாறு செய்த உடனே, அவர்கள் இறுதியாக உள்ள இராணுவ வேலியைக் கடந்து கடல்நீரேரியை நோக்கிச் சென்று அதனைக் கடக்க முயற்சிக்க வேண்டும்.
ஆச்சரியப்படும் வகையில், நான்கு பேரையும் காப்பாற்றுவதற்கு மட்டும் இந்த தந்திரோபாயத்தினைச் செய்யவில்லை. சாட்சி 1 தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது மாத்திரமல்லாமல், அவர் பதில் தாக்குதலில் இருந்து தப்பியதுடன், எஞ்சியிருந்த அவரது சிறுகுழுவினை வெற்றிகரமாக பின்தொடர்ந்து சென்றார்.
அந்தன்று இரவு, பொக்கணையில் தறப்பாளில் கிடந்தபடி, புதிய தகவல்களை தொலைதொடர்பு சாதனத்தில் கேட்டுக் கொண்டிருந்த சாட்சி 5, ‘காயப்பட்டவர்களை அகற்றுவதற்கும் மற்றும் மேலதிக போராளிகளை உதவி கேட்டும், பெட்டியில் இருந்து அவசர அழைப்புக்கள்’ வந்து கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தார்.
ஏப்ரல் ,4 சனி பகல் நேரம்: அரசாங்கப் படைகளின் இறுதி தாக்குதல்
இரவு நேரங்களில் நடந்த இந்த தப்பிப்புகளுக்குப் பின்னர், ஆனந்தபுரம் பெட்டிக்குள் என்ன நடந்தது என்பது பற்றிய விளக்கங்களை விடுதலைப் புலிகளில் இருந்து உயிர்தப்பிய எவருமே வழங்கவில்லை.
“த நேசன்“ என்ற பத்திரிகை ஒரு வாரத்தின் பின்னர் வெளியிட்ட ஒரு கட்டுரையில் ஏப்ரல் 4 சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சமர் இன்னும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ’தமது தவிர்க்கமுடியாத முடிவைத் தெரிந்து கொண்ட உயிர்தப்பியுள்ள புலிகள் தம்மைத்தாமே வெடிக்கவைத்து அழித்துக் கொண்டதாக’ நம்பிக்கையுடன் கூறுவது போன்ற தொனியில் தெரிவித்தது.
எவ்வாறாயினும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கைகளில், காலை விடிந்தும் பெட்டிக்குள் இருந்து வந்த விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு இன்னும் குறைவடையவில்லை எனவும், சண்டை ஞாயிற்றுக்கிழமை விடிகாலைக்கு சற்றுமுன்வரை தொடர்ந்ததாகவும் தகவல் வெளியிட்டது.
அச்சமூட்டும் வகையிலான தனது வெளியேற்றத்தினை மேற்கொள்வதற்கு முடிவெடுக்கும் முன்னர், ஆனந்தபுரம் சந்தையடியிலிருந்த பாதுகாப்பு வேலியில் சாட்சி 1 தனித்து விடப்பட்டதை கருத்தில் கொள்ளும் போது, ஏனைய போராளிகளும் இதேபோன்றே பல்வேறு பாதுகாப்பு நிலைகளை தக்க வைத்துக் கொள்ள விடப்பட்டிருந்தார்கள் என எண்ணுவது நியாயமானதாக தோன்றுகிறது.
தப்பிச் செல்ல முயற்சித்து, தோற்றுப்போனவர்களில் சிலர், தங்களிடம் எஞ்சியிருந்த சிறியளவான வெடிபொருட்களுடன் தொடர்ந்து சண்டையிடக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதற்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மிகமிகச் சிறிய அளவிலான வெடிபொருட்களே எஞ்சியிருந்தன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அடுத்து என்ன நடந்தது என்பதை கூறும் ஒரு இராணுவத் தரப்பு வட்டாரம், பெரும் எண்ணிக்கையான அரசாங்கப்படைகள் பெட்டிக்குள்ளே விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டதாகவும், கிட்டத்தட்ட 30,000 எறிகணைகளை வீசி அவர்களைத் தாக்கியதாகவும் பதிவு செய்கிறது.
‘இராணுவத்தினர் கடுமையான தாக்குதலுக்குள்ளான போதும், இராணுவத்தினர் ஒருவாறு தாக்குப்பிடித்து இறுக்கமாக நின்றமையால் எதிரிகளால் பாதுகாப்பு அரண்களை உடைக்கமுடியாமல் இருந்தது’ என “த நேசன்“ என்ற நாளிதழ், ஒட்டு மொத்தமான தற்கொலை என்ற தனது சொந்த அறிக்கைக்கு முரண்படும் விதமாக, இந்தச் சந்தர்ப்பத்தில், விடுதலைப் புலிகளை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டது.
‘இராணுவம் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு நிலைகளைத் தாக்கி இன்று காலை (ஏப்ரல் 4) விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து 130 மில்லி மீற்றர் ஆட்டிலறி ஒன்றினை வெற்றிகரமாக கைப்பற்றியதாக’ சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கை ஒன்று மேலும் புதிய தகவலை வழங்கியது. ஆனால் அதுவும் கூட முடிவாக அமையவில்லை.
ஞாயிற்றுக்கிழமை: 5 ஏப்பிரலும் அதற்குப் பின்னரும்: பெட்டியை ஆக்கிரமித்த சிறிலங்கா இராணுவப் படைகள்
இன்னும் போராடிக் கொண்டிருந்த கடைசிப் போராளிகளும் இறுதியில் 5 ஏப்ரல் அன்று காலை 4.30 மணியளவில் ‘முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டார்கள்’.
ஏப்ரல் 01 புதன்கிழமையில் இருந்து ஆனந்தபுரத்தில் 400 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக அன்றைய தினம் பிற்பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட முதலாவது மதிப்பீடுகள் தெரிவித்தன.
எதிர்பார்த்தபடியே தேடி அழிக்கும் நடவடிக்கைகள் குறித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கை, அடுத்த நாள் இந்த எண்ணிக்கையை மாற்றி 500 இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்தது. ஒரு நாளைக்குப் பின்னர், இந்த எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நன்கு தகவல் அறிந்தவராக இருந்திருப்பார் என்பதைக் குறிக்கும் பதவிநிலையைக் கொண்டிருந்த சாட்சி 1 சிறிலங்கா இராணுவம் சுற்றிவளைத்த போது, அந்தப் பெட்டிக்குள் 800 வரையான போராளிகள் அகப்பட்டு இருந்ததாகவும் அவர்களில் 100 பேர் இவரது அணியைச் சேர்ந்த புதிதாக இணைக்கப்பட்ட பெண்கள் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கேணல் கீர்த்தியுடன் நெருக்கமாக இருந்த சாட்சி 4 ஏப்ரல் 04 சனிக்கிழமை, விடிகாலையில் மொத்தமாக கிட்டத்தட்ட 150 போராளிகள் தப்பிச் செல்ல முடிந்ததாக கூறுகிறார். சரியான எண்ணிக்கைகள் தெரியவில்லை. ஆனால், கணக்கில் காட்டப்பட வேண்டிய மீதிப் போராளிகளின் அதாவது பெட்டிக்குள் அங்கேயே விடப்பட்டவர்களின் அண்ணளவான எண்ணிக்கை 650 ஆக இருக்கும்.
இது ஏப்ரல் 7இல் அறிவிக்கப்பட்ட, 625 விடுதலைப் புலிகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டது பற்றிய சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கையுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
இரண்டு தரப்புக்களும் இந்தளவு உடன்பாட்டைக் காட்டுவதைக் கருத்திற்கொண்டு, அவர்களுடைய எண்ணிக்கைகள் போதியளவுக்கு சரியாக உள்ளது என்று, எடுத்துக் கொண்டால், உண்மையில் எவ்வாறு இந்த 600 இற்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தார்கள்?
இந்தச் சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குமூலம் தெளிவுபடுத்துவதைப் போல், இறுதித் தோல்விக்கு முன்னரே சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைகளாலும், விமானப்படையின் விமானக்குண்டு தாக்குதல்களாலும், பாதுகாப்பு முன்னரங்க நிலைகளில் நெருக்கமாக இடம்பெற்ற மோதல்களாலும் அல்லது தோல்வியில் முடிவடைந்த தப்பிச் செல்லும் முயற்சிகளின் போதும் பல விடுதலைப் புலிகள் போராளிகள் இறந்திருந்தார்கள்.
இதனைவிட, எஞ்சியிருந்த போராளிகளில் சிலர் கடைசி 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.
ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமைக்கான பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவு வெற்றி பெற்றதற்கு சற்றுப் பின்னர், புதுக்குடியிருப்புக்கு கிழக்கேயுள்ள போர் முனைக்கு முன்னாலுள்ள பகுதியில் 140 இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்கள் பரவிக்கிடப்பதை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டது.
அதேவேளை, இன்னுமொரு பகுதியில் போர்முனை அறிக்கைகளை மேற்கோள்காட்டி, ‘53 ஆவது படைப்பிரிவின் காலாட்படையினர் போர் வலயத்தில் 210 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் பரவிக்கிடப்பதை அவதானித்துள்ளதாக உறுதி செய்துள்ளார்கள்.’
260 இற்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் சிதறிக்கிடப்பதை உடனடியாக கண்டுபிடித்தாலும், ஆரம்ப எண்ணிக்கையான 625 – 650 இல் இருந்து கணக்குக்கு காட்டப்பட வேண்டியவர்களின் மிகுதி எண்ணிக்கை இன்னும் உயர்வாகவே உள்ளது. அவர்கள் எங்கே?
அந்த 600இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையின் பெரும்பாலானவர்கள் கணினி நிலையத்தில் விடப்பட்டுச் செல்லப்பட்ட கடுமையாகக் காயப்பட்ட போராளிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதே இதற்கான பதிலாக இருக்க வேண்டும்.
கேணல் கீர்த்தி வெளியேறுவதற்கான உரையை ஆற்றும் போது காயப்பட்ட அந்தக் போராளிகள், தம்மைத் தாமே கொல்வதற்கு ஏதாவது வழங்கப்பட வேண்டும் எனக் கெஞ்சினார்கள் என சாட்சி 4 கூறுகிறார். சாட்சி 4 இனை, அவரது சயனைட் வில்லையை வழங்குமாறு கெஞ்சினார்கள். ஆனால் இந்தக் கெஞ்சுதல்கள் வீணாகின.
இதற்கிடையில், 20 பேரைக் கொண்ட அவரது இறுதி முயற்சியாக தப்பிச் செல்லும் அணிக்கு ஆட்களை ஒன்று சேர்த்தபோது, சில மணித்தியாலங்களுக்கு முன்னர், இதே காயப்பட்ட போராளிகளைப் பார்த்த சாட்சி 1 ‘நான் அந்த இடத்தை விட்டுச் சென்ற போது காயமடைந்தவர்கள் உயிருடன் இருந்தார்கள்’ என எஞ்சியிருந்தவர்கள் பற்றி பதிவு செய்கிறார்.
அவர்களிடம் எந்த துப்பாக்கிகளோ அல்லது வெடிமருந்துகளோ அல்லது சயனைட்டோ இருக்கவில்லை’. மீண்டும் இங்கே உட்கருத்து என்னவென்றால் இந்த ஆண்கள், பெண்களிடம் ஏதாவது ஆயுதங்கள் இருந்திருந்தால் அவர்கள் அவற்றை தம்மீதே பயன்படுத்தியிருப்பார்கள். ஆகவே அவர்கள் பெரியளவில் காயப்பட்டு அசைய முடியாதவர்களாக மட்டும் அல்லாமல், முற்றிலும் தற்காப்பு அற்றவர்களாகவும் அத்துடன் உயிருடனும் இருந்துள்ளார்கள்.
கிடைக்கக் கூடியதாகவுள்ள பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கைகள் மற்றும் அறிக்கைகள் ஏப்ரல் 5 விடிகாலையளவில் ஆனந்தபுரத்தின் இறுதி சதுரக் கிலோ மீற்றர் பகுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர், ஒரே இடத்தில் ஒன்றாக நெருக்கி வைக்கப்பட்டிருந்த கடுமையாகக் காயமடைந்த 300 இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் போராளிகளைக் கண்டுபிடித்தது பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.
எனவே எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தின் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் 600 இற்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கிடைத்தன?
இதே எண்ணிக்கையானவர்களைத் தான் விட்டு விட்டு வந்ததாக விடுதலைப் புலிகளின் சாட்சிகள் ஒத்துக் கொள்கின்றன. சிறிலங்கா இராணுவம் வெற்றி பெற்றவர்களாக உள்ளே சென்ற பின்னர், தாம் தோற்கடித்தவர்களாக கூறும் போராளிகளில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேரை, உடனடியான ஒரு ஒட்டுமொத்த படுகொலைக்கு உட்படுத்துவதே இந்த எண்ணிக்கைகள் சரியானதாக இருக்கச் செய்ய சாத்தியமான ஒரே வழியாகும்.
விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் இதுவே நிச்சயமாக நடந்திருக்கும் என்பதை விளங்கிக் கொண்டுள்ளார்கள். கணினி நிலையத்தின் கட்டிடத்திற்குள் விடப்பட்ட 300 இற்கும் மேற்பட்டவர்களில் 30 இற்கும் மேற்பட்டவர்களை தனக்கு தனிப்பட்ட ரீதியாகத் தெரியும் என சாட்சி 4 பதிவு செய்கிறார்.
அவர்களுடன் பயிற்சி பெற்றுக் கொண்டதுடன், அவர்களது குடும்பங்களையும் தெரியும், அத்துடன் ‘அவர்கள் ஒரு போதுமே திரும்பி வரவில்லை என எனக்குத் தெரியும்’ என அவர் கூறுகின்றார்.
‘அவர்கள் அனைவரையும் கொல்லுவார்கள் என நாங்கள் ஒரு போதும் நினைக்கவில்லை’, ஆனால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது தான் இதற்கான ஒரே ஒரு விளக்கம்’. என அவர் மேலும் கூறுகிறார். ‘எவரும் உயிர் தப்பியமாக நான் அறியவே இல்லை’ என சாட்சி1 தெரிவிக்கிறார்,
அதேவேளையில், ஆனந்தபுரத்திற்குள் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மருத்துவ இணைப்பாளர் ஒருவர், தப்பி வந்தவர்கள் விட்டு விட்டு வரும்போது, உயிருடன் இருந்த காயப்பட்ட எவருமே மீண்டும் கண்ணில் படவில்லை, அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனவே நம்பப்படுகிறது’ என கூறுகிறார்.
‘நாங்கள் விட்டு விட்டு வந்த எஞ்சியிருந்த காயப்பட்ட போராளிகள் உயிருடன் எரிக்கப்பட்டதாக தான் பின்னர் அறிந்து கொண்டதாக’ சாட்சி 4 மேலும் தெரிவிக்கிறார்.
2009 ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் முதன்மைச் செய்தித் தொகுப்பில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட காணொளிப் பதிவு, பாரிய தீயின் காரணமாக இன்னும் புகை வந்த வண்ணம் கருகிய நிலையில் காணப்படும் கணினி நிலையத்தின் பிரதான கட்டிடத்தினை காட்டுகிறது.
அதற்குள்ளே விட்டுச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இதுமட்டும் உறுதிப்படுத்துவதாக இல்லாவிட்டாலும், இந்தக் காணொளியில் பேசும் செய்தியாளர் ‘புதுக்குடியிருப்புக்கான இறுதிச் சமரின் போது பெரும் எண்ணிக்கையான விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது இங்குதான்’ எனக் கூறுகிறார்.
கொங்கிறீட்டினால் ஆன கூரையைக் கொண்டுள்ள இந்தக் கட்டடத்திற்கு அருகே ஒரு இடத்தில் அகப்படச் செய்யும் வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையால் பயங்கரவாதிகளால் தப்பிச் செல்ல முடியவில்லை. இராணுவம் பயங்கரவாதிகளை துரத்திச் சென்று அழிக்க முடிந்தது’.
ஐந்து நாட்களின் பின்னர், போராளிகள் பதுங்கியிருந்த இரண்டு சிறிய கட்டிடங்களுக்குள், 40 இறந்த உடல்களைக் கருகிய நிலையில் கண்டெடுத்தாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை, ஆய்வாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் வெளியிட்டார்.
இந்த இரண்டு விளக்கங்களும் மிகவும் இருண்ட ஒரு உண்மைமையே சுட்டிக்காட்டுகின்றன.
இவர்கள் பதுங்கியிருந்து சண்டையில் ஈடுபட்ட போராளிகளும் இல்லை அல்லது அவர்களில் வெறுமனவே 40 பேர் மட்டும் இருக்கவுமில்லை. இதன் பின்னர் நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்ட இறந்த உடல்களைக் காட்டும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், இறந்த உடல்களில் பல ‘மோசமான நிலையில்’ இருந்திருப்பதைக் காட்டின என்பதையும் ஜெயராஜ் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் பாதுகாப்பு தரப்பு ‘இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்திருந்தாலும் கூட’, இதைத் தொடர்ந்து ‘அவரசமாக’ இந்த உடல்கள் தகனம் செய்யப்பட்டமை இந்த உடல்கள் மீது இரசாயன ஆயுதங்களைக் கொண்டு நடத்திய தாக்குதல்களுக்கான ஆதாரங்களை மறைப்பதற்கு சிறிலங்கா இராணுவம் விரும்பியது என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கணினி நிலையத்தில் இறுதியாக நடந்த சம்பவங்கள் பற்றிய விடுதலைப் புலிகளின் பதிவுகளில், ஒரு பெயர் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.
தளபதிகளான பானு மற்றும் கீர்த்தி ஆகியோருடன் காயமடைந்தும் நடக்கக் கூடியவர்களில் ஒருவராக தப்பி வந்த சாட்சி 6, காயமடைந்த போராளிகளை ‘தனது நோயாளிகளை விட்டுச் செல்ல மறுத்த’ சத்தியா என்றழைக்கப்பட்ட ஒரு மருத்துவரின் பராமரிப்பில் விட்டு விட்டு வந்ததாகப் பதிவு செய்கிறார்.
களமருத்துவரான சாட்சி 7, தனது எட்டுப் பேரைக் கொண்ட தனது அணியில் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் உயிருடன் பிடிபட்டதாகவும் கூறிய போது, அவரும் மருத்துவர் சத்தியாவை பற்றிக் குறிப்பிடுகிறார்.
சிறிலங்கா இராணுவம் மருத்துவர் சத்தியாவைப் பிடித்ததாகவும், விடுதலைப் புலிகளின் பல்வேறு இறந்த உடல்களை அடையாளங் காண்பதற்குமுதலில் அவரைப் பயன்படுத்திய போதிலும், பின்னர் அவர் ‘காணாமற் போய்விட்டார்’ என சாட்சி 7 குறிப்பிடுகின்றார்.
பெட்டிக்குள்ளே இருந்த மருத்துவப் போராளிகளுடன் ஏப்ரல் 3 வரை தொலைதொடர்புக் கருவியில் தொடர்பை வைத்திருந்த மருத்துவ வழங்கல் பணியில் ஈடுபட்ட போராளி, ‘விடுதலைப் புலிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவரான சத்தியா சமரில் கொல்லப்பட்டதாக’ தெரிவிக்கின்றார்.
அவர் முதலில் விடுதலைப் புலிகளின் தளபதிகளை அடையாளங் காட்டப் பயன்படுத்தப்பட்டாரோ இல்லையோ, ஏப்ரல் 6க்கான சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கையில் 600 இற்கும் மேற்பட்ட இறந்த உடல்களில், ‘விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களும்’ இருந்தார்கள் எனக் குறிப்பிட்டு, தீபன், றூபன், நாகேஸ், கடாபி, விதுசா, துர்க்கா மற்றும் கமலினி என அவர்களது பெயர்களைத் தனது சொந்த உச்சரிப்பில் பட்டியலிட்டிருந்தது.
இவற்றில் சில பெயர்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் நேரடியாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பற்றிய விபரங்களை வழங்கிய ஏழு சாட்சிகள் குறிப்பிடும் ஏனைய மூத்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் கேணல்களான மணிவண்ணன், அன்ரன், அமுதா மற்றும் ஊடகப் பிரிவினைச் சேர்ந்த சேரலாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
எல்லாப் பக்கங்களிலும் பார்க்கும் போது சாட்சி 4 கூறுவதைப் போல் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட ‘முக்கியமான பின்னடைவாக’ ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமர் உள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்தவாரம், விடுதலைப் புலிகளுக்கு மிகமோசமான தோல்வியை ஏற்படுத்தும் வகையில், ஒரு தனிச் சமரில் மிகக் கூடுதலான எண்ணிக்கையான அதன் உறுப்பினர்கள் பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டார்கள் என “த நேசன்“ எனும் செய்தித்தாள் பெருமிதம் கூறியது.
ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர் பல தளபதிகள் இறந்தமையால் விடுதலைப் புலிகளின் போரிடும் சக்தி என்பது உண்மையில் சிதைவடைந்து விட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் போர் அனுபவம் வாய்ந்த போராளி சாட்சி 2 உம் கிட்டத்தட்ட இதையே கூறுகிறார்.
காயமடைந்து பெட்டி மூடப்படுவதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சாட்சி 5 இந்தச் சமரின் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணைகளின் கையிருப்பு தீர்ந்து விட்டது என போராளிகள் மத்தியில் ‘கதை அடிபட்டதாக’ கூறுகிறார்.
அதாவது மீள்விநியோகத்திற்கான அழைப்புகளுக்கு ஒரு போதும் பதில் வழங்கப்படுவதில்லை. அத்துடன் பெட்டியினுள் விடுதலைப் புலிகளிடம் இருந்த இறுதிக் கையிருப்பில், கிட்டத்தட்ட தனது 90 சதவீதமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அது இழந்து விட்டது அல்லது கைவிட்டு வந்துவிட்டது என அவர் மதிப்பிடுகின்றார்.
இன்னுமொரு சாட்சியாளர் கூறுகையில், ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் ஒரு வலுவிழந்த படையாக இருந்ததா என்று கேட்டால், ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் கூடுதலான தனது அனுபவமுள்ள தளபதிகளையும், தாக்குதல்த் திறனையும் ஆளணியையும் இழந்து விட்டது என்று கூறமுடியும்.
கடுமையான பட்டினியில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல் வரையான பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள எஞ்சியுள்ள போராளிகள் மத்தியில் குழப்பமும் சோர்வும் தற்போது தலைதூக்கத் தொடங்கியுள்ளது, சாதாரண பிரச்சினைகள் போல் தோன்றினாலும், தமது தொலைதொடர்புக் கருவி மூலம் தொடர்பு கொள்ள உதவியிருக்க கூடிய மின்கலங்களின் இருப்பு முடிவடைந்து செல்கின்றமை போன்றன முக்கிய பிரச்சினைகளாக இருந்தன.
உள்நாட்டுப் போரின் முடிவு
ஏப்ரல் 05இல் ஆனந்தபுரம் சமரில் தோல்வியடைந்தமை விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தெளிவாக சமிக்கை காட்டியிருந்தாலும், உள்நாட்டுப் போர் உடனடியாகவே முடிவுக்கு வரவில்லை. அடுத்து வந்த ஆறு வாரங்கள் அரசாங்கப் படைகள் ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த மணல் முனைப்பகுதி மீது தரை மற்றும் வான் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டார்கள்.
உண்மையில் பாதுகாப்பு வலயங்கள் மீதும் இந்த மணல்முனைப் பகுதியில் ஆங்காங்கே இருந்த மருத்துவ நிலையங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி அங்கிருந்தவர்களுக்கு அதாவது பொதுமக்களுக்கும் அல்லது பொதுமக்கள் அல்லாதவர்களுக்கும் பரவலான காயங்களையும் பல மரணங்களையும் ஏற்படுத்தினார்கள் என வேறு இடங்களில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்ந்தும் எதிர்ப்பைக் காட்டி வந்தார், ஆனால் மே 18 இல் அவர் கொல்லப்பட்டு விட்டதாக, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, இறுதியில் உள்நாட்டுப் போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஆனந்தபுர சமருக்கு சில நாட்களின் பின்னர், மீண்டும் விரிவான வகையில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதைப் போல, ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுங்கிய வழிகளின் ஊடாக, அந்த மணல்முனையை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த பாதிக்கப்பட்ட மற்றும் பட்டினியால் வாடிக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு கண்மூடித்தனமான கொலைகளை புரிந்தது.
உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் போராளிகள் தமது சீருடைகள், இராணுவத் தகடுகள் மற்றும் அடையாளங்களை களைந்து விட்டு ஏனைய மக்களும் கலப்பதற்கு முயன்றார்கள், ஆனாலும் ஒரு பொதுமகனைப் போல் தோற்றமளிப்பது, எந்த வகையிலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக இருக்கவில்லை.
மேலே வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் பற்றிய விபரங்களை வழங்கிய ஆனந்தபுரச் சமரில் நேரடியாக உயிர்தப்பியவர்களைப் பொறுத்தவரை, அந்த இறுதிச் சண்டையும், அடுத்த ஆறு வாரங்களுக்கு மேலாக சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்களும், உள்நாட்டுப் போரின் இறுதியான உளப்பாதிப்பாக இருக்கமாட்டாது.
பல விடுதலைப் புலிகள் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகள் என மக்கள் நினைத்தவர்கள், பொதுமக்களின் பெரிய வரிசைகளில் இருந்து இழுத்தெடுக்கப்பட்டு பிடிக்கப்பட்ட இடத்தில் அல்லது சரணடைந்த இடத்தில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
ஏனையவர்கள் தன்னிச்சையான முறையில் தடுத்து வைக்கப்பட்டு நீடித்த சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அத்துடன் அவர்கள் தப்பிச் செல்ல முன்னர் அல்லது இறுதியில் விடுவிக்கப்பட முன்னர் எந்த வித வழக்கு விசாரணைகளும் இன்றி மிக அடிப்படை வசதிகளைக் கொண்ட சிறைமுகாம்களில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டார்கள்.
மிகுதி நாளை தொடரும்.


