பெர்லின் வரும் சிறிலங்கா அதிபரை ஜெர்மனி அதிபர் சந்திக்கமாட்டார்
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும், போர்க்கால பொறுப்புக்கூறல் விவகாரங்களை தீர்ப்பதற்கும் சிறிலங்கா அதிபரிடம் ஜெர்மனி வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் 11ஆம் திகதி ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இவை குறித்து ஜெர்மனியினால் வலியுறுத்தப்படும் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு, ஏனைய மேற்கு நாடுகளுடன் சேர்ந்து, ஜெர்மனி நீண்ட காலமாக சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜூன் 11ஆம் திகதி ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் போரிஸ் பிஸ்ரோரியஸ் (Boris Pistorius), பாதுகாப்பு அமைச்சர் கத்தரினா ரீச் (Katherina Reiche) ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதுவரையில் இந்த இரண்டு சந்திப்புகளும் மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சர்களுடனான சந்திப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தப் பயணத்தின் போது, ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, ஜெர்மனியின் கூட்டாட்சித் தலைவர் பிராங்க் வோல்டர் ஸ்டெய்ன்மியரைச் (Frank Walter Steinmeier) சந்திப்பார்.
ஜெர்மனியில், அனைத்து நிர்வாக அதிகாரங்களும், அதிபர் பிரெட்ரிக் மெர்சிடமே உள்ளது.