செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய மனித புதைகுழிக்கான சாத்தியம்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் தோண்டிய போது, மனித என்பு எச்சங்கள் பல மீட்கப்பட்டன.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் தொடக்கம், குறித்த பகுதியில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று, மூன்றடி ஆழத்தில் முழுமையான மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றும், மண்டையோடு, ஒரு கை என்புகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாடு சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், 1996, 1997ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், 600 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
அவர்கள், படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில், இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடர்ந்து புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதும், தொடர்ச்சியான மழை காரணமாக அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.