சிறிலங்கா கடற்படையின் திறன்களை வலுப்படுத்துவது குறித்து பேச்சு
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, சவூதி அரேபிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்-கிரிபியுடன் உயர் மட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற உலக பாதுகாப்பு கண்காட்சி 2026 இன் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
சிறிலங்கா போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
இந்தப் பகிரப்பட்ட சவால்களை அங்கீகரித்து, இரு தரப்பினரும் ஒத்துழைப்பின் உறுதியான பகுதிகளை அடையாளம் காணும் வகையில் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
சிறிய இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட முன்னேற்றகரமான ராடர் தொழில்நுட்பங்கள் மற்றும் வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்த ட்ரோன் திறன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு, சிறிலங்கா பிரதிநிதிகள் சவூதியின் உதவியை நாடியுள்ளனர்.
சிறிலங்கா கடற்படைக் கப்பல்களில் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நல்லெண்ண வருகைகளின் போது, சிறிலங்கா துறைமுகங்களில் கடற்படைப் பயிற்சிகள் மற்றும் கடற்படை மதிப்பாய்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
நவீன அச்சுறுத்தல்களின் வளர்ந்து வரும் தன்மையை உணர்ந்து, டிஜிட்டல் மற்றும் கலப்பு சவால்களை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படைக்குள் சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆதரவு வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நிறுவன உறவுகளை வலுப்படுத்தவும் எதிர்கால ஒத்துழைப்புக்கான தொடர் நடவடிக்கைகளை அடையாளம் காணவும் முறையான பணியாளர் நிலை பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர பயிற்சி வாய்ப்புகளைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
