மேலும்

ஒருவராய் இல்லாமல்  ஒன்றாய் எழுவோம்!

மே 18.

பல்லாயிரம் தமிழர்களின் குருதி குடித்த போர், ஓய்வுக்கு வந்த நாள்.

வன்னியில் சுழன்றடித்த, சிங்களப் பேரினவாதச் சுழல் தமிழர்களின் உயிர்குடித்து, களைத்துப் போன நாள்.

சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் ஒருமுறை வெற்றிக் கொக்கரிப்பில் திளைத்து போன நாள்.

உலகம் முழுதும் தமிழர்கள் நம்பிக்கை அனைத்தையும் தொலைத்து விட்டு, நடைப்பினமாய் மாறிய நாள்.

ஊர் கூடி இழுத்த தேர், பேரூழித் தாண்டவத்தில் சிக்கி, வடம் அறுந்து நின்ற நாள்.

16 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமாக, சிங்கள பௌத்த பேரினவாதிகளால் சர்வதேசத்தின் முன் அடையாளப்படுத்தப்பட்டது இதேநாளில் தான்.

தமிழினத்தின் வீழ்ச்சியை, தமிழனின் பணத்தைப் பறித்தெடுத்து, வெடி கொளுத்தி சிங்கள பேரினவாதிகள் கொண்டாடியதும், பால் சோறு பொங்கி பெருமகிழ்வுற்றதும் இதே நாளில் தான்.

இப்படி ஒரு நாள், இனிமேல் தமிழர் வாழ்வில் மீண்டும் வரவே கூடாது. என எண்ணுகின்ற  ஒருநாள் 2009 மே 18.

அன்று தான், தமிழர் தேசம் சிங்கள படைகளிடம் சிக்கிச் சின்னாபின்னமானது.

தமிழர் வாழ்வு சூனியமானது.  தமிழரின் தலைவிதி சிங்களத்தின் பிடியில் சிக்கிக்கொண்டது.

இந்த வரலாற்றுக் கொடுந்துயரில் இருந்து இன்றுவரை மீளவே முடியாமல் தவிக்கிறது தமிழினம்.

ஒரு குழந்தை பிறந்து, கட்டிளம்  பருவத்தை எட்ட 16 ஆண்டுகள் போதும்.

ஆனால், இந்த 16 ஆண்டுகளில், ஈழத்தமிழ் தேசியஇனம் தன் சுயத்தை இழந்திருக்கிறது. அடையாளங்களைப் பறி கொடுத்திருக்கிறது. நிலங்களையும், இழந்து நிற்கிறது.

தமிழினத்தின் சுயமரியாதையும் சுயநிர்ணய உரிமையும் கேள்விக்குட்பட்டு நிற்கின்றன.

ஒழுக்க விழுமியங்களும், கலாசார அடையாளங்களும் கூட காணாமல் போகின்ற ஆபத்தில் சிக்கியிருக்கின்றன.

இதனால் தான், அப்படியொரு நாள், இனியொரு போதும் வந்து விடக்கூடாது என்ற கலக்கம், எல்லோரிடமும் இருக்கிறது.

2009 மே 18 இல், தமிழினம் பறிகொடுத்தவை ஏராளம்.

இழக்கக் கூடாதவை எல்லாவற்றையும் இழந்தோம்.

இனி கிடைக்கவே முடியாத பொக்கிசங்கள் அனைத்தையும் தொலைத்தோம்.

அதனால் தான்,  16 ஆண்டுகளாகியும், மீண்டெழ முடியாச் சகதியில் சிக்கிப் போயிருக்கிறது தமிழினம்.

விழ விழ எழுவோம் என எழுந்து நின்றவர்கள் நாம்.

ஆனால், நாம் எழ எழ விழுத்தப்பட்டோம். எழும்ப முடியாமல் சாய்க்கப்பட்டோம்.

எதிரிகளும் துரோகிகளும், கூட நின்றே குழிபறிக்கும் கயவர்களும், கோடரிக்காம்புகளும், எழவே முடியாமல் எம்மை வீழ்த்துவதில் கண்ணாயிருந்தார்கள்.

அவர்களின் சதிகளுக்குள் சிக்கி, தமிழ் தேசிய இனம் பெருந்துயரை,  பேரிழப்பை, கொடும் துன்பங்களையெல்லாம் எதிர்கொண்டு விட்டது.

காற்று எப்போதும் ஒரு பக்கம் வீசுவதில்லை.

வரலாறு எப்போதும் ஒரு பக்கம் மட்டும் எழுதப்படுவதும் இல்லை,  அது மாறும், மாற்றப்படும்.

அதுதான் இயற்கையின் நியதி .

மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட பரம்பரைகள் எதுவுமே இன்று மிச்சமாக இல்லை. அவர்களின் கைகளில் அதிகாரமும் இல்லை.

அவை மாறிக்கொண்டே இருந்தன. மாறிக்கொண்டே இருக்கின்றன.

அதுபோல, 16 ஆண்டுகளாக மாற்றம் காணாமல் இருள் சூழ்ந்து கிடக்கும் தமிழர் தேசமும்,  விடிவைக் காணும்.

துயர்களில் இருந்து மீளும். வரலாறு அதனை பேசும்.

அந்தக் காலம் விரைவில் கைகூடும் என நம்புவோம்.

தமிழர்கள், குட்ட குட்ட குறைபவர்கள் இல்லை.

தமிழர்களை குட்டிக் கொண்டே இருப்பது புத்திசாலித்தனமும் இல்லை.

சிங்கள பௌத்த பேரினவாதம் இதனைப் புரிந்து கொண்டால் தப்பிக் கொள்ளும்.

தமிழின அழிப்பு நினைவு நாளில், மீண்டெழுவதற்கான சபதத்தை ஏற்போம்.

ஒருவராய் இல்லாமல், ஒவ்வொருவராயில்லாமல், ஒன்றாய் எழுவோம்!

புதினப்பலகை குழுமத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *