மேலும்

கோத்தா படுகொலை சதி – செய்தி உண்மையில்லை

கோத்தாபய ராஜபக்சவையோ, அல்லது மகிந்த ராஜபக்சவையோ படுகொலை செய்யும் சதி தொடர்பாக, தடுப்புக்காவலில் உள்ள பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிவரூபன் வாக்குமூலம் அளிக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொட்ர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிவரூபனிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளில், கோத்தாபய ராஜபக்ச மற்றும் சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய புலம்பெயர் தமிழர்கள் பாதாள உலக குழுவினரை பணியில் அமர்த்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளதாக பல ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த செய்திகளை மறுத்துள்ள சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர, அவ்வாறான எந்த தகவலையும், மருத்துவர் சிவரூபன் வெளியிடவில்லை என்று தெரிவித்தார்.

அதேவேளை, மருத்துவர் சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில், இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சின்னமணி டனீஸ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நிஜிலன் ஆகிய நால்வரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ரி நிர்மலராஜ், ரூபன் ஜேசுதாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் விசாரணை நடத்த கொழும்பில் இருந்து அதகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *