மேலும்

எஸ்பி.திசநாயக்க பதவி நீக்கம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ்பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். நேற்று  நடந்த கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், எஸ்.பி.திசநாயக்கவுக்குப் பதிலாக, லசந்த அழகியவன்ன, கட்சியின் புதிய பொருளாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் சுதந்திரக் கட்சியின் பேச்சாளராக இருந்த மகிந்த சமரசிங்கவுக்குப் பதிலாக, வீரகுமார திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மூத்த உதவித் தலைவர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், கட்சியின் முடிவை மீறிப் பங்கேற்றதற்காகவே, பொருளாளர் பதவியில் இருந்து எஸ்பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும், நேற்றைய மத்திய குழு கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை.

அதேவேளை, நேற்றைய கூட்டத்தில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பொதுஜன பெரமுனவுடன் இன்று முக்கியமான பேச்சுக்களை நடத்தவுள்ள நிலையில், அந்தக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற எஸ்பி.திசநாயக்கவை பொருளாளர் பதவியில் இருந்து சுதந்திரக் கட்சி நீக்கியிருப்பது முக்கியமான விடயமாக கவனிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *