மேலும்

இராணுவத் தளபதி நியமனம் – இழுபறியின் உச்சம்

கடுமையான இழுபறிகளுக்குப் பின்னர், இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இராணுவத் தளபதி ஒருவரின் நியமன விடயத்தில், இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் எதிர்கொண்ட மிகநெருக்கடியான தருணம் இதுவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு முன்னரும் இராணுவத் தளபதி நியமனங்களின் போது இழுபறிகள், முரண்பாடுகள், குழிபறிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

சேவை மூப்பின் அடிப்படையில் முன்னால் இருந்த திறமைமிக்க பல அதிகாரிகள் வாய்ப்பு அளிக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். சேவைமூப்பில், பின்வரிசையில் இருந்தவர்கள், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில், தளபதி ஆகியிருக்கிறார்கள்.

எனினும், எந்தவொரு இராணுவத் தளபதி நியமனத்தின் போதும், புற அழுத்தங்களை ஜனாதிபதியோ, அரசாங்கமோ இதுவரை எதிர்கொண்டதில்லை.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தான், கடைசி நேரம் வரை முடிவெடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், எடுக்கப்பட்டது இப்போது தான் என்றில்லை.  அந்த முடிவு, ஜூலை 14ஆம் திகதியுடன் ஓய்வுபெறவிருந்த அவருக்கு, ஆறு மாத சேவை நீடிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியபோதே, எடுக்கப்பட்டு விட்டது.

ஆனால், சர்வதேச அழுத்தங்களைச் சமாளித்து, அவருக்கு இந்த நியமனத்தை அளிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அரசியல் சூழல் மாற்றங்களும், மேற்குலகுடனான உறவுகளில் ஏற்பட்டு வந்த விரிசல்களும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவை எடுப்பதற்கு ஒரு காரணியாக இருந்தது.

அந்த முடிவை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான உள்ளக நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்த நியமனம் நடக்கப் போவதை அறிந்து கொண்ட கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் பலரும், அதனை தடுக்க முயன்றனர். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கத் தவறவில்லை.

ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் ஓய்வு அல்லது சேவை நீடிப்பு மற்றும் புதிய இராணுவத் தளபதி குறித்த நியமனம் குறித்து அறிவிப்பு, கடந்த வாரத்துக்கு முந்திய வாரமே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாகவே எல்லாம் நடந்தன.

ஓகஸ்ட் 17ஆம் திகதியுடன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஓய்வுபெற்று விட்ட போதும், அவருக்கான பிரியாவிடை இராணுவத் தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்படவில்லை. அவர் சேவைநீடிப்பில் இருக்கிறாரா ஓய்வு பெற்று விட்டாரா என்றுஅறிவிக்கப்படவும் இல்லை.

இதனால், இராணுவத் தளபதி ஒருவர் இல்லாத குழப்பம், கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை மதியம் வரை நீடித்தது, 18ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், புதிய இராணுவத் தளபதிக்கான நியமனம் 19ஆம் திகதி மதியம் தான் ஜனாதிபதி செயலகத்தில், வைத்து, வழங்கப்பட்டது.

இதனால், 20ஆம் திகதியே ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு பிரியாவிடை அளித்து, வழியனுப்பும் நிகழ்வும், இராணுவத் தளபதிக்குரிய அடையாளச் சின்னமான ‘பிரம்பு’ கையளிக்கும் நிகழ்வும் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றன.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னரே எடுத்து விட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டதே இந்த இழுபறிக்குக் காரணம்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த நியமனத்தை எதிர்த்தனர். அதன் விளைவாக, இலங்கையுடனான இராணுவ உறவுகள் பாதிக்கப்படும்,என்று எச்சரித்தனர். இதனால் தான், ஜனாதிபதியினால் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கடைசியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான முடிவை எடுத்தபோது, அதற்கு கடுமையான எதிர்வினைகள் சர்வதேச மட்டத்தில் இருந்து வந்தது.

இந்த நியமனத்துக்கு  எதிர்ப்புகள், கண்டனங்கள், எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனால் இந்தளவுக்கு எதிர்ப்புகள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு எதற்காக சர்வதேச அளவில்- குறிப்பாக மேற்குலக மட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று- லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள்.

இரண்டு- அவர், வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பது.

இறுதிக்கட்டப் போரில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்களிப்பு அபரிமிதமானது. அவரது போர்த்திறன், படை நிர்வாக ஆளுமை என்பன கேள்விக்கிடமற்றது.

1984ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த அவர், இலங்கை இராணுவம் முதன்முதலாக பெயரிட்டு நடத்திய ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையில் இருந்து, கடைசியாக மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை- எல்லா முக்கியமான சண்டைகளிலும் பங்கேற்றவர்.

இறுதிக்கட்டப் போரில், மன்னாரில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை- 58 ஆவது டிவிசனை வழிநடத்தியவர்.

இந்தப் போரின்போது தான், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் மீறினார் என்று ஐ.நாவினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று இவர் குற்றம்சாட்டப்பட்டு வருகிறார்.

இவர், மீதான குற்றச்சாட்டுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று ஐ.நா விசாரணை அறிக்கைகள் கூறியிருந்தன. இவ்வாறான ஒருவர், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தான் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், பொறுப்புக்கூறல் முயற்சிகள் தடைப்படும், கடந்த நான்கரை ஆண்டுகளாக இராணுவத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மறுசீரமைப்புகள் முடங்கும், நல்லிணக்க செயற்திட்டங்கள் பாதிக்கப்படும், இவற்றுக்கு அப்பால், குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தளபதியாகும் போது, பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடைவர், அது ஒட்டுமொத்த நல்லிணக்க முயற்சிகளையும் தடம் புரளச் செய்யும் என்பதே சர்வதேச கரிசனையாகும்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த விடயத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களும் போதியளவு கொடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்து, போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவரை துணிச்சலுடன், இராணுவத் தளபதியாக நியமித்ததை ஐ.நாவினாலும் சரி, மேற்குலகினாலும் சரி பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெற்றுக் கொண்ட காலஅவகாசத்துக்கு அடுத்த ஆண்டு பொறுப்புச் சொல்ல வேண்டியுள்ள நிலையில் உள்ள அரசாங்கம், அதிலிருந்து நழுவி, போர்க்குற்றம்சாட்டப்பட்டவர்களை முன்னுரிமைப்படுத்துவது, சர்வதேசத்துக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்பது ஐ.நா தரப்பின் நிலைப்பாடு.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ வேறு விதமாகச் சிந்திக்கிறார்.

அவர், 2015இல் ஆட்சிக்கு வந்தபோது இருந்த மனோநிலையில் இப்போது இல்லை. அப்போது அவர் பலரையும் சமாளிக்க வேண்டியிருந்தது. மனதுக்குப் பிடிக்காதவற்றையும் செய்ய வேண்டியிருந்தது.

அத்தகைய சூழலினால், பல படை அதிகாரிகள் விலகிச் செல்ல நேரிட்டது, பாதுகாப்புதுறையில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது அவர் அதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு நடந்து கொண்டிருக்கிறார். தான் பதவியேற்கும் போது, எவ்வாறான நிலையில் நாடு இருந்ததோ அதேநிலையில் கொண்டு போய் ஒப்படைக்க முனைகிறார்.

சிங்கள மக்களின் மனநிலை, விருப்புகளை ஒட்டியே அவர் முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார். லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனமும் அவ்வாறானதொரு முடிவு தான்.

இந்த நியமனம் குறித்து அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அவர் அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏனென்றால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் போது, பொறுப்புவாய்ந்த இடத்தில் அவர் இருக்கப் போவதில்லை.

எனவே, கண்ணை மூடிக் கொண்டு அவர், முடிவை எடுத்து விட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுக்க வைப்பதில், பல்வேறு தரப்புகள் செல்வாக்குச் செலுத்தியதாக பேசப்படுகிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் நியமிப்பதில், ஜனாதிபதியின் மகள் சதுரிக்கா சிறிசேனவும்  செல்வாக்குச் செலுத்தினார் என்றும், அவருக்காக ஆதரவு தேடினார் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் முடிவுகளில் சதுரிக்கா சிறிசேன செல்வாக்குச் செலுத்துவதாக முன்னரே பலமுறை தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதைவிட, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டும் எனக் கோரி சமூக வலைத்தளங்களின் மூலமும் கடுமையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னால் கோத்தாபய ராஜபக்ச – மகிந்த தரப்பு இருந்திருக்கலாம்.

ஏனென்றால், இந்த நியமனத்தில் மகிந்த தரப்பின் செல்வாக்கு இருந்ததாக வலுவான சந்தேகங்கள் உள்ளன.

காரணம், கோத்தாபய ராஜபக்சவும் சவேந்திர சில்வாவும் மிக நெருக்கமானவர்கள். போர்க்காலத்தில் மிகநெருக்கமாக இணைந்து செயற்பட்டவர்கள். ஒருவரின் இரகசியத்தை மற்றவர் அறிந்திருக்கும் அளவுக்கு இந்த நெருக்கம் இருந்தது.

இறுதிப்போரின் போது கோத்தாபய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் கீழ் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டார், அவரது உத்தரவுகளை நடைமுறைப்படுத்தினார் என முன்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே, இருவரும் 1ஆவது கஜபா ரெஜிமென்ட்டில் பணியாற்றிவர்கள். எனவே லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாவதை, ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் கோத்தாபய ராஜபக்ச நிச்சயம் விரும்புவார்.

அதற்காகவே, இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு கோத்தாபய ராஜபக்சவின் விருப்பத்தை – எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அது ஒரு வகையில் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கும், ஜனநாயகத்துக்கும் கூட அச்சுறுத்தலாக அமையக் கூடும்.

-சுபத்ரா
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *