காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2
பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு தடையாக, பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்து வந்தன.
மேலைத்தேய கல்வி அறிவையும் வாழ்க்கை முறையையும் தனது சிறு வயதிலிருந்தே பெற்று கொண்டிருக்க கூடிய முன்னைநாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பலநாள் ஏக்கம், ஜூலை 22 ஆம் திகதி , வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்ததன் மூலம், நிறைவேறியது என்றே கூறலாம்.
அமெரிக்கா கடந்த சில வருடங்களாக, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்று பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டும் போக்கை கொண்டிருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்க – பாகிஸ்தான் உறவுநிலையில் பிரதானமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வருவதில், பாகிஸ்தான் பெரும் பங்காற்றி இருக்கிறது என்றும், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக வெளியேறுவதற்கு பெரும் உதவி செய்திருந்தது என்றும், இம்ரான் கானிடம் வெள்ளை மாளிகையில் புகழ்ந்துரைத்திருந்தார் ட்ரம்ப் .
அதேவேளை ஜம்மு – காஷ்மீரை இரண்டு துண்டுகளாக பிரித்து- அரசியல் சாசன அதிகாரங்களை இந்திய மத்திய அரசு கையிலெடுக்க, காரணமாக அமைந்ததும், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பேச்சே என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்திய பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்து, பல்வேறு தெற்காசிய விவகாரங்கள் குறித்து பேச்சுகளில் ஈடுபட்டபோது, இந்த விவகாரத்தில் நீங்கள் நடுவராக அல்லது மத்தியஸ்தராக இருக்க விரும்புவீர்களா என்று கேட்டார்.
நான் எங்கே என்று கேட்டேன். காஷ்மீர் விவகாரத்தில் என மோடி பதிலளித்தார்” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் கூறினார்.
இதற்கு இம்ரான்கானும் நீங்கள் இந்த விடயத்தை செய்வீர்களாயின் மில்லியன் வரையிலான காஷ்மீர மக்களின் பிரார்த்தனையை பெறுவீர்கள் என்ற கூறி இருந்தார்.
இந்த உரையாடல் இந்தியத் தரப்பில் ஒரு அரசியல் சூறாவளியையே உருவாக்கி இருந்தது. மறுநாள் இந்திய நாடாளுமன்றத்தில் இதனை மறுதலித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் இந்தியப் பிரதமரால் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்து அடிப்படைவாத முதலாளித்துவ போக்குடைய பாரதீய ஜனதாகட்சி மிகுந்த பலம் வாய்ந்த அறுதிப் பெரும்பான்மை கொண்ட நிலையில் உள்ளது. இதனால், உடனடியாக காஷ்மீர் பகுதியை இரண்டு துண்டுகளாக வெட்டி சாய்த்தது மட்டுமல்லாது , ஏற்கனவே இருந்த அதிகாரங்களையும் கிழித்தெறிந்து விட்டது.
இந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் தீர்மானத்தில் உரையாற்றிய, மதிமுக பொதுச்செயலர், வைகோ இது ஒரு ஜனநாயக படுகொலை என தனது பாணியில் இடித்தரைத்திருந்தார்.
இந்த விவகாரம் சட்ட விவகாரமாக்கப்படுமானால் காஷ்மீர் போராட்ட காலத்தில் மீறப்பட்ட மனித உரிமை விவகாரங்கள் எல்லாம் வெளிக் கொணரப்படும். இவற்றை மறைக்க இனப்படுகொலைகளில் ஈடுபடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
காஷ்மீர் குறித்த பேச்சுக்களில் இடைத்தரகர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த பிரச்சினைக்கான தீர்வு இந்திய -பாகிஸ்தான் இருதரப்பு உடன்பாடுகள் மூலமே நடத்தப்படும் . ஆனால் பாகிஸ்தான் எல்லையோர பயங்கரவாத நவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சரால் கூறப்பட்டது.
இந்திய அமெரிக்க உறவு மிகவும் சுமூகமான நிலையில் இன்று இருக்கிறது. இரு நாடுகளும் மூலோபாய சகபாடிகளாக இருந்து வருகின்றன.
இந்து சமுத்திரத்தில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்கள், கிழக்காசியாவிலும் தென்சீன கடற்பரப்பு நடவடிக்கைகளும், மத்திய ஆசிய ஈரானிய நடவடிக்கைகளும், சர்வதேச சந்தைப்படுத்துதல்களும் என பல்வேறு மூலோபாய நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்காவுக்கு மிகவும் தேவையான ஒரு சகபாடியாக இந்தியா இருந்து வருகிறது.
இத்தகைய தேவைகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது முக்கியமானதாகும். கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த ஜனநாயக நாடு என்றும் பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம் என்றும் , சர்வதேச அரங்கில் அமெரிக்கா பறைசாற்றி வந்தது.
அதேவேளை, பாகிஸ்தானிய ஆய்வாளர்கள் பலர் அமெரிக்க – இந்திய கூட்டு யுத்த சூழலை உருவாக்கும் கூட்டு என்றும், அது இஸ்ரேலிய ஸியோனிச சதிகளுக்கு அமையவே நகர்த்தப்படுகிறது என்றும் கூறி வந்தனர்.
ஆனால், இம்ரான்கான் பதவியை ஏற்று கொண்டதில் இருந்து சீனா எல்லா உதவிகளுக்கும் மேலாக பாகிஸ்தானின் திறைசேரி இருப்பை வலுப்படுத்தும் முகமாக 2 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கொடுத்திருந்தது.
மேலும், சீன- பாகிஸ்தானிய உறவில் அதிக உறுதிப்பாடுகள் ஏற்படும் வகையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. ஏற்கனவே சீன- பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிட த்தக்கது.
ட்ரம்பின் பேச்சுகள் பாகிஸ்தானுக்கு உதவுவதாக உள்ளதா அல்லது இந்தியாவின் அதீத வளர்ச்சியை பயன்படுத்தி பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் இல்லாது ஆக்கப்பட்டு, ஈரானை சுற்றி வளைப்பதற்கான நகர்வுகளில் ஒன்றா- என்பது தான் இங்கே உள்ள கேள்வி.
ஏற்கனவே இந்திய – பாகிஸ்தான் முரண்பாடுகளை சவுதி அரேபிய நிதி உதவிகள் ஊடாகவும் வியாபார உடன்படிக்கைகள் ஊடாகவும் சமாதானம் செய்யும் முதற்கட்ட நகர்வு, மோடியின் வெற்றி வாய்பை உறுதிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்திய விமானப்படையின் குறுகிய நடவடிக்கையும் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த விடயமும் உறுதிப்படுத்துகிறது.
இங்கே முக்கியமாக கவனிக்கதக்க விடயம் என்ன வெனில், தனது அயல்நாடுகளுடன் முதன்மையான நல்லுறவு என்ற வெளியுறவு கொள்கையை வகுத்திருக்கும் இந்தியா, தனது தனது மாநிலங்களில் பிரச்சினைகள் எழும்போது , அந்த மாநிலங்கள் சார்ந்த உப பிராந்திய நாடுகளுடன் சர்ச்சைக்குரிய வகையிலேயே தனது உள்நாட்டு விவகாரத்தை கையாள வேண்டி உள்ளது.
இது காஷ்மீர் மட்டுமல்ல அசாம், திரிபுரா, மிசோராம், மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநில எல்லைகளில், தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில்- பல்வேறு கிராமங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ன.
மேற்குவங்கமும் வங்காள தேசமும் இதேபோல, பல்வேறு பிராந்திய உப பிராந்திய பிரச்சினைகளை கண்டுள்ளது, தமிழ்நாடும் சிறிலங்காவும் உத்தர்காண்டும் நேபாளமும் என இன தொடர்ச்சி சார்ந்த பல்வேறு சமூக, மொழி, மத பிரச்சினைகளை கொண்டிருக்கின்றன.
இந்தநிலையானது, நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசு அற்ற தரப்புகளால் அணுகப்படும் பொழுது, அது மத்திய – புறநில விவகாரமாக இந்தியாவில் உருவெடுத்து விடுகிறது என்பதாகும்.
இதனை உணர்ந்து புதிய அணுகுமுறைகளை தமிழர்கள் தமிழ்நாட்டுடன் ஏற்படுத்தி கொள்ள வேண்டியது குறிப்பிட த்தக்கதாகும்.
தமிழ் நாட்டில் கல்வியும் பகுத்தறிவும் சமூக நீதியும் மொழிப்பற்றும் இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது அறிவு சார்ந்த தொடர்புகளை இலகுவாக, ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசியல் நிலைக்கு ஏற்றதாகப்படுகிறது.
-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி
தமிழ் நாட்டில் கல்வியும் பகுத்தறிவும் சமூக நீதியும் மொழிப்பற்றும் இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது அறிவு சார்ந்த தொடர்புகளை இலகுவாக, ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசியல் நிலைக்கு ஏற்றதாகப்படுகிறது. லோகனின் இகூற்று மிகப்பொருத்தப்பாடானது. தமிழ் நாட்டின் நிலையின் ஒருபக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. இன்னோர் பக்கமும் உண்டு.
இந்தியளவிலான மூலதனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவு மிக நெருக்கமாக வளர்ந்து வருவதுதான் அந்த மறுபக்கமாகும். இதனால் இந்தியத் “தேசியத்திற்கும்” தமிழ்த் தேசியமாக பரிணாமம் பெற்றுவரும் திராவிடத் தேசியத்திற்கும் இடையேயான பாசப்பிணைப்பு தொடர்ந்து வளர்ச்சிபெறுவதை எந்த பாராளுமன்ற ஜனநாயக்க கடிசியாலும் தடுக்க முடியாது.
இந்தியாவின் உள் முரண்பாடு, அதன் அயல் நாடுகளுடனான பகைமை முரண்பாடாக வளர்வது இயல்பானது என்ற கருத்து மிகச் சரியானது. ஆகவேதான் ஆரியத்தின் அகண்ட பாரதக் கனவு இந்திய அரசின் கனவாக மீழவும் உயிர்பெறுகிறது.