மேலும்

‘சோபா’ உடன்பாடு – சிறிலங்காவுடனான பேச்சுக்களை நிறுத்தியதுஅமெரிக்கா

அதிபர் தேர்தல் முடியும் வரை, சிறிலங்காவுடனான, சர்ச்சைக்குரிய  சோபா உடன்பாடு குறித்த பேச்சுக்களை நிறுத்தி வைப்பதாக, சிறிலங்காவுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதுவர் அலய்னா பி.ரெப்லிட்ஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, தமது நாட்டின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்திக்க அமெரிக்க தூதுவர் சில வாரங்களுக்கு முன்னரே, விருப்பம் வெளியிட்டிருந்தார், எனினும், அத்தகைய கூட்டம் சாத்தியமில்லை என்று சிறிலங்கா அதிபர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான காலஅவகாசம் இப்போது முடிந்து விட்டது என்றும், அமெரிக்கத் தூதுவர் ரெப்லிட்ஸ், சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தைப் பற்றி விவாதிப்பதற்கான சிறிலங்காவின் உரிமையை தாங்கள் மதிப்பதாகவும், அவர் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் கூறினார்.

சோபா உடன்பாட்டில் தனது ஒப்புதலின்றிக் கையெழுத்திட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க துணைத் தூதுவரை அறிமுகப்படுத்துவதற்காக, அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா அதிபருடன் மற்றொரு சந்திப்புக்கு அனுமதி கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *