காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1
காஷ்மீர் தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது.
முன்பு இருந்த காஷ்மீரில் மத்திய அரசினால் எடுக்கப்படும் எந்த தீர்மானத்தையும் மாநில சட்டபேரவையின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்த முடியாது என்பது அவற்றில் முக்கியமானது.
மேலும் வேற்று மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அரச வேலைகளில் வெளிமாநிலத்தவர் தெரிவு செய்யப்பட முடியாது என்பன போன்ற தனித்துவமான உரிமைகளை, மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் காஷ்மீர் இழந்துள்ளது.
ஒரு தனி நாட்டுக்குரிய பல்வேறு அதிகாரங்களை கொண்டிருந்த காஷ்மீர் இன்று ஜம்மு – காஷ்மீர் , லடாக் , என மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இரண்டு யூனியன் பிரதேச பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால், தனது ஆளும் உரிமையை இழந்துள்ள – இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் கொண்டிருக்கக் கூடிய அதிகாரங்களையும் கூட இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் பலம் வாய்ந்த மோடி அரசாங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு Princely State எனப்படும் சிறிய அரசுகள், சுதந்திர இந்தியாவின் எல்லைகளை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, மக்களால் தீர்மானிக்கக் கூடிய நிலைக்கு விடப்பட்டன.
காஷ்மீர் இஸ்லாமியரை அதிகமாக கொண்டிருந்த போதும் ஹரி சிங் என்ற இந்து அரசர் ஆட்சியில் இருந்தார். 1947 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று கொள்ளும் பொழுது இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாக பிரிந்து கொண்டதுமே, காஷ்மீருக்காக யுத்தம் புரிய ஆரம்பித்து விட்டன.
பாகிஸ்தானிய தலைமை ஜம்மு -காஷ்மீர் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக, பஸ்தூன் என்படும் ஆயுதம் தரித்த குடியேற்றவாசிகளையும் பழங்குடியினரையும் திட்டமிட்டு ஜம்மு- காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பி வைத்தது பாகிஸ்தான்.
பஸ்தூன் இனத்தவர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை பிரதேசத்தின் ஊடாக ஆப்கானிஸ்தான் வரை பரந்து வாழ்கின்றனர் .
காஷ்மீர் பள்ளத்தாக்கின் வட மேற்கு எல்லைக்குள் ஆயுதம் தாங்கிய பஸ்தூன்கள் ஊடுருவி விட்ட நிலையில் நிலைமையை சீருக்கு கொண்ட வரும் பொருட்டு, மகாராஜா ஹரி சிங் இந்திய பிரதமராக இருந்த ஜவகர் லால் நேருவிடம் உதவியை நாடினார்.
நிலைமையை சாதகமாக பயன்படுத்திய இந்திய தலைமை முதலாவது காஷ்மீர் யுத்தத்தை ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட குழப்பநிலையை மையமாக வைத்து ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நேரு முறையிட்டதன் பலனாக பாகிஸ்தானிய சார்பு தனிமங்களை வெளியேற்றும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் 37 ஆவது சரத்திற்கு இணங்க பாதுகாப்பு சபைக்கு எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நடுஇரவிலிருந்து இருதரப்பும் யுத்த நிறுத்தம் செய்வதாக உடன்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய -பாகிஸ்தான் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
அன்றிலிருந்து 1972 வரை பல்வேறு தீர்மானங்கள் காஷ்மீருக்காக ஐக்கிய நாடுகள் சயையில் இயற்றப்பட்டன. இவை ஒவ்வொன்றும் குறித்து தமிழ் ஆய்வாளர்கள், கொள்கை பகுப்பாளர்கள், அரசியல் விதி படைப்போர் (norm creaters) போன்றோர் கற்றறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
பல தீர்மானங்களுக்கும் உறுதிமொழிகளுக்கும் காலம் தாழ்த்துதலுக்கும் ஆளாகிப்போன காஷ்மீரிய மக்கள் சார்பாக குரல் கொடுப்பதற்கு திடமான ஒரு அமைப்பு இல்லாத காரணத்தாலும், மத வேறுபாடுகளால் பிளவுபட்டு கிடப்பதாலும் , புவியியல் ரீதியாக காஷ்மீர் நில எல்லைகளையே கொண்டிருப்பதன் காரணமாகவும், இன்னுமொரு தேசத்தின் தயவில் வாழ வேண்டிய தேவை காரணமாகவும் இந்திய -பாகிஸ்தானிய முரண்பாடுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கிறது.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக தற்பொமுது அரசியல் அதிகாரத்தையும் இழந்து உள்ளது மட்டு மல்லாது, தமது இருப்பை அடையாளப்படுத்தும் தாயக பரப்பளவையும் இழந்து நிற்கிறது.
(தொடரும்)
-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி
ஒரு தனி நாட்டுக்குரிய பல்வேறு அதிகாரங்களைக் கொண்டிருப்பதால் ஒரு நாடு தேசமாகிவிடமாட்டாது. அதற்கான தகமைகள் எதையும் காஷ்மீர் கொண்டிருக்கவில்லை. தேசிய அரசு ஒன்று இருக்கும் பட்சத்திலேயே ஒரு நாடு, தேசம் என்ற தகமையைப் பெறும். தேசிய அரசென்பது, அந் நாட்டினில் வாழும் அனைத்து இன/ மதக் குழுமங்களினதும் விருப்பத்துடனான ஒரு கூட்டரசாகும். அவ் அரசு எந்த இன/மதக் குழுமத்தின் மீதும் எதுவித வன்முறையையும் பிரயோகிக்காத அரசாக இருக்கவேண்டும்.
காஷ்மீர் அவ்விதமில்லை. அங்கு இந்துக்களும், பௌத்தர்களும், பஸ்தூன் இனத்தவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். ஆகையால், இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளைப்போல் காஷ்மீரும் ஒரு நாடு மாத்திரமே. இவையெல்லாம் தேசங்கள் அல்ல, அங்கு இருப்பவை தேசிய அரசுகளும் அல்ல. ஆனால் ஒரு நாட்டுக்குரிய அதிகாரத்தையும் கூட இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் மறுத்து வருகின்றன; ஐநா சபையும் உதவி வருகிறது. ஆகவே தேசிய ஜனநாயக வாதிகளின் கோரிக்கை அல்லது குறிக்கோள்,
1) காஷ்மீர் எனும் பூகோளப்பரப்பு இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்தும், ஐநா அமைப்பின் வஞ்சகப் பிடியில் இருந்தும் விடுபடவேண்டும்;
2) அவ்விதம் விடுபடும் காஷ்மீர் தனக்குள் நிலவும் இன/மத ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு தேசமாக மாறவேண்டும் என்பதேயாகும்.