மேலும்

ஐதேகவின் உள்வீட்டுக் கலகம் – பங்காளிக் கட்சிகள் குழப்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் நிகழ்வு நாளை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஐதேக முதலில் உள்வீட்டுப் பிரச்சினையை  தீர்த்துக் கொள்ள வேண்டும் என பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியை நாளை அறிவிக்க ஐதேக தயாராகி வந்த நிலையில், இந்தக் கூட்டணியின் யாப்பு மற்றும் அதிபர் வேட்பாளர் விடயத்தில் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

இந்த நிலையில், ஐதேக முதலில் தமது அதிபர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னர், தேசிய ஜனநாயக முன்னணியின் முடிவெடுக்கும் கட்டமைப்பை உருவாக்கலாம் என்றும், பங்காளிக் கட்சிகளி்ன் தலைவர்களான, ரவூப் ஹக்கீம்,மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஐதேக தனது வேட்பாளரை முதலில் தீர்மானிக்கும் வரை, நாங்கள் காத்திருக்கலாம், பின்னர் கூட்டணியின் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவது பற்றி பேசலாம் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த கூட்டணியின் மற்றொரு பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்கவும், ஐதேக முதலில் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.

ஐதேக கூட்டணிக்கு வந்து அதன் பிரச்சினைகளை, கூட்டணி மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை மற்றொரு பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுதீன், இன்று தமது கட்சியின் உயர்பீடம் கூடி, கூட்டணியின் யாப்பு குறித்து ஆராய்ந்து திருத்தங்களை முன்வைக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *