ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை – 117 வாக்குகளுடன் நிறைவேறியது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 117 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணையை முன்வைத்தார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வழிமொழிந்தார்.
இதையடுத்து நடந்த விவாதத்துக்குப் பின்னர், இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்தன. எதிராக எந்த வாக்குகளும் கிடைக்கவில்லை.
இன்றைய அமர்வையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.
அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிததிருந்தனர்.
ஜேவிபி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து நாடாளுமன்றம் வரும் 18ஆம் நாள் பிற்பகல் 1 மணி வரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.