மேலும்

சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை

புராதான பட்டுப் பாதையுடன் தொடர்புபட்ட விடயங்களை சிறிலங்காவில் ஆய்வுசெய்யும் பணியை சீனாவிலுள்ள ஷங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

உலகிலுள்ள ஏனைய நாடுகளுடனான தொடர்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் தனது புராதன பட்டுப்பாதையை அடிப்படையாகக் கொண்டு சீனாவினால் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது இவ்வாறான தொல்பொருள் ஆய்வுகளும் இடம்பெற்றன.

இந்த வகையில் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்துடன் தொடர்புபட்ட நாடுகளுள் சிறிலங்காவும் ஒன்றாக இருப்பதால் சீனாவின் ஷங்காய் அருங்காட்சியக தொல்பொருளியலாளர்கள் அண்மையில் சிறிலங்காவில் தமது தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.

ஐந்து பேரைக் கொண்ட இத்தொல்பொருளியில் குழுவின் தலைவரான சென் ஜீயுடன் டெய்லி மிரர்  நாளிதழுக்கு அளித்த செவ்வியில், புராதன பட்டுப்பாதையில் சிறிலங்காவின் அமைவிடம் எத்தகையது என்பது தொடர்பாகவும் அண்மையில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியில் ஆய்வு மற்றும் அதன் போது கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சென் ஜீ பகிர்ந்து கொண்டார். அதன் விபரம் வருமாறு:

கேள்வி: புராதன பட்டுப்பாதையில் சிறிலங்காவின் அமைவிடம் தொடர்பாக தங்களின் கருத்து எதுவாக உள்ளது?

பதில்: கரையோர பட்டுப்பாதையானது சீன கரையோர துறைமுகங்களிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது தென்கிழக்காசிய நாடுகளின் ஊடாக இந்திய மாக்கடல், செங்கடல், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா வரை இப்பாதை விரிந்து காணப்படுகிறது. வர்த்தக, கலாசார பரிமாற்றங்கள் மற்றும் பட்டுப்பாதையிலுள்ள நாடுகளின் அபிவிருத்தியை அதிகரித்தல் போன்றவற்றுக்கான ஒரு அனைத்துலக வலைப்பின்னலாக இப்பட்டுப்பாதை நிர்மாணிக்கப்பட்டது.

இந்திய மாக்கடலின் மையத்திலும் கிழக்கு மற்றும் மேற்குலக கடல்வழிப்பாதையின் மையத்திலும் சிறிலங்கா அமைந்துள்ளதால் இது கடல்வழி வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான தொடர்புகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். 5ம் நூற்றாண்டில் சீனாவின் பிரபல பிக்குவான பா சியான் பௌத்தத்தைக் கற்பதற்காக சிறிலங்காவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்.

ஆறாம் நூற்றாண்டு தொடக்கம், சிறிலங்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் மேலும் அதிகரித்தன. குறிப்பாக 15ம் நூற்றாண்டில், ஜெங் கீ என்பவர் கடல்வழியாக மேற்கொண்ட பயணத்தின் போது சிறிலங்காவின் பல இடங்களில் தங்கியிருந்தார். இவ்விரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் தமது வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்தியதுடன் தமக்கிடையிலான நட்புறவையும் பலப்படுத்தியுள்ளனர்.

1911ல் காலியில் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழி கல்வெட்டானது சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான தொடர்பாடல் வலுப்பெற்றிருந்தமைக்கான முக்கிய சான்றாக அமைந்தது.

2018 தொடக்கம், மத்திய கலாசார நிதி மற்றும் ஷங்காய் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பின் ஊடாக சீனோ-லங்கா தொல்பொருளியல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிறிலங்கா ஊடான கரையோர பட்டுப்பாதைத் திட்டத்துடன் தொடர்புபட்ட இடங்கள் மற்றும் அழிவுகளை ஆய்வு மற்றும் அகழ்வு செய்வதன் ஊடாக பல்வேறு நாடுகள் மத்தியில் பரிமாறப்பட்ட பொருளாதார, கலாசார, மத பரிமாற்றங்களை கண்டுபிடிக்கும் பணியில் கூட்டு தொல்பொருளியல் குழு ஈடுபட்டு வருகிறது.

கேள்வி: அகழ்வாராய்ச்சியின் போது நீங்கள் எவற்றை கண்டுபிடித்தீர்கள்?

பதில்: இவ்வாண்டு ஆகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில், சீனோ-லங்கா தொல்பொருளியில் குழுவானது தனது முதலாவது அகழ்வாராய்ச்சி பணியை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டது. ஊர்காவற்துறை கோட்டைக்குள் பரீட்சார்த்த அகழி ஒன்றை அகழ்ந்த போது, ஊர்காவற்துறையிலுள்ள அல்லைப்பிட்டியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் போது குறிப்பாக அல்லைப்பிட்டியில் அகழ்வை மேற்கொண்ட பின்னர் பல முக்கிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த அகழ்வாராய்ச்சியின் போது சீனர்களுக்குச் சொந்தமான பல பீங்கான் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக தொடர்புகள் இடம்பெற்றன என்பதற்கான முக்கிய சான்றாக உள்ளது. சீனாவிற்குச் சொந்தமான பொருட்கள் 11ம் நூற்றாண்டின் இரண்டாம் அரை நூற்றாண்டிற்கும் 12ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை காணமுடியும்.

சிறிலங்காவில் கண்டெடுக்கப்பட்ட சீன தொல்பொருட்களில் பெரும்பாலானவை சீனாவின் குவாங்டொங் மற்றும் பியூஜியன் மாகாணங்களின் கரையோரங்களில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

இவற்றுள் இனங்காணப்பட்ட தொல்பொருட்களுள் பெரும்பாலானவை குவாங்டொங்கிலுள்ள சயோசௌ மற்றும் ஜிகுன் கில்ன்ஸ் போன்ற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. இவற்றுள் சில வடசீனாவின் ஜவோசௌவ்வில் உற்பத்தி செய்யப்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அகழப்பட்ட சீனாவிற்குச் சொந்தமான தொல்பொருட்கள், சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான கரையோரப் பாதைகள் மற்றும் வர்த்தக வலைப்பின்னலை ஆய்வு செய்வதற்கு நிச்சயம் உதவும்.

கேள்வி: நீங்கள் யாழ்ப்பாணத்தில் பணியை மேற்கொண்டமைக்கான விசேட காரணம் என்ன?

பதில்: யாழ்ப்பாணம், வட இலங்கையின் முக்கிய துறைமுகமாகக் காணப்படுகிறது. இது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மிக அருகிலுள்ளதுடன் புராதன கடல் பாதைகளுக்கான மைய அமைவிடத்தையும் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பீங்கான்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆகவே கடந்த கால சீன-சிறிலங்கா உறவை விளங்கிக் கொள்வதற்கு யாழ்ப்பாணம் மிக முக்கிய இடமாக நோக்கப்படுகிறது.

கேள்வி: தொல்பொருள் சான்றுகளை பாதுகாப்பதற்கு சிறிலங்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் எவ்வாறு ஒத்துழைப்பை வழங்கமுடியும்?

பதில்: கலாசார சான்று என்பது புராதன காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் விட்டுச் செல்லப்பட்ட வரலாற்று பொக்கிசமாகும். புராதன மனித நாகரீகங்களின் உள்ளக உறவுகளை விளங்கிக் கொள்வதற்கு இவ்வாறான வரலாற்றுச் சான்றுகள் முக்கிய மூலவளங்களாக உள்ளன. இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் மிக்க விழுமியங்களை ஆய்வின் மூலம் அடையாளம் காண்பது முதன்மையானதாகும்.

நகரக் கட்டுமானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகள் காரணமாக கலாசார சான்றுகள் பல மோசமான ஆபத்திற்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறான சான்றுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்தாவிட்டால், நாங்கள் அவற்றை இழந்து விடுவோம். அத்துடன் எமது வரலாற்றுச் சான்றுகளும் முற்றாக அழிந்து விடும். ஆகவே, நாம் அனைவரும் இவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

அண்மைய ஆண்டுகளில், கலாசார தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான அனுபவங்களை சீனா அதிகம் பெற்றுள்ளது. இது சாத்தியமானால், இவ்விரு நாடுகளும் இணைந்து கலாசார சான்றுகளைப் பாதுகாப்பதற்கும் புராதான மனித நாகரீக சான்றுகளைப் பாதுகாப்பதற்குமான அருங்காட்சியகத்தைப் பேணவேண்டும்.

கேள்வி: தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வேறு இடங்கள் எவை?

பதில்: சிறிலங்காவானது பல்வேறு முக்கிய துறைமுகங்களைக் கொண்ட ஒரு தீவாகும். இங்கு சீனாவின் பட்டுப்பாதையுடன் தொடர்புபட்ட பல எச்சங்கள் காணப்படுகின்றன. கரையோர பட்டுப் பாதையின் எண்ணக்கரு தொடர்பாக கூட்டு தொல்பொருளியல் குழு ஆராய்வதுடன் தொடர்புபட்ட துறைமுகப் பிரதேசங்களில் தொல்பொருள் விசாரணைகள் மற்றும் அகழ்வுகளிலும் ஈடுபடும். யாழ்ப்பாணத்துடன் திருகோணமலை மற்றும் காலி போன்ற துறைமுகப் பகுதிகளும் எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படலாம்.

கேள்வி:- சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான பௌத்த தொடர்புகளை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்: சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான தொடர்பானது 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும். இந்த உண்மையானது இலக்கியப் பதிவுகள் மூலம் மட்டுமல்லாது, தொல்பொருளியல் சான்றுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவின் துறைமுகங்களில் மட்டுமல்லாது, அநுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற நகரங்களிலும் சீனர்களுக்குச் சொந்தமான பீங்கான் பாத்திரங்கள், நாணயங்கள் மற்றும் கலாசார சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சான்றுகள், புராதான கரையோர பட்டுப்பாதை வர்த்தகத்தில் சீன உற்பத்திப் பொருட்கள் மிகவும் பிரபலமான உற்பத்திப் பொருட்களாகக் காணப்பட்டன என்பதை அல்லது சீனா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான உறவானது புராதன காலத்தில் கட்டியெழுப்பப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

புராதன காலந்தொட்டு சிறிலங்காவின் பௌத்த பாரம்பரியமானது சீன மத எண்ணக்கருக்கள் மீது தாக்கம் செலுத்தியது என்பதை நீண்ட கால வரலாற்று பரிமாற்றங்கள் மூலம் உறுதிப்படுத்தலாம். இலக்கியத்தின் மூலம் பா-ஜியன் என்கின்ற சீன பௌத்தர் போன்று பல பௌத்தர்கள் சீனாவிலிருந்து சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர். அத்துடன் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்காக சிறிலங்கா தனது மக்களை சீனாவிற்கு அனுப்பியுள்ளது.

செவ்வி       – Kelum Bandara
வழிமூலம்    – dailymirror
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *