அமெரிக்க தூதுவர் மீது பாயும் மகிந்த தரப்பு
சிறிலங்காவின் பொருளாதார நிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மீது மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடிகளால் சிறிலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கண்டியில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன,
“சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி உள்ளதாக அமெரிக்கத் துதுவர் கூறியிருப்பது தவறானது என்றும், இதுபற்றிய விளக்கத்தைப் பெற அவர் மத்திய வங்கி ஆளுனரை சந்திக்க வேண்டும்.
சிறிலங்காவின் பொருளாதார நிலை பற்றி சில சக்திகள், தவறான தகவல்களை அமெரிக்கத் தூதுவரிடம் கூறியுள்ளன.
அவர் தலதா மாளிகையில் ஊடகங்களிடம் வெளியிட்ட கருத்து தவறானது.
தற்போதைய நாணயப் பெறுமதியின் வீழ்ச்சிக்கு அரசியல் நெருக்கடியே காரணம் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வபருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் கூறியிருக்கிறார்.
இவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்த போதே ஏற்பட்டிருந்தன. அவரு அதற்குப் பொறுப்பு.
நெருக்கடிகளின் மத்தியில் தான் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்கத் தூதுவர் நாட்டின் பொருளாதாரம் பற்றி தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று மகிந்தவுக்கு நெருக்கமான- மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.