மேலும்

லசந்த படுகொலை – சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

lasantha_murderசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குற்றப்  புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த படுகொலை தொடர்பாக இந்த இராணுவ அதிகாரி ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதேவேளை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, கல்கிசை காவல்நிலையத்தின் குற்றப்பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான  அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மற்றொரு குற்றச்சாட்டின் பேரில் இவர்,  சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது தகவல்களை மறைத்தார் அல்லது அழித்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய, உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மூவர் மற்றும், ஏனைய சிலரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *