மேலும்

வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்

jaffna-flood (1)தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடக்கு, வடமேல், மேல், தென் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் கடும் காற்று வீசும். வடக்கு மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை,  கடந்த சில நாட்களில் 500 மி.மீ மழை வீ்ழ்ச்சி பதிவாகிய யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உள்ளதால், அனைத்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், காவல்துறையினர், படையினர் முழுமையான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்யுமானால், அடுத்த சில நாட்களில் வெள்ளம் அனர்த்தம் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

சடுதியான வானிலை மாற்றங்கள் ஏதும் நிகழலாம் என்பதால், அனர்த்த முகாமைத்துவ நிலையம் வவுனியாவில் சிறப்பு அலகு ஒன்றை உருவாக்கி, தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

jaffna-flood (1)

jaffna-flood (2)

இதற்கிடையே, கடந்த சில நாட்களில் பெய்த மழையினால் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

நாவற்குழி – யாழ்ப்பாணம் வீதி, அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி, அராலி – யாழ்ப்பாணம் வீதி என்பனவற்றை மேவி வெள்ளம் பாய்கிறது.

தொண்டைமானாறு கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, உவர்நீரேரி தடுப்பணையின் கதவுகள் திறந்து விடப்பட்டு, நீர் கடலுக்குள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதுபோல, வழுக்கையாற்று பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளாதால் அராலி தடுப்பணையின் கதவுகளும், நாவற்குழி பகுதியில் உள்ள தடுப்பணையின் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *