உலக சுகாதார தரவரிசையில் சிறிலங்கா 158வது இடத்தில்
2025 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார தரவரிசைக் குறியீட்டில், சிறிலங்கா 158 வது இடத்தில் உள்ளது. அத்துடன், ஆரோக்கியம் குறைந்த கடைசி 40 நாடுகளுக்குள் சிறிலங்கா வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்காக உலகளாவிய சுகாதார குறியீட்டின் படி 54.55 புள்ளிகளைக் கொண்டுள்ள சிறிலங்கா, சராசரிக்கும் குறைவான புள்ளிகளைக் கொண்டதாகவும், ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகிறது.
ஆரோக்கியமான ஆயுட்காலம், இரத்த அழுத்த அளவுகள், இரத்த குளுக்கோஸ் (நீரிழிவு அபாயத்தின் முக்கிய குறிகாட்டி), உடல் பருமன் வீதங்கள், மனச்சோர்வின் பரவல், ஒட்டுமொத்த மகிழ்ச்சி, மது அருந்துதல், புகையிலை பயன்பாடு, உடல் செயலற்ற தன்மை மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அரசாங்க செலவு ஆகிய 10 அளவுகோல்களை உள்ளடக்கியதாக இந்த தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த தரவுகளின்படி, சிறிலங்காவில் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாக, பக்கவாதம் மற்றும் இஸ்கெமிக் (Ischemic) இதய நோய்கள் அமைந்துள்ளன.
இருப்பினும், சிறிலங்காவில் 2000 ஆம் ஆண்டில் 71.5 ஆண்டுகளாக இருந்த ஆயுள்காலம், 2021 இல் 77.2 ஆண்டுகளாக (5.72 ஆண்டுகள்) அதிகரித்துள்ளது.
சஹாராவின் துணைப் பகுதியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட சில நாடுகள் சுகாதார தரவரிசையில் மிகக் கீழே உள்ளன.
வெப்பமண்டல சொர்க்கங்களாகக் காணப்படும் அழகிய இடங்கள் கூட குறைந்த சுகாதார மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
பெரும்பாலும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாததே இதற்குக் காரணமாகும்.
