பாதுகாப்பை சீர்குலைக்க வெளிப்புற சக்திகள் முயற்சி?- விசாரணை ஆரம்பம்
சிறிலங்காவின் பாதுகாப்பை சீர்குலைக்க வெளிப்புற சக்திகள் முயற்சிப்பது குறித்த விசாரணைக்கு அனைத்துலக புலனாய்வு அமைப்புகளின் உதவியை சிறிலங்கா பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அரச பணியகங்களை குறிவைத்து விடுக்கப்பட்ட அடுத்தடுத்த குண்டு அச்சுறுத்தல்கள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன, விசாரணையைத் தொடங்கியுள்ளன.
டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் நாள்களில், நாவலப்பிட்டி மற்றும் பூஜாபிட்டிய பிரதேச செயலகங்களுக்கு இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக ஊழியர்களையும் பொதுமக்களையும் பிரதேச செயலக வளாகங்களில் இருந்து வெளியேற்றினர்.
காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவ குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் காவல்துறை மோப்பநாய் பிரிவு ஆகியன, முழுமையாக தேடுதல்களை நடத்திய பின்னர், புரளி என உறுதிப்படுத்தப்பட்டது.
டிசம்பர் 28 ஆம் நாள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து, 245 பயணிகளுடன் டோஹாவிலிருந்து வந்த விமானம், தனிமைப்படுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டது.
கடந்த 26 ஆம் நாள் கண்டி மாவட்ட செயலகத்தில், ஐந்து இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறும் பல மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திய கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து இந்த அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
வேண்டுமென்றே பொது அமைதியின்மையை உருவாக்கவும், சுற்றுலாத் துறையை சீர்குலைக்கவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சீர்குலைக்கும் செய்திகளுக்குப் பின்னால் உள்ள நபர்களை அடையாளம் காண, அனைத்துலக புலனாய்வு அமைப்புகளுடன், இணைந்து செயற்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
