மேலும்

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

TPC (1)தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அறிக்கை தமிழ் மக்களின் அபிலாசைகைளை நிறைவேற்றும் ஒன்றாக இல்லாத நிலையில்- அதனைத் தோற்கடிப்பதற்காக, வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலை ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பாக எதிர்கொண்டு பரப்புரை செய்ய வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்தும் அரசியலுக்கு அப்பால் மக்கள் அமைப்பாக செயற்பட வேண்டும் என்பதில் வட மாகாண முதலமைச்சர் உறுதியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளான ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பொது அமைப்புகளை ஒருங்கிணைத்து, தேர்தலில் பொது அணியாக போட்டியிடுவது பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளன.

இதனை இரண்டு கட்சிகளின் தலைவர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் பின்னர் நடத்திய செய்தியாளர சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்

எனினும், இது தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கை சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை, ஈபிஆர்எல்எவ் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உள்ளடக்கிய கூட்டணி ஒன்று, பொது பெயர், சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கத் தயாராகி வருகிறது.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனை உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *