பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்
பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இராணுவத்தினர் வசமுள்ள வசாவிளான், பலாலி தெற்குப் பகுதிகளில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, இந்தப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
கடும் மழைக்கும் மத்தியில், பெரும் எண்ணிக்கையான மக்கள், நேற்றுக்காலை 9.30 மணியளவில் அமைதியான முறையில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பலாலி படைத்தளப் பிரதேசத்துக்குள் நுழைந்து விடாதபடி தடுப்புகளை அமைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, போராட்டம் நடத்தியவர்களைச் சந்தித்து, அவர்களின் மனுவைப் பெற்றுக் கொண்டார்.
வலி. வடக்கில் பல இடங்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், வசாவிளான் மற்றும் பலாலி தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள் இன்னமும் சிறிலங்கா படையினரால் விடுவிக்கப்படவில்லை.