அம்பாந்தோட்டை துறைமுகம் டிசெம்பர் 8இல் சீன நிறுவனத்திடம் கையளிப்பு
சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகார சபையும் இணைந்து, எதிர்வரும், டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை, கூட்டு முயற்சியாக இயக்கவுள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெனியாயவில் நடந்த கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.
“அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவதற்கு நிதி இல்லாததால் அதனை மூடுவதற்கு அரசாங்கம் சிந்தித்தது.
அப்போது தான், சீன அதிபர், சிறிலங்கா அரசாங்கமும், சீன நிறுவனமும் கூட்டு முயற்சியாக இதனை இயக்கலாம் என்ற யோசனையை முன்வைத்திருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் வருமானத்தைப் பயன்படுத்துவதை தவிர வேறு வழி இருக்கவில்லை. இதனால் வேறொரு தெரிவை பற்றி யோசிக்க வேண்டியிருந்தது.
அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் பல முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
எல்லா தென் மாவட்டங்களுக்கும் மின் விநியோகத்தை மேற்கொள்ளக் கூடிய வகையிலான, இயற்கை எரிவாயு மின் திட்டம், கப்பல் கட்டும் தளம் (dockyard) சுற்றுலா முயற்சிகள் என்பன இங்கு வரவுள்ளன.
சூரியவெவ துடுப்பாட்ட மைதானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.