மேலும்

அரியாலை படுகொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை

shot-dead-ariyalai (2)அரியாலை கிழக்கு- மணியம்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தக் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22 ஆம் நாள், மணியந்தோட்டம் பகுதியில் டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞன் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கர வண்டி ஆகியன பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டன.

இதையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளை அடுத்து, நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் மல்லவாராச்சி பிரதீப் நிசாந்தவும், கொன்ஸ்டபிள் ரத்னாயக்க முதியான்சலாகே இந்திக புஷ்ப குமாரவும், கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கைப்பற்றப்பட்ட இரண்டு வாகனங்களும் பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று இரண்டு அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட போது, கொலைக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட அதிரடிப்படையினர் இருவரும் தாம் இந்தக் கொலையுடன் சம்பந்தப்படவில்லை என்று விசாரணையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், இவர்களே இந்தக் கொலையை மேற்கொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று விசாரணைக்காக யாழ். காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *