மேலும்

இந்தியாவிடம் வாங்கப்பட்ட போர்க்கப்பலை இந்திய எல்லையிலேயே நிறுத்துகிறது சிறிலங்கா

DCIM100MEDIADJI_0022.JPGஇந்தியாவிடம் இருந்து அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தம் புதிய போர்க்கப்பல், வெளிநாட்டவர்களின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை முறியடிக்க  பாக்கு நீரிணையில் நிறுத்தப்படும் என்று சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு, கடந்த 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படையினரால் பொறுப்பேற்றப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலுக்கு சயுரால என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை மறுநாள். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதனை அதிகாரபூர்வமாக இயக்கி வைப்பார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமிந்த வலுகலகே,

“பாக்கு நீரிணையில் இது கடற்படைக்கு மேலும் பலத்தைக் கொடுத்துள்ளது. நாட்டின் கடல் எல்லைகளுக்குள் ஊடுருவும் வெளிநாட்டவர்கள் மற்றும் கடத்தல் காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளது.

கடலிலும் தரையிலும் அதிகரித்துள்ள கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக, யாழ். குடாநாட்டில் சிறிலங்கா கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், கடற்படையின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. உயர்மட்ட பாதுகாப்பு வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாக்கு நீரிணை வழியாக இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தல்கள் அதிகரித்திருக்கின்றன.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *