மேலும்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டு வரைவு நாடாளுமன்றில் – இராணுவ செயற்பாடுகளுக்கு தடை

Hambantota harborஅம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எந்தவொரு இராணுவ செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தடை விதிக்கும் வகையிலேயே, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக, செய்து கொள்ளப்படவுள்ள உடன்பாட்டின் வரைவிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக சொத்துக்களையோ, அல்லது சுற்றியுள்ள பிரதேசத்திலோ – சிறிலங்காவின் இறையாண்மைக்குட்பட்ட தரை, வான் அல்லது கடல், கரையோரம்  அல்லது ஆழ்கடலில் -எந்தவொரு இராணுவ இயல்புடைய செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு கடுமையான தடை விதிக்கப்படும்.

உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் துறைமுக சொத்து மற்றும் பொதுவான பயனர் வசதிகள் ஆகியவை துறைமுக மற்றும் கடல் சார்ந்த வணிக நோக்கத்திற்காக கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

துறைமுகமல்லாத மற்றும் கடல்சாராத வர்த்தக செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்படும்.

இராணுவத்தினருடன் தொடர்புடைய செயற்பாடுகள்,  அல்லது எந்த வகையான, இராணுவ சூழலுடன் தொடர்புடைய செயற்பாடுகளையும் இங்கு மேற்கொள்ள முடியாது.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரமே உரிமை உள்ளது.

போர்க்கப்பல்களையோ, நீர்மூழ்கிகளையோ கொண்டு வருவதற்கும்,  நிறுத்தி வைப்பதற்கும், எந்த இராணுவ கருவிகள் மற்றும் இயந்திரங்கயை களஞ்சியப்படுத்துவதற்கும், தொலைத் தொடர்பு வலையமைப்புகளை நிறுவுவதற்கும் தேவையான அனுமதிகளை வழங்கும் அதிகாரம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது. என்றும் அந்த வரைவு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

Srilanka-chinaசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இந்த உடன்பாடு தொடர்பாக நாளை விவாதம் நடத்தப்படவுள்ளது. எனினும் இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று கூறப்படுகிறது.

சீன நிறுவனத்துடன், வரும் சனிக்கிழமை இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தப் புதிய உடன்பாட்டுக்கு அமைய துறைமுகத்தின் 69.55 வீத பங்குகள் சீன நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளன. 30.45 வீதமான பங்குகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் இருக்கும். இதற்காக இரண்டு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

606 மில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்படும், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக சேவைகள் நிறுவனத்தில், 50.7 வீத பங்குகளை சிறிலங்கா துறைமுக அதிகார சபை கொண்டிருக்கும். 49.3 வீத பங்குகள் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

794 மில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்படும், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழும நிறுவத்தில், 85 வீத பங்குகளை சீன நிறுவனமும், 15 வீத பங்குகளை சிறிலங்காவும் கொண்டிருக்கும்.

99 ஆண்டுகளின் பின்னர், சீன நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளும். தலா 1 டொலருக்கு சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு மாற்றப்படும் என்றும் இந்த உடன்பாட்டு வரைவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *