மேலும்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் துப்பாக்கிச் சூடு – காவல்துறை அதிகாரி பலி

nallur-shotநல்லூரில் நேற்று மாலை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறை சார்ஜன்ட் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில், யாழ். பருத்தித்துறை வீதியும் கோவில் வீதியும் சந்திக்கும் இடத்தில், இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றது.

நீதிபதி இளஞ்செழியன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவருக்குப் பாதுகாப்பாகச் சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளின் உந்துருளியை மறித்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

நீதிபதியின் மெய்க்காவலரின் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை உருவியே அந்த நபர் இந்த தாக்குதலை நடத்தினார்.

இதைடுத்து, நீதிபதி வாகனத்தை விட்டு இறங்கிய போது அவரையும் துப்பாக்கிதாரி சுட முயன்றார். அப்போது அவரது மெய்க்காவலர், வாகனத்துக்குள் தள்ளி அவரைக் காப்பாற்றினார்.

nallur-shot

nallur-shot (2)

 

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரிகளும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அந்த வழியாக வந்த உந்துருளி ஒன்றை பறித்துக் கொண்டு, துப்பாக்கிதாரி தப்பிச் சென்றார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில், நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சார்ஜன்ட் ஹேமச்சந்திர என்ற அதிகாரி, இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமானார். விமலசிறி என்ற மற்றொரு காவல்துறை அதிகாரி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

sumanthiran“நீதிபதிஇளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டு வர வேண்டும். இதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய சதித்திட்டங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் இப்போது இன்னுமொரு படிநிலையை அடைந்துள்ளமை எமது ஆழ்ந்த கவனத்தை ஈர்க்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவதில் பயன் காணக்கூடியவர்கள் இப்படியான செயல்களின் பின் மறைந்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது. இந்த நிலைமை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும். இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது” – எம்.ஏ.சுமந்திரன்

வடக்கின் முக்கிய குற்ற வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் முயற்சி நீதித்துறை வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 மி.மீ கைத்துப்பாக்கியும் வெற்றுத் தோட்டாக்களும், வெற்று ரவைக்கூடு ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

nallur-shot (3)

இதனிடையே, நேற்று மாலை நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் யாழ். நகரப் பகுதிகளிலும் சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கருத்து “நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் துப்பாக்கிச் சூடு – காவல்துறை அதிகாரி பலி”

  1. மகேந்திரன் says:

    நீதிமான் மேன்மை தங்கிய இளஞ்செழியன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு பொலிஸ்தினணகளம்தான் பதில் அளிக்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *