மேலும்

ஐ.நா நிபுணர் – புலிச்சந்தேக நபர்கள் சந்திப்பு விதிமுறைகளுக்கு அமையவே நடந்தது – ரவி கருணாநாயக்க

ravi-karunanayakeஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்ட விடயத்தில், முன்னைய அரசாங்கத்தின் நடைமுறைகளே பின்பற்றப்பட்டன என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“மனித உரிமை , தீவிரவாத எதிர்ப்பு குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த போது, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கையாளப்பட்ட நடைமுறைகளுக்கு மாறான அணுகுமுறை கையாளப்படவில்லை.

அப்போதிருந்த நடைமுறைகளின் அடிப்படையில் தான் அவருக்கான அனுமதிகள் அளிக்கப்பட்டன.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை வெளிநாட்டு அதிகாரிகள் பலர் சந்தித்திருந்தனர். ஆனால் அப்போது, தம்மைத் தேசியவாதிகள் என்று கூறிக் கொண்வோர் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

ஐ.நா அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பாக சில தவறான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த விடயம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்துள்ளோம். கொழும்பு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலரிடமும் முறையிட்டுள்ளோம்.

எமர்சன் ஒரு அறிக்கையாளர் மட்டுமே. அவர் ஐ.நா முறைமையின் ஒரு அங்கம் அல்ல. எனவே அவரது சில கருத்துக்கள் தொடர்பாக அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை.

எமர்சனின் எல்லாக் கருத்துக்களும் பாதகமானவை அல்ல. அவர் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.

அதேவேளை, சில தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவை நிச்சயம் தீர்க்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *