பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை 3 நாட்கள் சிஐடியினர் விசாரிக்க அனுமதி
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, அவர் மாலையில் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்காக கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
இதன்போது, பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஏற்றி வந்த வாகனம் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
எனினும், எவருக்கும் காயம் ஏற்படாத நிலையில், நேற்றுக்காலை ஊர்காவற்றுறை பதில் நீதிவான் முன்பாக, அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, ஜூலை 25ஆம் நாள் வரை லலித் பிரதி ஜெயசிங்கவை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவெளை, பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மூன்று நாட்கள் தமது காவலில் வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை நீதிவான் ஏற்றுக் கொண்டு அதற்கும் அனுமதி அளித்தார்.
இதேவேளை, இந்த வழக்குத் தொடர்பாக, மற்றுமொரு காவல்துறை அதிகாரியும், தேசியக் கட்சி ஒன்றில் போட்டியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.