மேலும்

வரலாற்றுப் பழி சுமக்குமா கூட்டமைப்பு?

sampanthan-sumanthiranபௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தின் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றையாட்சி புராணத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர்.

அஸ்கிரியவில் நடந்த மேற்படி கூட்டத்தை அடுத்து, கண்டியில் ஜனாதிபதி மாளிகையில் பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் இருக்காது என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

இதுவரை புதிய அரசியலமைப்புக்கான வரைவு உருவாக்கப்படவில்லை என்றும், அது உருவாக்கப்பட்டதும், மகாநாயக்கர்களின் முன் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் பெறப்படும் என்றும் உறுதியளித்திருந்தார் ஜனாதிபதி.

அதைவிட, ஒற்றையாட்சி முறையை அல்லது பௌத்தத்துக்கான முன்னுரிமையை நீக்குவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாநாயக்கர்களிடம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி இதே வாக்குறுதியை அஸ்கிரிய பீடத்தின் புதிய அனுநாயக்கருக்கான ஆணையை வழங்கும் நிகழ்விலும் மீள உறுதிப்படுத்தியிருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அனுராதபுரத்தில் ருவான்வெலிசாயவில் நடந்த நிகழ்விலும், அலரி மாளிகையில் இளம் பௌத்த பிக்குகளுடனான சந்திப்பிலும் இதுபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்.

ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்துக்கான முன்னுரிமை ஆகிய விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.-

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கூட ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கான முன்னுரிமை ஆகியவை உறுதிப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஆக, அரசாங்கத்தில் உள்ள எல்லோருமே, ஒற்றையாட்சியை உறுதிப்படுத்துவதிலும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை பேணும் விடயத்திலும் உறுதியாக இருக்கின்றனர்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே, இந்த இரண்டு விடயங்களைப் பற்றி ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் அவ்வப்போது கூறி வந்திருக்கின்றனர். இப்போது அதனை வலுவாக அழுத்திக் கூறத் தொடங்கியிருக்கின்றனர்.

MS-Sampanthan

அதற்குக் காரணம், புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறை நீக்கப்படப் போகிறது, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இழக்கப்படப் போகிறது என்ற பிரசாரம் வலுப்பெற்று, பௌத்த பீடங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது.

பௌத்த பீடங்களின் எதிர்ப்பை மீறி, புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. அதுவும், எப்போது இழுத்து விழுத்தலாம் என்று காத்திருப்பவர்களால் அமைக்கப்பட்ட கூட்டு அரசாங்கம் ஒன்றுக்கு, இது மிகப்பெரிய- எளிதில் வசப்படுத்த முடியாத அடைவு இலக்கு என்பதில் சந்தேகமில்லை.

இந்தநிலையில் தான் எப்படியாவது மக்களுக்குக் கொடுத்த ஆணையை மீறாத வகையில், எப்படியோ ஒரு அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

ஆனால் அது, எல்லா மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய ஒன்றாக குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய ஒன்றாக இருக்குமா என்பது தான் பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கப் போகிறது.

ஒற்றையாட்சியையும், பௌத்த மதத்துக்கான தனித்துவத்தையும் அரசியலமைப்பின் ஊடாக அடையாளப்படுத்துவதில் சிங்களத் தலைமைகள் எந்தளவுக்கு உறுதியாக நிற்கின்றனவோ அதேயளவுக்கும் தமிழ் மக்களும் தமது அபிலாசைகள் விடயத்தில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

சமஸ்டி ஆட்சி முறை, வடக்கு- கிழக்கு இணைப்பு உள்ளிட்ட அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாத வகையிலான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்களின் விருப்பாகவும், உறுதியாகவும் இருக்கிறது.

ஒற்றையாட்சியைக் கைவிட முடியாது என்று மறுக்கும் அரசாங்கத் தலைவர்கள் ஒரு புறத்திலும், ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்க முடியாது என்று உறுதியான நிலையில் இருக்கும் தமிழ் மக்களும் எவ்வாறு ஒரு புள்ளியில் இணைந்து கொள்ளப் போகிறார்கள் என்பது தான் பிரதானமான பிரச்சினை.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு விடயத்தை குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றையாட்சி முறையை நீக்குமாறோ, பௌத்தத்துக்கான முன்னுரிமையை நீக்குமாறோ யாருமே வழிநடத்தல் குழுவில் கேட்கவில்லை. அப்படியிருக்க அதில் எப்படி மாற்றங்கள் செய்யப்படும் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதுபோல, சமஸ்டி ஆட்சி முறை மற்றும் வடக்கு- கிழக்கு இணைப்பை யாருமே வலியுறுத்தவில்லை என்று ஐதேகவின் அமைச்சரான லக்ஸ்மன் கிரியெல்லவும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும், வழிநடத்த்ல் குழுவில் இருக்கின்ற நிலையில், சமஸ்டியையும், வடக்கு- கிழக்கு இணைப்பையும் அவர்கள் வலியுறுத்தவில்லையா என்ற கேள்வியும், ஒற்றையாட்சிக்கு எதிராகவும், பௌத்தத்துக்கான முன்னுரிமைக்கு எதிராகவும் குரல் கொடுக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் மாத்திரமன்றி அமைச்சர் மனோ கணேசனும் கூட இதேபோன்ற கருத்தை என்பதை விட, குற்றச்சாட்டை கூறியிருந்தார். அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, குறிப்பாக இரா.சம்பந்தனும், சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு ஒன்றையும், வழிநடத்தல் குழுவில் இன்னொன்றையும் கூறுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

இதனை மையப்படுத்தித் தான், குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட ஒரு தீர்வைத் திணிப்பதற்கு இவர்கள் துணைபோகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, பரவலாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியிலும் இதுபற்றிய ஆழமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் கூறுவதுபோல இல்லை, நாங்கள் சமஸ்டியைத் தான் வலியுறுத்தினோம், அரசியலமைப்பு வரைவு குறித்த இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி, சமஸ்டி ஆட்சி என்று இருக்காது, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டியின் பண்புகளைக் கொண்ட ஆட்சிமுறையை வலியுறுத்துகிறது என்று இருக்கும் என்று சுமந்திரன் கூறியிருந்தார்.

இடைக்கால அறிக்கை எப்படி வருகிறது என்பது முக்கியமல்ல. அதற்கு அப்பால், எவ்வாறு ஆட்சி முறை குறித்த இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவுள்ளது என்பது தான் முக்கியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை வலியுறுத்தியிருந்தாலும், அரசியலமைப்பு வரைவில் எத்தகைய ஆட்சிமுறை என்ற பதம் சேர்க்கப்படும், அதற்கான இணக்கம் எவ்வாறு ஏற்படுத்தப்படும் என்பது தான் முக்கியமானது.

நிச்சயமாக ஒற்றையாட்சியில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என்று கூறும் அரச தலைவர்கள் எவ்வாறு, சமஸ்டியின் பண்புகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்ப முடியும்? இது முதலாவது விடயம்.

அடுத்து, எவருமே ஒற்றையாட்சியை நீக்க வேண்டும் என்றோ, பௌத்தத்துக்கான முன்னுரிமைக்கு எதிர்ப்பையோ தெரிவிக்கவில்லை என்று அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள், கூறுகிறார்கள். வடக்கு -கிழக்கு மீள இணைக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று கூறுகிறார்கள்.

இவர்களின் இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருமுகம் காட்டுகிறது என்பதை வெளிப்படுத்துகிறதா, அல்லது கூட்டமைப்பை தமிழ் மக்கள் முன் கூனிக் குறுகி நிற்கவைக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டதா என்று தெரியவில்லை.

ஒற்றையாட்சியின் அடிப்படையிலான தீர்வை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று, அரசாங்கத்துக்கு தாங்கள் கூறியிருப்பதாக சுமந்திரன் கூறியிருந்தார்.

அவ்வாறாயின், ஒற்றையாட்சி முறையில் தான் தீர்வு என்றும், ஒற்றையாட்சியை நீக்குமாறு யாருமே கோரவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்ற போது, ஏன் சுமந்திரனிடம் இருந்து அதற்கான எதிர்வினை வரவில்லை?

தனியே அரசாங்கம் பௌத்த பீடங்களினதும், சிங்கள மக்களினதும் எதிர்ப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக மாத்திரம் ஒற்றையாட்சிப்  புராணத்தை அரசாங்கத் தலைவர்கள் பாடுகிறார்கள் என்று மாத்திரம் கருத முடியவில்லை.

இதே சாக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அவர்கள் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூட்டமைப்புத் தலைமை நன்றாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்களத் தலைமைகள் எப்போதுமே தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வந்திருப்பது வரலாறு. அதுபோன்று தான், இப்போதும், தமிழ் மக்களின் வலுவான அரசியல் பிரதிநிதிகளாக இருந்த கூட்டமைப்பையும், பலவீனப்படுத்த முனைகிறார்கள் போலத் தெரிகிறது.

வடக்கு- கிழக்கு இணைப்பையோ, சமஸ்டியையோ கேட்கவில்லை. ஒற்றையாட்சியை நீக்குமாறு கோரவில்லை என்று கூறியுள்ளதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாசைகளை முன் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசவில்லை என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது.

இது கூட்டமைப்புக்கு உள்ள மக்களின் செல்வாக்கை சிதைக்கின்ற ஒரு நடவடிக்கையும் கூட. இந்தக் கட்டத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வாய்திறக்கத் தவறுமேயானால் வரலாற்றுப் பழி அவர்கள் மீது சுமத்தப்படும்.

அதற்கு அவர்களே துணை போனவர்களுமாவார்கள்.

-என்.கண்ணன்

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *