மேலும்

இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் பயிற்சி பெறும் சிறிலங்கா கடற்படையினர்

launching SLNS Sayurala (1)இந்தியாவிடம் வாங்கப்படும் பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலை  செலுத்தும் பயிற்சிகள் மற்றும் சோதனைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக, அனைத்துலக பாதுகாப்பு ஊடகமான ‘ஜேன்ஸ் 360” செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு 105 மீற்றர் நீளம் கொண்ட இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை சிறிலங்கா வாங்கியுள்ளது.

கோவா கப்பல் கட்டும் நிறுவனம் இந்த இரண்டு ரோந்துக் கப்பல்களையும் கட்டியுள்ளது.

இதில் முதலாவது கப்பலுக்கு எஸ்எல்என்எஸ் சயுரால என்று பெயரிடப்பட்டுள்ளது. பி-623 என்ற தொடரிலக்கத்துடன் இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படும்.

2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கட்டத் தொடங்கப்பட்ட இந்தக் கப்பல், 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பி-624 என்ற தொடரிலக்கமிடப்பட்டுள்ள இரண்டாவது கப்பல், 2016 டிசெம்பரில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

தற்போது கோவா சென்றுள்ள சிறிலங்கா கடற்படை அதிகாரிகள், இந்தக் கப்பலைச் செலுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டு, இதிலுள்ள கருவிகளைப் பயன்படுத்தும்  முறைகளை அறிந்து வருகின்றன.

மேலும், இந்தக் கப்பலில் தேவைப்படும் வசதிகள், மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பாகவும் இவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தக் கப்பலின் ஆற்றல்கள் தொடர்பாக, தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக, சிறிலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சங்கல்ப் வகை ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இந்திய கடலோரக் காவல்படையினால் பயன்படுத்தப்படுகிறது.

18 அதிகாரிகள் உள்ளிட்ட 118 கடற்படையினர் இதில் பணியாற்றுவர். ஒரு உலங்குவானூர்தி தரையிறங்கும் வசதியைக் கொண்ட இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல், 4500 மைல்கள் வரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபடக் கூடியதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *