மேலும்

சம்பூர் பெருநிலப்பரப்பில் நடந்தேறிய இனப்படுகொலை (07.07.1990)

deepamவீரம் கொழித்த மறவர் வாழும் வீரநிலம் சம்பூர். இங்கு இரத்த சகதியும் மரண ஓலமும் நிரம்பி வழிந்த நாள் இது.  சிங்கள பௌத்த இராணுவத்தாலும், அவர்களோடு இயங்கிய கூலிப்படைகளாலும் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்ட கோரம்  நடந்தேறி இன்றுடன் இருபத்தேழு ஆண்டுகள்.

எந்த ஊடகமும் இப்படுகொலையை எடுத்தியம்பவில்லை, எந்தச்சட்டமும் இப்படுகொலைக்கான நீதியை வழங்கவில்லை. முதன்முதலாக ஊடகத்தில் பதிவேறும் இப்படுகொலைகளின் பெருந்துயரம்.

1990 களின் நடுப்பகுதியில், மூதூர் சிறு நகர் மீதான, விடுதலைப் புலிகளின்  தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வெற்றியை அண்மித்த வேளையில், சிறிலங்கா படையினருக்கு ஆதரவாக கடலாலும் காட்டுப்பகுதிகளாலும் சிங்கள படைகள் தரையிறங்கப்பட்டு, மூதூரை நோக்கி நகர்த்தப்பட்டன.

மூதூரையும் தமிழர் பகுதியையும் பிரிக்கின்ற, அல்லது இணைக்கின்ற கட்டைபறிச்சான் பாலத்தருகே விடுதலைப் புலிகளின் அதிரடி தாக்குதலால் அப்படை நிர்மூலமாக்கப்பட்டு, ஒருசிலர் தப்பி செல்கின்றனர். தப்பிச் சென்ற சிப்பாய்கள் கொண்ட பழி தீர்க்கும் வதைபடலமாய் தான் இப்படுகொலையை கருத முடிகிறது.

ஆரம்ப காலந்தொட்டு தமிழர் பகுதிகளை நோக்கி சிங்கள இராணுவம் படையெடுக்கும் சந்தர்ப்பங்களில் எங்கள் வயல்களும், குளங்களும் மற்றும் காடுகளும் எம்மை பாதுகாத்தருளின.

இப்படையெடுப்பு ஒரு நாள் இல்லது இருநாளில் முடிந்து சிங்கள இராணுவம் எமது ஊரை விட்டு சென்றதும் நாமும் வீடு செல்வது வழக்கம். ஆனால் ஆடி மாதம் ஏற்பட்ட படையெடுப்பு மூன்று நாட்கள் தொடர்ந்தது, எமது துன்பமான தருணங்கள் எனலாம்.

ஆடி மாதம் இயற்கை தாவரங்கள் இலைகளை உதிர்க்கும் . வரட்சியால் குளங்கள் வற்றியது போல, எங்கள் நாவும் வரண்டே கிடந்தது. பெரும்பாலும் நாங்கள் வைத்திருக்கும் சிறு கைப்பை அல்லது தோள் பையில் ஒரு நாளுக்கான தண்ணீர் மற்றும் உலருணவுகள் இருக்கும். இருந்தும் இப்படையெடுப்பு மூன்று நாட்கள் நீடித்தமைமையால் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது.

தரை, வான், கடல் என மும்முனைகளிலும் தாக்குதல் சம்பூரை துவம்சம் செய்தன. காடுகள் சுற்றிவளைக்கப்பட்டு, ஒரு சில தமிழர்களை கைது செய்து, அவர்களின் மூலம் ” இராணுவம் போய்விட்டான் வெளியில் வாருங்கள்” என குரல்  கொடுக்கப்பட, அதனை நம்பி  பசியும், தாகமுங் கொண்ட எம் இனிய உறவுகள் காடுகளை விட்டு வெளிவர, சிங்கள இராணுவம் தன் இரத்த இனவெறியை தீர்த்தது.

சம்பூர் பெருநிலம் 1990 களில் பலருக்கு அடைக்கலம் தந்த தாய்க்கிராமம். 1986களில் ஏற்பட்ட இனவன்செயலால் இடம்பெயர்ந்த தமிழ் உறவுகள் பல கிராமங்களாக, நலன்புரி நிலையங்களில் பாதுகாப்பாக வாழ்ந்தனர்.

இக்காலத்தில் நடந்த பாரிய படையெடுப்பு காரணமாக சம்பூர் கிரமத்தில் மட்டும் சுமார் எழுபத்தைந்து தொடக்கம் நூறு அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள் பாடசாலை அதிபர், பாடசாலை மாணவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், குடும்ப தலைவர்கள், குடும்ப தலைவிகள், பரிகாரி ( கிராம மூலிகை வைத்தியர்), கோயில் பூசகர், மற்றும்  பலர் அடங்குவர்.

பாடசாலை சமூகம் எனும்போது, ஐயா பு. செல்லக்குட்டி – சம்பூர் மகாவித்தியாலய அதிபர்,  மாணவர்களான இ. பத்மநாதன், ம. பிரேமானந்தராஜா, ச. ரவி, கோ. சோமேஸ்வரன்,  க. நித்தியசீலன், லி. பரணிதரன், சோ. சச்சிதானந்தம்,   ச. உதயமோகன்,  இ. ஜெகதீஸ்வரன், ந. பவானந்தம், மு. விஜயநந்தன், மு. விஜயகாந்தன், இ. வாமதேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்

பழைய மாணவர்களான, ஓ. இந்திரன் ,வை. வெற்றிவேல், த.  தில்லைநாதன், சொக்கலிங்கம், ந. அருணாச்சலம், க. யோகநாதன், சி. கவிரூபன், சி. கனகசிங்கம், சி. கோணலிங்கம், சி. சிங்கராசா, இ. ரவிநேசன், இ. சிவனேசன், வீ. அரசமணி, சி.குணராசா, சி.மாணிக்கராசா,  தா. சிவகுமார்  போன்றோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடங்கியிருந்தனர்.

க. கானசரஸ்வதி (கணபதி ஆசிரியரின் மனைவி), வை. அழகம்மா, ஆகியோரும், காவல்துறையைச் சேர்ந்த  பே. அருமைப்பிள்ளை, க. செல்வராசா என்போரும், கிராம மூலிகை வைத்தியர்  க. பேச்சுமுத்து,  இராசேந்திரம் (கூனித்தீவு தலைவர்), சுப்பிரமணியன் விநாயகநேசன், வைரமுத்து சுப்பிரமணியன், வேலுப்பிள்ளை வைரமுத்து, அல்லிராசா, அவரது இருமகன்கள் என படுகொலையானவர்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.

இதே போல எத்தனை எத்தனை படுகொலைகள். சிங்கள பௌத்த பேரினவாதத்தால் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. நீதி மறுக்கப்பட்டது.

இந்நாளில் தங்களது உறவுகளை காப்பாற்ற முடியாமல் போனதை நினைந்துருகும் எம் உறவினர்களை ஆற்றுப்படுத்துவோம், எமை விட்டு பிரிந்த உறவுகளின் புனித ஆன்மா சாந்திபெற வேண்டிக்கொள்வோம்.

– ஞா.ரேணுகாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *