மேலும்

வடக்கின் அபிவிருத்தி குறித்து சிறிலங்கா பிரதமர் ஆய்வு

ranil-pointpedro (1)வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராய்வதற்கே சிறிலங்கா பிரதமர் இன்று காலை 9 மணியளவில் அங்கு சென்றிருந்தார்.

சிறிலங்கா பிரதமருடன் அமைச்சர் சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரும் பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது, துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் தொடர்பாக அரச அதிகாரிகளுடன் சிறிலங்கா பிரதமர் கலந்துரையாடினார்.

ranil-pointpedro (1)ranil-pointpedro (2)

முன்னதாக நேற்று பிற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடந்த வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர்,

“வடக்கை அபிவிருத்தி செய்யும் முயற்சியாக, வடக்கிற்கு முதலீடுகளைக் கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளும், சிவில் சமூகத்தினரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாம் இப்போது உட்கட்டமைப்பு அபிவிருத்தியை ஆரம்பிக்க விரும்புகிறோம். மீளக்கட்டியெழுப்புதல், மீள்குடியமர்வு, நல்லிணக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அபிவிருத்தியை உள்ளடக்கிய வளர்ச்சி நோக்கு நிலையை இப்போது  பார்க்க வேண்டியுள்ளது. மாகாணத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

ஏனென்றால் வடக்கு மாகாணம் தான் குறைந்தளவு பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு பெரிய முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும் பாரிய முயற்சி ஒன்றை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

சில ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்,பிரதான முதலீடுடுகள் ஏதும் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவில்லை. அபிவிருத்திக்காக மிகவும் நெருக்கடியைச் சந்தித்துள்ள பிராந்தியங்களில் வடக்கு மாகாணமும் ஒன்றாகும்.

உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் ஊடாக,  பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்,இந்தியாவின் உதவியுடன் வடக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ranil-cm

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம்- மன்னார், மன்னார்- வவுனியா, வவுனியா- திருகோணமலை வீதி முறையை அபிவிருத்தி செய்வது குறித்து நாம் ஏற்கனவே இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளோம்.

இதனைப் பின்னர், தற்போது கட்டப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்க முடியும். இந்த பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சுற்றுலா அபிவிருத்தியிலும் வடக்கு மாகாணம் கவனம் செலுத்த வேண்டும். புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக சுற்றுலா செயலணி வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளும்.

வடக்கில் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் பொருளாதார வலயங்களை வலயங்களை உருவாக்கும் திட்டங்கள் உள்ளன. எனினும், நீர் மற்றும் ஏனைய வளங்களுக்கான வரையறைகள் இருப்பதால், யாழ். குடாநாட்டுக்கு வெளியிலேயே பொருளாதார வலயங்களை அமைக்க முடியும்.

ஆனாலும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்கள் இங்கு வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.  எனவே வடக்கை கைத்தொழில்மயப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்” என்றும் சிறிலங்கா பிரதமர் கூறியிருந்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *