சீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ள வேண்டாம்- ரணிலுக்கு அறிவுறுத்திய மைத்திரி
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான எந்த விடயங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டைச் செய்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பயணமாக நேற்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின் போது, சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது.
அதேவேளை, சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா அதிபரும் பிரதமரும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
இதன்போதே, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில், சீனாவுடன் அது தொடர்பான எந்த உடன்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்துக்கு முன்னர் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.