மேலும்

மகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய மோடி – புதுடெல்லி வருமாறு அழைப்பு

Modi-mahindaவிரிவான அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, புதுடெல்லிக்கு வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

மூடிய அறைக்குள் தனியாக இருவருக்கும் இடையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது அரசியல் குறித்து கலந்துரையாடப்படவில்லை. ஆனால், இந்தச் சந்திப்பு ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்ததாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது மிகவும் சிநேகபூர்வமான, சுமுகமான கலந்துரையாடலாக இருந்தது. எனினும் அரசியல் பேசப்படவில்லை என்று, கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் நேற்று பிற்பகல் தெரிவித்தார்.

“பல்வேறு நாளிதழ்கள் இந்தச் சந்திப்பு ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக செய்தி வெளியிட்டுள்ளன. வேறு சில 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்ததாகவும், இன்னும் சில 15 நிமிட சந்திப்பு என்றும் கூறியுள்ளன. உண்மையில் எவ்வளவு நேரம் சந்திப்பு நடந்தது என்று என்னால் கூற முடியாது.

என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்று நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் அரசியல் பற்றி கலந்துரையாடப்படவில்லை” என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, விரிவான அரசியல் கலந்துரையாடலை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்தார் என்று கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்காக மகிந்த ராஜபக்சவுடன் கோத்தாபய ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இந்தியப் பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.

எனினும், கலந்துரையாடல் மண்டபத்தில், மூடிய அறைக்குள் மகிந்த ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் மோடியும் தனியாகப் பேச்சு நடத்தியதாகவும்,ஏனையோர் வெளியே காத்திருந்தனர் என்றும், கோத்தாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *