மேலும்

சரத் பொன்சேகா அம்பலப்படுத்திய இரகசியங்கள்

sarath-fonsekaமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால இரகசியங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று நடத்தியிருந்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு-

யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்தவின் பிள்ளைகள் சுகபோகமாக காலத்தை கழித்தார்கள். காலைமுதல் மாலை வரை ரகர் விளையாடினர். போட்டியில் தோல்வியடையும் போது நடுவர்களை தாக்கினர். ரசிகர்களை தாக்கினர். இதுதானா அபிவிருத்தியின் பிரதிபலன் ?.

கடந்த அரசாங்கத்தில் ஊடகங்களுக்கு உண்மை தன்மையை வெளிப்படுத்த முடியவில்லை. வெளிப்படுத்தினால் தொழில் அற்றுப்போகும். அதிகமான ஊடகவியலாளர்களை பலாத்காரமாக தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டார்கள். ஊடக நிறுவனங்கள் அரசாங்கம் தொடர்பில் உண்மை தன்மையை வெளிப்படுத்தினால் அவர்களின் அனுமதிப்பத்திரத்தை செயலிழக்கச்செய்வதாக பகிரங்கமாக தெரிவித்தனர். நாட்டின் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டிருந்தனர். நாட்டில் அவர்களுக்கு தேவையானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள் விரும்பியவர்களை விடுவித்தார்கள்.

அதேபோன்று நீதிமன்றங்களுக்கு தனக்கு தேவையானவர்களை நியமித்தனர். அவர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களை பதவி நீக்கினார்கள். முன்னாள் பிரதம நீதியரசருக்கு என்ன நடந்தது என்ற முழுநாட்டுக்கும் தெரியும் . இவ்வாறு தான் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். மக்கள் பீதியில் வாழ்ந்தனர். அன்றிருந்த பயம் இன்று இருக்கின்றதா ? இன்று அந்த நிலைமை யாருக்கும் இல்லை. அந்த வித்தியாசத்தை நாட்டுக்கு கொண்டுவந்தோம். நாங்கள் உயிரை பணயம் வைத்து பெற்ற சுதந்திரத்தை மீண்டும் இழக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

பழிவாங்கல்

இராணுவத்தில் பல அதிகாரிகள், அவர்கள் என்னுடன் இருந்தார்கள் என்பதற்காக எந்த குற்றமும் சுமத்தப்படாத நிலையில் சிறையிலடைக்கப்பட்டார்கள். எமது காரியாலயத்தில் சேவை செய்த ஓய்வு பெற்ற இராணுவத்தினர் பலரை கைதுசெய்தார்கள். அதில் கப்டன் சேனக்க எந்த குற்றச்சாட்டும்இன்றி 440நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். இந்த காலத்தில் சிறையிலடைக்கப்பட்டிருந்த யோசித, ஞானசார தேரர் போன்றவர்களுக்கு இருந்த சுதந்திரம், வசதிகள் அன்று எமக்கிருக்கவில்லை.

மேலும் இராணுவ தளபதி என்ற வகையில் அரசாங்கம் காணித்துண்டொன்றை வழங்கியது . அதற்கு நான் 90 இலட்சம் ரூபா செலுத்தினேன். எனை சிறையிலடைத்து அந்த காணியை பலாத்காரமாக பெற்றுக்கொண்டார்கள். எந்த அனுமதியும் இன்றி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அதை கைப்பற்றிக்கொண்டார்கள். கொடுத்த பணமும் எனக்கு கிடைக்க வில்லை. தற்போது ஜனாதிபதி அந்த காணியை மீண்டும் எனக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தார்.

2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நான் பாராளுமன்றம் சென்றேன். பாராளுமன்ற உறுப்பினருக்கு கார் அனுமதிப்பத்திரம் ஒன்று வழங்கப்படும். நான் 5மாதங்கள் பாராளுமன்றத்தில் இருந்தேன். என்னுடைய அனுமதிப்பத்திரத்தை தரவில்லை. காரணம் நான் இராணு வ தளபதியாக இருக்கும்போது கார் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொணடதாக தெரிவித்தனர். ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ தளபதிக்கு தாங்கள் பாவித்த காரை எடுத்துச் செல்லலாம் என்று சட்டம் ஒன்றின் ஊடாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு பாராளுமன்றத்தில் கார் அனுமதி பத்திரம் வழங்கவில்லலை.

அந்தளவுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக மிகவும் முறையற்ற வகையில் நடந்து கொண்டார். அந்த காலப்பகுதியில் அவர் இராஜதந்திர தலைவர் ஒருவருக்கு இருக்க வேண்டிய மனநிலையில் இருக்கவில்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.

என்னுடைய கார் அனுமதிப்பத்திரத்தை தராமல் தடுத்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது கார் அனுமதிப்பத்திரத்துக்காக வரிசையில் இருப்பதை நான் கண்டேன். அத்துடன் அந்த அனுமதிப்பத்திரத்தை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் அதை கார் வாகன விற்பனை நிலையமொன்றுக்கு விற்பனை செய்து விட்டு சென்றதாக எமக்கு தகவல் கிடைததது. அந்த நிலைமைக்கு அவர் விழுந்திருப்பதை கண்டு நான் கவலைப்படுகிறேன். இவ்வாறான ஒரு நிலைமை இந்த நாட்டில் யாருக்கும் ஏற்படக் கூடாது என பிராத்திக்கின்றேன்.

யுத்த வெற்றி

யுத்த வெற்றி தொடர்பாக முற்றாக பிழையான செய்தியொன்றே கொண்டு செல்லப்பட்டது. உலகில் எந்த நாட்டிலும் யுத்த வெற்றி அடைந்ததற்காக ஜனாதிபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தங்களது பெயர் மற்றும் பதாதைகள் தொங்கவிடமாட்டார்கள். அதுதொடர்பாக புத்தகம் எழுதவோ அலலது மலர் மாலை அணிய மாட்டார்கள். தெற்காசிய நாடுகளிலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் யுத்த வெற்றிகள் அடையப்பெற்றுள்ளன. ஆனால் இவர்கள் போன்று அவர்கள் செயல்படுவதை நாம் ஒருபோதும் கண்டதில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் யுத்தவெற்றிகளை அடைந்துள்ளன. அவர்கள் அந்த வெற்றியை நாடுபூராகவும் கூறிக்கொண்டு தேர்தலில் வாக்கு கேட்கவில்லை.

ஆனால் எமது தலைவர்கள் அவ்வாறுதான் செயல்பட்டனர். இறுதியில் ராஜபக்ஷவும் அவரது சகோதரரும் தான் இராணுவத்தை வழி நடத்தியதாகவும் சொன்னார்கள். அவர்கள் அரசியல்வாதிகள் என்பதை மறந்துவிட்டார்கள். அவர்கள் இராணுவ சீருடை அணிந்து யுத்த களத்தில்இருப்பது போன்ற மனநிலையில் செயல்பட ஆரம்பித்தனர். யுத்தத்தின் உண்மை நிலையை எதிர்காலத்தில் வெளிப்படுத்துவோம். புத்தகம் ஒன்றினூடாக சரி வெளிப்படுத்துவோம். அப்போது மக்களுக்கு யுத்தகளம் எவ்வாறு இருந்தது என்பது தெரியவரும்.

யுத்தத்தை வெற்றி கொள்ள எனக்கு சில உபாயங்களை செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் வெல்ல முடியாது எனறு கூறிய யுத்தத்தை வென்றோம். யுத்தத்தை வெற்றிகொள்ள எனக்கு புதிதாக ஒன்றும் தரவில்லை. நான் இராணுவத்தை பொறுப்பேற்கும் போது வருடத்துக்கு 820 மில்லியன் ரூபா இராணுவத்துக்கு கிடைத்தது.

அந்த பணத்தைக் கொண்டே இராணுவத்தை வழிநடத்தினேன். 2 இலட்சம் இராணுவத்தினருக்கு உணவு, சீருடை, சம்பளம் கொடுத்தேன். 700க்கும் மேற்பட்ட வாகனங்களை இராணுவத்துக்கு பெற்றுக்கொண்டோம். இவற்றையெல்லாம் இந்த 82 பில்லியனிலேயே மேற்கொண்டேன்.

நாங்கள் 40வருடகாலம் யுத்த களத்தில் தொடர்நது இருந்ததால் தான் பயங்கரவாதிகளை எவ்வாறு தாக்க முடியும்? அவர்களுக்கு எதிராக எவ்வாறான புதிய முறைமைகளை பின்பற்றலாம் போன்ற அனுபவங்களைப் பெற்றுக்கொண்டோம். அப்படியில்லாமல் நாங்களும் டிங்கரிங் வேலை செய்திருந்தால இந்த அனுபவம் வந்திருக்காது.

தொடர்நது களத்தில் இருந்தமையினால் படையினருக்கு புதிதாக பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய அணுகுமுறைகளை கையாள முடியுமாக இருந்தது. சிறந்ததொரு தலைமையை கொடுக்க முடிந்தது. இதை கொழும்பில் இருந்த கொண்டு கழுத்துப்பட்டி அணிந்து கொண்டு அல்லது தேசிய உடை அணிந்து கொண்டு செய்ய முடியாது.

படையினருக்கு கட்டளையிடும் போது இராணுவ சீருடை அணிந்திருந்த ஒருவர் சொல்லும் போதுதான் படையினர் அதை கேட்டு செயற்படுவார்கள். மாறாக சாதாரண நபர் ஒருவர் கூறுவதை அவரகள் நம்பமாட்டர்கள்.

எனவே யுத்த வெற்றியின் முழுக் கௌரவமும் யுத்தத்தை களத்திலிருந்து மேற்கொண்ட படையினருக்கே உரித்தாக வேண்டும். அரசியல்வாதிகளுக்கல்ல. நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் அனைவரும் யுத்தத்தை மேற்கொள்ள வேண்டாமென்றுக் கூறவில்லை.

ஆனால் மாவிலாறு மூடப்பட்டபோது போராட்டத்திற்கு செல்ல முற்பட்டவேளை அரசியல்வாதிகள், பௌத்த பிக்குமார் அங்கு சென்று எதைக் கொண்டு தாக்கப் போகின்றீர்கள் என கேள்வியெழுப்பியிருந்தனர். இதனை அமைச்சர் சம்பிக ரணவக்க ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான நிலைமையிலேயே மாவிலாறு போராட்டத்தை மேற்கொண்டேன். மாவிலாறு மூடப்பட்டது ஜுன் மாதம் 24 ஆம் திகதி. அப்போது நான் சிங்கப்பூர் வைத்தியசாலையிலிருந்தேன். ஒன்றரை மாதம் கொழும்பு வைத்தியசாலையிருந்தேன். ஏனென்றால் தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலுக்கு நான் ஆளாகியிருந்தேன். மூன்று மாதத்திற்கும் 100 மில்லி லீற்றர் தண்ணீர் மாத்திரமே எனக்கு கொடுத்தார்கள். சாப்பாடு எதுவும் வழங்கப்படவில்லை.

மாவிலாறு மூடப்பட்டு ஜுன் 25 ஆம் திகதி நான் இலங்கைக்கு வந்தேன். 26 ஆம் திகதி திருகோணமலைக்குச் சென்றேன். காயங்களுக்குத் தேவையான மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டே யுத்தக் களத்திற்கு சென்றோம். அவ்வாறே இரண்டு வருடமும் 9 மாதங்களும் அர்ப்பணிப்புடன் யுத்தம் புரிந்தோம். 24 மணிநேரமும் வருடத்தில் 365 நாட்களும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் தான் என்னை தற்போதைய ஜனாதிபதி பீல்ட் மார்சல் என்ற பதவியினை வழங்கி கௌரவித்தார்.

இதுபோன்ற சமமான அர்ப்பணிப்பு யார் வழங்கினாலும் இவ்வாறான பதவிகள் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இவ்வாறான அர்ப்பணிப்பினை மேற்கொள்ளாத ஒருவருக்கு முப்படைகளின் தளபதி இவ்வாறான பதவி வழங்குவார் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புகளை தற்போதைய முப்படைகளின் தளபதி உணர்ந்து கொண்டமையிட்டு அவரை பாராட்டுகின்றேன். அதேபோன்று முன்னாள் முப்படைகளின் தளபதியாக இருந்தவருக்கு எம்முடைய அர்பணிப்பை உணர்ந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு நாங்கள் கவலைப்படுகின்றோம். அத்துடன் வெட் கப்படுகின்றோம்.

மேலும் இந்த யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதாவது இராணுவ வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உரிய நேரத்திற்கு வழங்கிய மிகவும் திறமையான அதிகாரிகள் 35 பேர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் எந்த விசாரணையுமன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கடந்த ஜனவரி 8 ஆம் திகதியின் பின் மீண்டும் தொழிலைப் பெற்றுக் கொடுத்தோம். அவர்கள் செய்த தவறு எனன்வெனவெனில் நான் கட்டளையிட்ட பொறுப்புவாய்ந்த இடத்தில் பொறுப்புடன் செயற்பட்டதாகும். அதனால் அவர்களிடம் பழிவாங்கினர். அவர்களை வீட்டுக்கு அனுப்பினர்.

அப்படியென்றால் யுத்தத்தை வெற்றிகொண்டதாக சொல்லும் நபர் யுத்தத்துக்கு கட்டளையிட்டார் என்றால் பொறுப்புவாய்ந்த இடத்தில் இருந்தவர்களை ஏன் பழிவாங்க வேண்டும். அப்படியென்றால் அவர்கள் சேவை செய்திருப்பது கோத்தபாயவுக்கும் முப்படைகளின் தளபதிக்குமாகும்.

கோத்தாவின் இராணுவ வாழ்க்கை

கோத்தபாய ராஜபக்ஷ இராணுவத்தில் நான்கு ரெஜிமன்ட்களில் பணிபுரிந்துள்ளார். சைகை ரெஜிமன்ட்டில் ஆரம்பித்து சிங்ஹ ரெஜிமன்ட்டுக்கு வந்து பின்னர் ரஜரட்ட றைபிள் ரெஜிமன்டிலிருந்து இறுதியாக கஜபா ரெஜிமன்டில் பணிபுரிந்தார். அங்கிருந்து அமெரிக்காவில் டின்கரின் ரெஜிமன்ட்டுக்கு சென்றார். இராணுவத்தில் நான்கு ரெஜிமன்ட்டுகளில் சேவை செய்த ஒரே நபர் இவர்தான்.

நான் சிங்ஹ ரெஜிமன்டில் சேவை செய்தேன். அதற்காகவே எனது உயிரையும் தியாகம் செய்யுமளவிற்கு பணிபுரிந்தேன். ஒரு ரெஜிமன்டிலிருந்து வேறு ரெஜிமன்டுகளுக்கு இராணுவத்தினரை அனுப்பும்போது சில இராணுவ வீரர்கள் இராணுவ சேவையில் வெறுப்படைந்து விலகிச் செல்வார்கள்.

கோத்தபாய ராஜபக்ஷ ரைபள் ரெஜிமன்டில் இருக்கும்போது கோத்தா மற்றும் மேலும் சில இராணுவத்தினரின் செயற்பாடுகள் காரணமாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதிகளிடம் தோல்வியுற்றதால் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்தனர். இதனால் அந்த ரெஜிமன்டை கலைத்துவிட்டார்கள். சிங்ஹ ரெஜிமன்டில் அவர் இணைந்தபோது அவருக்கென்று ஒருகூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒருமுறை பதவி உயர்வு பயிற்சி நடவடிக்கைக்காக மின்னேரியா காட்டுக்கு படையினர் 50 பேரை அழைத்துக் கொண்டு சென்றனர். அந்த 50 பேருக்கும் கோத்தபாயவின் தலைமையின் கீழ் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் ஒரு இராணுவ வீரருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அந்த வீரரை இழுத்துக்கொண்டு செல்லுமாறு கோத்தா கட்டளையிட்டார். அவரை இழுத்துச் செல்லும்போது கோத்தா காலால் உதைத்துக் கொண்டு சென்றார். அந்நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

அப்போது அந்த 50 பேரும் இணைந்து கோத்தா மற்றும் சிரேஷ்ட நான்கு பேரையும் சுற்றிவளைத்து தாக்க முற் பட்டனர். அப்போது இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று ஒருமாதமளவில் மறைந்திருந்தனர். கோத்தபாய பணிக்கு வராமல் நுகேகொடையிலுள்ள வீட்டில் மறைந்திருந்தார். சிங்ஹ ரெஜிமன்ட் படையினர் நுகெகொட வீட்டுக்கு சென்று அங்கும் தாக்கியுள்ளனர்.

பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக இருந்தமையினால் அவருடைய சிபாரிசில் கோத்தபாய மாத்திரம் இராணுவத்தில் இணைந்து கொண்டு அங்கிருந்து வெளியில் சென்றுவிட்டார். ஏனைய நான்கு பேரும் விலக்கப்பட்டார்கள். நான் சொல்வது பொய்யாக இருந்தால் கோத்தபாய ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்தி உண்மையினை தெரிவிக்கலாம்.

யுத்தகளத்தில்

மண்டைத்தீவினை கைப்பற்றுவதற்கு செல்லும் போது சரத் பொன்சேகா தனக்குக்கீழ் செயற்பட்டதாக கோத்தபாய ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார். ஆனால் சிங்ஹ ரெஜிமன்ட் படையணியை கோத்தாவுக்கு உதவி செய்யுமாறு டென்சில் கோப்பேகடுவ தெரிவித்திருந்தார். அந்த வகையில் நான் அவருக்கு அந்தக் களத்தில் உதவிபுரிந்தேன்.

மாலை 5.00 மணியளவிலேயே இந்த கட்டளை எமக்கு கிடைக்கப் பெற்றது. 5.30 மணியளவில் கோத்தபாய மண்டைத்தீவு கைப்பற்றுவதற்கு தனது படையணியுடன் மண்டைத்தீவின் கீழ் பகுதிக்கு வந்திருந்தார். அந்தப் பகுதி களப்பு பகுதியாக இருந்தது. படையணியில் கோத்தாவும் சவேந்திர சில்வாவும், சுமேந்திர பெரேராவும் கரையிலிருந்தார்கள். ஏனையவர்கள் தண்ணீரில் இறங்கினார்கள்.

அந்தப் பகுதியிலிருந்து தெற்கு திசையில் வயல் நிலம் காணப்பட்டது. படையினர் அவ்வழியினால் சென்றிருந்தால் அவர்கள் திரும்பி வந்திருக்கமாட்டார்கள். இதனை நாங்கள் உணர்ந்து கொண்டு மேல்திசையினால் சென்று தாக்குதல் நடத்தினோம். அவ்வாறே தாக்குதல் நடத்திக் கொண்டு முன்நோக்கி சென்றோம். இவ்வாறு மண்டைத்தீவை முற்றாக கைப்பற்றினோம். ஆனால் கோத்தபாய தொடர்ந்து களப்புக்குள்ளேயே இருந்தார். இந்தப் போராட்டத்தில் 60 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மறுநாள் அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன இதனை பார்க்க வந்தார். உயிரிழந்த சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் கஜபா என்று பெரிய எழுத்தில் பதாகையொன்று வைக்கப்பட்டு கோத்தா உள்ளிட்ட அந்தப் படையணியினர் ஊடகங்களுக்கு காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மண்டைத்தீவினை கைப்பற்றியது சிங்ஹ ரெஜிமன்ட் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின் கோத்தபாய இராணுவத்திலிருந்து சென்றுவிட்டார். அதன்பின் அவருடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை. மீண்டும் அவர் பாதுகாப்பு செயலாளராகவே இங்கு வந்தார். அப்போது அவர் மாறியிருப்பார் என நான் நினைத்தேன். ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

இராணுவத்தில் இருக்கும்போது எவ்வாறு மற்றவர்கள் செய்யும் வேலைக்கு தனது பெயரை உள்வாங்கிக் கொண்டாரே அதே செயலையே செயலாளராக வந்தபோதும் மேற்கொண்டார்.

யுத்தக்குற்றம்

இராணுவத்தினர் ஒட்டுமொத்தமாக யுத்தக்குற்றச்செயலை மேற்கொள்ளவில்லை. இராணுவத்தில் இருக்கும் ஒருசிலர் எமது கட்டளையை மீறி செயற்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆதாரம் இருந்தால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதுக்குடியிருப்பில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக கூறும் செய்தி முற்றிலும் தவறானதாகும். யுத்தம் முடிவடைவதற்குள் 2 மாதங்களுக்கு முன்னர் செஞ்சிலுவை சங்கம் நாளாந்தம் அங்கு காயப்படுபவர்களை கொண்டு வந்து கடற்படையிடம் ஒப்படைப்பபார்கள். இந்த இரண்டு மாதத்திற்குள் 350 பேரளவிலேயே சிவிலியன்கள் காயமடைந்த நிலையில் கொண்டு வந்தனர். அவர்கள் எல்லோரும் எங்களது தாக்குதலில்தான் காயமடைந்தார்கள் என சொல்ல முடியாது.

அத்துடன் அவர்களில் புலி உறுப்பினர்களும் இருந்துள்ளனர். அவர்களும் சிகிச்சைக்காக இந்தப் பகுதிக்கு வந்திருந்தனர். 40 ஆயிரம் பேர் அங்கு அடக்கப்பட்டிருந்தால் சாதாரண ஒரு மண்வெட்டியால் தோண்டினாலும் எலும்புகள் தென்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் கொழும்பிலிருக்கும் எனது அலுவலகத்திலிருந்து வீடியோ கேமராவினூடாக புதுமாத்தளன் பகுதியில் உயிரிழந்த புலி உறுப்பினர்களை அவர்களுடைய கொடியினால் போர்த்தி அடக்கம் செய்வதை பார்த்தார்கள். அந்தப் பகுதியில் எங்களுடைய எண்ணிக்கையின் பிரகாரம் 900 பேரளவில் ஒரே வரிசையில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு மோட்டார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆம். ஒரு குண்டு அங்கு வெடித்தது. அந்தக் குண்டு அங்கு விழுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் செஞ்சிலுவை சங்கத்தின் அங்கிருந்த பொறுப்பாளியை எனது காரியாலயத்திற்கு அழைத்து நாங்கள் புதுக்குடியிருப்பை நெருங்கியிருக்கின்றோம். ஆயினும் அந்தப் பகுதியிலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்துமாறு கூறியிருந்தோம்.

என்றாலும் தவறுகள் காரணமாகவே அந்த மோட்டார் தாக்குதல் அங்கு விழுந்தது. சட்டத்தின் பிரகாரம் நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியிருந்தோம். என்றாலும் அந்தப் பகுதியிலிருந்து 2 இலட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களைப் பாதுகாத்துக் கொண்டு வந்தோம். அதேபோன்று 23 ஆயிரம் பயங்கரவாதிகளை கொலை செய்தோம். 12 ஆயிரம் பேரை உயிருடன் மீட்டோம்.

பொட்டு அம்மான், ராஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர். இந்தியாவுக்கு அவர் தேவைப்படுகிறார். அவர் இந்தியாவில் மறைந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. பொட்டு அம்மானும், பிரபாகரனும் நந்திக்கடல் தெற்கினூடாக தப்பிச் செல்வதற்கு 17 ஆம் திகதி இரவு முயற்சித்தனர். சார்ள்ஸ் அன்டனி போன்றவர்கள் 17 ஆம் திகதி இரவு நந்திக்கடல் வடகிழக்குப் பகுதியில் கொல்லப்பட்டார்கள்.

பிரபாகரனும் பொட்டு அம்மான் மற்றும் சிலர் நந்திக்கடல் தென் பகுதிக்கு சென்றதாக கே.பி. கூறியிருக்கின்றார். அத்துடன் பிரபாகரன் திரும்பி வந்ததாகவும் பொட்டு அம்மான் வரவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். அந்த தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும். பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

பிரபாகரனை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தால் இப்போது கே.பி.யை அரச அரண்மனையில் வைத்திருந்ததைப் போன்று பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார்கள். அத்துடன் அவருக்கு வடகிழக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார் என்றார்.

வழிமூலம்- வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *