மேலும்

சம்பூரை வசப்படுத்த சீனா முயற்சி – இரா.சம்பந்தன்

sampanthanதிருகோணமலையில் சம்பூர் பகுதியை தம்வசப்படுத்தும் முயற்சியில் சீனா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இந்திய- சிறிலங்கா கூட்டு முயற்சியாக, சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று அந்தப் பிரதேசத்தில் காலை முதல் மாலை வரை அடையாள எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

பசுமை திருகோணமலைஅமைப்பினரால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேசினார்.

sampoor-protest (1)sampoor-protest (2)

அவர்களுடனான கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன்,

“முன்னைய அரசு சம்பூர் பிரதேசத்தை முழுமையாக கபளீகரம் செய்திருந்தது, சம்பூரை விடுவிப்போம் என வாக்குறுதி கொடுத்தும் அவர்கள் விடுவிக்கவில்லை.

ஆட்சி மாற்றத்தின் காரணமாக அண்மையில் சம்பூர் மக்களுக்கு சொந்தமான 818, ஏக்கர் காணிகள் எந்த நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்பட்டன.

இந்தமாத முடிவுக்குள் சம்பூரில் உள்ள சிறிலங்கா கடற்படை முகாம் அமைந்திருக்கும் 237 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது நல்லதொரு நடவடிக்கை என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சீனா போன்ற நாடுகள் இந்தப் பகுதியில் நுழைவதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. சிறிலங்கா அரசு உடன்பட்டால் அவர்கள் மறுநாளே உள்நுழைந்து விடுவார்கள்.

அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் விளைவுகளையும் நான் அறிவேன். மக்களாகிய உங்கள் கோரிக்கையை தார்மீகமாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்து பேசி நல்லதொரு முடிவை நோக்கி நகருவோம்” என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *