மேலும்

இணையத்தளங்கள் பதிவு – மகிந்த அரசைப் பின்பற்றுவதாகக் கூறுகிறது மைத்திரி அரசு

karunarathna paranawithanaஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யுமாறு கோரவில்லை என்று சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சு நாளிதழ்களில் நேற்று பிரசுரித்திருந்த விளம்பரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

“ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யுமாறு கோரவில்லை. இணைய ஊடகவியலாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் நோக்கிலேயே செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யுமாறு அரசாங்கம் கோரியிருக்கிறது.

ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படும் செய்தி இணையத்தளங்களின் ஊடகவியலாளர்களுக்கு அமைச்சின் ஊடக அடையாள அட்டை வழங்க முடியும். அவர்களும் இடையூறு இன்றி செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியும்.

இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வழங்கி வருகின்றன. இது செய்தி இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

செய்தி இணையங்கள் பொறுப்பு வாய்ந்தவையாக செயற்படுவதுடன், உரிய அங்கீகாரத்துடன் செயற்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். அமைச்சின்கீழ் பதிவுசெய்வதன் ஊடாக பொறுப்புவாய்ந்த ஊடகங்களாக அவை மாற்றமடையும்.

செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்காக சிறப்பு சட்டங்கள் எதுவும் இல்லை.

இணையத்தளங்களைப் பதிவுசெய்யும் செயற்பாடு 2012ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு. இந்த நடைமுறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவதற்கே அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *