மேலும்

லெப்.யோசித ராஜபக்ச மீது இராணுவ நீதிமன்ற விசாரணை?

Yoshitha-Rajapaksaசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, லெப்.யோசித ராஜபக்ச, சிறிலங்கா கடற்படைச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவுளள்ளதாக  பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடற்படைச் சட்டங்களை மீறி, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளின் பேரிலேயே, லெப்.யோசித ராஜபக்ச இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

யோசித ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை ஒரு முழுமையான உள்ளக விசாரணையை நடத்தியுள்ளது. இந்த விசாரணை அறிக்கை, சிறிலங்கா அதிபர் செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், சிறிலங்கா அதிபரின் அறிவுறுத்தலுக்காக கடற்படை காத்திருக்கிறது.

எவ்வாறாயினும், இந்த விசாரணையின் கண்டறிவுகளின் அடிப்படையில், இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு சிறிலங்கா அதிபர், உத்தரவிடுவார் என்று நம்பப்படுகிறது.

தாம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கடற்படைச் சட்டங்களை மீறியது தொடர்பாக யோசித ராஜபக்சவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக, விசாரணையுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடற்படை அதிகாரியாக இருந்து கொண்டே, சிஎஸ்என் தொலைக்காட்சியின் தலைவராகவும், யோசித ராஜபக்ச பதவி வகித்திருக்கிறார். ஒரு இராணுவ அதிகாரி இவ்வாறு பதவியை வகிப்பது  இராணுவச் சட்டத்துக்கு எதிரானது.

கடற்படைத் தலைமையகத்தின் எழுத்துமூல அனுமதியைப் பெறாமல், பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாக இவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புரிமை கடற்படைத் தளபதி ஒருவருக்குக் கூடக் கிடையாது. இவர் உயரதிகாரிகளின் அனுமதியைப் பெறாமல் எவ்வாறு 30 தடவைகளுக்கு மேல் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன் யோசித ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக 22 மில்லியன் ரூபா அரசாங்க பணம் செலவிடப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இராணுவ நீதிமன்ற விசாரணையில் லெப்.யோசித ராஜபக்ச குற்றவாளியாக காணப்பட்டால், இராணுவ சட்டங்களுக்கு அமைவாக கடுமையான தண்டனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *