மேலும்

பேரம் பேசலுக்கான பசிலின் புதிய அரசியல் நிகழ்ச்சிநிரல் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

mahinda-rajapaksa-basil-rajapaksaஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் மைத்திரி இணைய வேண்டும் என்கின்ற விடயத்தை தற்போது மைத்திரிக்கு எஸ்.பி எடுத்துக் கூறிவருகிறார். பசிலின் மறைமுக மூலோபாயத்தை எஸ்.பி செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் திடீரென ஊடகங்களில் தோன்றி ஊடகங்களுக்கு நேர்காணலை வழங்கியுள்ளார். இந்த நேர்காணலில் புதிய அரசியற் கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக பசில் வலியுறுத்தியுள்ளார்.

இவரது எதிர்காலத் திட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், பசில் ராஜபக்சவும் அவரது சகோதரரான மகிந்தவும் கடந்த வாரம் குருநாகல மாவட்டத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி அரசாங்க உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், இவ்விரு சகோதரர்களும் அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டமை இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் மகிந்த மற்றும் மைத்திரியை ஒன்றிணைப்பதற்கான கலந்துரையாடலை பசில் மேற்கொண்டிருந்தார்.

அதிபர் தேர்தலில் மகிந்த தோல்வியுற்ற பின்னர் பசில் அரசியலிலிருந்து விலகி அமெரிக்காவிற்குப் பயணமாகினார். இவர் மீண்டும் சிறிலங்காவிற்குத் திரும்பிய பின்னர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். பசில் ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், சிறிது காலமாக அமைதி வாழ்வைக் கடைப்பிடிப்பதெனத் தீர்மானித்தார்.

இவ்வாறு சிறிது காலம் அமைதியாக இருந்த பசில் ராஜபக்ச, மகிந்த மற்றும் மைத்திரி ஆகிய இருவரையும் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஒன்றிணைப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போது மீண்டும் அரசியலில் தலைதூக்கினார்.

வேறு சிலரின் உதவியுடன் மைத்திரி மற்றும் மகிந்தவை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை எஸ்.பி.திஸநாயக்க மேற்கொண்டிருந்தார் என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மகிந்தவுடன் ஒன்றிணையுமாறு மைத்திரிக்கு அழுத்தம் கொடுத்தவர்களுள் எஸ்.பியும் ஒருவராவார்.

மகிந்தவைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைக் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறச் செய்யவேண்டும் எனவும் ஆனால் அதேவேளையில் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்கக் கூடாது என மைத்திரியிடம் அழுத்தமாகத் தெரிவித்தவரே எஸ்.பி.திஸநாயக்க ஆவார்.

மகிந்தவிற்குப் பதிலாக வேறொருவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டியதன் தேவையை மைத்திரியிடம் வலியுறுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை எஸ்.பி பிரயோகித்தார். இறுதியில், எஸ்.பியின் மூலோபாய நகர்வானது அவருக்கு எதிராகத் திரும்பியது.

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டணி தோல்வியுற்றதுடன் எஸ்.பியும் அமைச்சரவை உறுப்புரிமையை இழந்தார். மைத்திரியின் விசுவாசிகள் பலரும் இத்தேர்தலில் தோல்வியுற்றனர்.

ஐ.ம.சு.கூ தோல்வியைச் சந்தித்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மகிந்தவின் பலம் மேலும் அதிகரித்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர்களாக பதவி வகித்த அனுரா பிரியதர்சன யாப்பா, சுசில் பிறேமஜயந்த மற்றும் எஸ்.பி.திஸநாயக்க ஆகியோர் தனது நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவே செயற்படுவதாக மைத்திரி நம்பிய போதிலும், இந்த மூவரும் பசில் ராஜபக்சவின் வழிகாட்டலிலேயே செயற்பட்டமை பின்னர் தெரியவந்தது.

இந்த மூவரும் தன்னை ஏமாற்றியதை அறிந்து கொண்ட மைத்திரி இவர்களை அவர்களது பதவிகளிலிருந்து விலக்கினார். விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய போதிலும், பசிலே மைத்திரியை அச்சுறுத்துவதற்கான ஒரு கருவியாக மகிந்தவைத் தேர்தலில் நிறுத்தியவர் ஆவார்.

இதே ஆட்டத்தை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்களிலும் பிரயோகிப்பதற்கான முயற்சிகளை பசில் மேற்கொள்வது போல் தெரிகிறது. பெரும்பாலான உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பசிலின் விசுவாசிகளாவர். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்சவால் அரசாங்க ஒப்பந்தங்கள், உந்துருளிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு இவர்கள் பசிலின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டனர்.

அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் மகிந்தவை ஆட்சிப்பீடத்தில் அமர வைப்பதற்கான பெரும் பிரயத்தனங்களை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்தனர். மகிந்தவின் கூட்டங்களுக்கு பெருமளவான மக்களை ஒன்றுசேர்ப்பதில் இவர்கள் முன்னின்றனர்.

இந்நிலையில் மைத்திரிக்கு பீதியை ஏற்படுத்துவதற்காக புதியதொரு அரசியற் கட்சியை உருவாக்கப் போவதாக பசில் கூறிவருகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலில் மகிந்தவின் கைகளைப் பலப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றத்தின் விசுவாசிகளுக்கு நியமனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் பசில் ஈடுபடுகிறார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் மைத்திரி இணைய வேண்டும் என்கின்ற விடயத்தை தற்போது மைத்திரிக்கு எஸ்.பி எடுத்துக் கூறிவருகிறார். பசிலின் மறைமுக மூலோபாயத்தை எஸ்.பி செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்.

கடந்த காலத்தில் பசிலின் திவிநெகும அமைச்சில் எந்தவொரு ஊழல் மோசடிகளும் இடம்பெறவில்லை என்பதை வலியுறுத்தி எஸ்.பி.திஸநாயக்கவால் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை பசிலுக்கும் எஸ்.பிக்கும் இடையில் எவ்வாறான புரிந்துணர்வு நிலவி வருகிறது என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

எஸ்.பி.திஸநாயக்கவால் திவிநெகும அமைச்சிற்குப் புகழாரம் சூட்டப்பட்ட அறிக்கையை ஊடகங்களில் விளம்பரப்படுத்துமாறு பசில் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார். மைத்திரி சிறிலங்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், சஜித் பிறேமதாசவால் திவிநெகும அமைச்சு பொறுப்பெடுக்கப்பட்ட பின்னர் பசிலின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

திவிநெகும அமைச்சு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை வலியுறுத்தி எஸ்.பியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்கு நன்றி தெரிவித்து பசில் பல்வேறு வார ஊடகங்களில் நேர்காணல்கள் வழங்கியிருந்தார்.

ரணில் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதே எஸ்.பியின் திட்டமாகும். இவர் தனது இலக்கை அடைவதற்காக அதிருப்தியுடன் உள்ள ஐ.தே.க உறுப்பினர்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறார்.

ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுடன் மகிந்தவைப் பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் எஸ்.பி ஈடுபட்டு வருகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு மகிந்த எவ்வளவு முக்கியமானவர் என எஸ்.பி வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு முன்னர், பசிலைப் பயன்படுத்தி மைத்திரி-மகிந்த ஒன்றிணைவிற்கான பாதையை எஸ்.பி உருவாக்கியிருந்தார். அடுத்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மகிந்தவையும் மைத்திரியையும் ஒன்றிணைப்பதற்கான பேச்சுக்களை ஏற்கனவே எஸ்.பி.திஸநாயக்க, பசிலுடன் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார் என்பது வெளிப்படை.

எஸ்.பியின் இந்த முயற்சியானது வெற்றி பெறுமா என்பதை தற்போதே எதிர்வுகூற முடியாது. ஆனால் இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பது உண்மை.

புதிய அரசியற் கட்சிகளை உருவாக்குவதற்காக பசில் எப்போதும் புதிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குகிறார் என்பதும் இவர் அரசியல் ஆட்டங்களை விளையாடுவதற்காக இவற்றை உருவாக்கவில்லை என்பதும் மாறாக ‘அரசியல் பேரம் பேசல்களை’ மேற்கொள்வதற்காக பசில் புதிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை எப்போதும் உருவாக்குகிறார் என்பதும் உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *