மேலும்

வடக்கு முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பிரதமர் அளித்த பதில்

ranilவடக்கில் இருந்து சிறிலங்கா படையினர் படிப்படியாக குறைக்கப்படுவர் என்றும், காலாவதியாகிப் போயுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய தைப்பொங்கல் விழாவில் உரையாற்றிய அவர்,

“தைப்பொங்கல் விழா என்பது யாழ்ப்பாணத்திற்கானதோ அல்லது இந்துக்களுக்கு மட்டுமானதோ அல்லது தமிழ் மக்களுக்கான நிகழ்வோ அல்ல. இது முழு நாட்டுக்கும் பொதுவான தேசிய நிகழ்வாகும்.

நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சூரிய பகவானை தரிசிக்கிறோம். ஆகவே இது ஒரு பொதுவான நிகழ்வு.

தெற்கில் என்னை திட்டுவார்களோ தெரியவில்லை. இருப்பினும் நான் ஒரு விடயத்தை இங்கு கூறுகிறேன். பாற்சோறைவிடவும் பொங்கல் மிகவும் சுவையானது.

புதிய ஆண்டை ஆரம்பிப்பதென்பது தனியே தமிழர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ முக்கியமானதொரு விடயமல்ல.  தாய்லாந்து, மியன்மார், கம்போடியா போன்ற பல நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பூகோளத்தில் மாற்றங்கள் நிகழ்வதைப் போன்று பூகோள அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுகின்றன. அவ்வாறான மாற்றமொன்று நிகழ்ந்து முழு இலங்கைக்கும் சூரியனின் ஒளி கிடைகின்றது.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நாட்டவர்கள் அனைவருக்கும் பிரகாசமான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதன்காரணமாகவே இந்த விழாவைக் கொண்டாட முடிந்துள்ளது.

இந்த நாட்டில் சூரிய வெளிச்சமின்றி வாழ்ந்தவர்களுக்கு தற்போது பொறுமையற்ற தன்மையொன்று ஏற்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வாக இருக்கலாம், தொழில் வாய்ப்பாக இருக்கலாம், அபிவிருத்தியாக இருக்கலாம் அனைத்திலும் பொறுமையற்ற நிலைமைகளே காணப்படுகின்றன.

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு இவ்வாறான பொறுமையற்ற தன்மை பலருக்கு காணப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் இந்த விடயம் தொடர்பாக சில விடயங்களை பேசியிருந்தார். அதன் அடிப்படையில் அவ்விடயங்கள் தொடர்பாக நான் சில கருத்துக்களை முன்வைக்கலாமென நினைக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் 4600 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன. அதனை விடவும் சொற்ப அளவிலான நிலங்களே மக்கள் பாவனையின்றி காணப்படுகின்றன.

பொதுமக்களுக்கு தேவையான காணிகள், அபிவிருத்திக்கு தேவையான காணிகள், இராணுவத்திற்கு தேவையான காணிகள் ஆகிய தரவுகளை சேகரித்துக் கொண்டு நாம் அனைவரும் கலந்துரையாடி கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனக் கூறியிருந்தேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடக்கு ,கிழக்கு முதல்வர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினையை நீண்டகாலத்திற்கு காலங்கடத்திக் கொண்டு செல்ல முடியாது. 2020ஆம் ஆண்டில் இந்த நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றபோது, அதிகளவு வருமானம் பெறப்படுகின்றபோது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையான பயனை வழங்கவேண்டும்.

தற்போதும் சிங்கள மொழியிலேயே கடிதங்கள் அனுப்பப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் கூறியிருந்தார். அது தவறானது. தமிழ் மொழியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

தமிழ் மொழிமூலமாக கடமையாற்றுபவர்கள் தொடர்பில் குறைபாடுகள் இங்கு காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்யவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன.

கொழும்பு திரும்பியதுடன் அதுதொடர்பிலான தாமதங்களுக்கான காரணங்களை கண்டறிந்து செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளேன்.

குறிப்பாக இவ்வாறான குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முதற்கட்டமாக பயிற்றப்பட்ட 500 பேர் நியமிப்படவுள்ளனர். அதன் பின்னரும் தேவைகள் காணப்படுமாயின் மேலதிகமாக நியமிப்பதற்கு தயாராவுள்ளோம்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், சாகல ரட்நாயக்க, விஜயதாச ராஜபக்ச மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடியுள்ளேன்.

அதில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அது தொடர்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்ததன் பின்னர் உத்தியோக பூர்வமான அறிவிப்பை வெளியிடுவோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது காலாவதியாகி விட்டது. காலாவதியான பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்கவுள்ளோம். இங்கு பயங்கரவாதமில்லை.

அனைத்துலக  பயங்கரவாதத்தை தடுப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டதான புதிய சட்டங்களை உள்வாங்குதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அவ்வேலைத்திட்டம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பாக நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். எமது பட்டியலில் காணப்படாதவர்களுக்கு என்ன நடந்ததென்று எனக்கு தெரியாதுள்ளது.

மிகவும் கவலையுடன் ஒரு விடயத்தைக் கூறுகிறேன். அவ்வாறானவர்களில் பெருமளவானோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றே கருதப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறான பிரச்சினை தெற்கிலும் காணப்பட்டது. முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆலோசனையின் கீழ் அவ்வாறானவர்களுக்கு இழப்பீடுகள், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அது மட்டுமன்றி பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான மத்திய நிலையம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பிரதேசத்தின் மாணவர்களின் கல்வி தொடர்பாக கவனமெடுக்கப்பட வேண்டியுள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாணசபையுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்காவின் சட்டங்களுக்கு உட்பட இராணுவத்தினரே இருக்கிறார்கள்.

1990ஆம் ஆண்டுடன் இந்திய அமைதிப்படையினர் வெளியேறி விட்டார்கள். ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலை புலிகளும் முடக்கப்பட்டு விட்டனர்.

2002ஆம் ஆண்டு கைச்சாத்தான சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் நிலம், கடல், வான் பகுதிகளை பாதுகாப்பதற்கான உரிமையும் கடமையும் இராணுவத்தினருக்கு இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கூட அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

வடக்கில் காணப்படும் இராணுவ பிரசன்னம் தொடர்பாக இராணுவத் தளபதியுடன் நான் பேச்சு நடத்தியுள்ளேன். வடமாகாணத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் முன்னேற்றமடைந்தால், படிப்படியாக இங்குள்ள இராணுவத்தினரை வேறு இடங்களுக்கு அனுப்ப முடியுமெனக் கூறியுள்ளார்.

இராணுவத்தில் பலர் ஓய்வு பெறவுள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இங்கு ஒரு இரகசியத்தை உங்களுக்கு கூறுகிறேன். நாம் மூன்று படைப்பிரிவினர்களுக்கு போர்ப்யிற்சிகளை வழங்கி வருகிறோம்.

ஆபிரிக்காவின் மாலி போன்ற நாடுகளுக்கு போருக்கு அனுப்புவதற்கும், ஐக்கிய நாடுகள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் வேறு நாடுகளில் செயற்படுவதற்காகவுமே நாம் அப்பயிற்சிகளை வழங்குகிறோம்.

மீனவர்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் வரையில் கடற்படையில் குறைப்புக்களை மேற்கொள்ள முடியாது.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும், நிலைநாட்டும் பொறுப்பு காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு மேலும் 500 தமிழ் மொழி பேசுபவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இலங்கை முப்படையினரும், காவல்துறையும் முழுமையாக இலங்கையர்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போது காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

குற்றமிழைத்தவர்கள் இராணுவத்தினராக இருக்கலாம் , புலிகளாக இருக்கலாம் அவர்கள் இனங்காணப்படவேண்டும்.

அதற்கான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பொறிமுறையை அமைப்பதற்காக ஜப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

சர்வமத தலைவர்களை உள்ளடக்கிய கருணை சபையொன்றையும் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அதேநேரம் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான பொறிமுறையொன்றையும் உருவாக்குவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *